தேர்தல் ஆணையம்

மக்களவை மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அறிவிப்பு -2024

Posted On: 16 MAR 2024 5:54PM by PIB Chennai

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.  அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மேலும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பதவிக்காலமும் நிறைவடைவதால் அவற்றிற்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தியது.

4 மாநில சட்டப் பேரவைகள் மற்றும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. 

சண்டிகர், சென்னை, குவஹாத்தி, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் 5 மண்டல கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியது.  இதில் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஆணையம் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளது. இந்த பயணத்தின்போது, அரசியல் கட்சிகள், அமலாக்க முகமைகள், அனைத்து மாவட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆணையம் கலந்துரையாடியது.

அனைத்து மாநிலங்களிலும் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்க முடியும்.

18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 01.01.2024 அன்று நிலவரப்படி நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 968.8 மில்லியன் ஆகும்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இது மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பொருந்தும்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும், குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிறைவாக வாக்குச் சாவடி மையங்களுக்கு வருகை தந்து, முறையாகl வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை வலுப்படுத்துமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2015227

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2015254) Visitor Counter : 106