பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் உள்ள பாரத் டெக்ஸ் 2024-இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 FEB 2024 4:01PM by PIB Chennai
எனது அமைச்சரவை சகாக்களான பியூஷ் கோயல் அவர்களே, தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மூத்த தூதர்களே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளே, ஆடை மற்றும் ஜவுளி உலகின் கூட்டாளிகளே, இளம் தொழில்முனைவோர்களே, தாய்மார்களே, அன்பர்களே! பாரத மண்டபத்தில் நடந்த பாரத டெக்ஸில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாரதத்தின் இரண்டு பெரிய கண்காட்சி மையங்களான பாரத மண்டபம் மற்றும் யசோபூமி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடப்பதால் இது சிறப்பு வாய்ந்தது. 3,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள்... 100 நாடுகளைச் சேர்ந்த 3,000 வாங்குபவர்கள்... 40,000 க்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள்... இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
நண்பர்களே,
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற பாரதம் உறுதி பூண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் 'வளர்ச்சி அடைந்த பாரதத்தின்' நான்கு முக்கிய தூண்கள் ஆவர். பாரதத்தின் ஜவுளித் துறை இந்த நான்கு தூண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரிக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஜவுளித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க நாங்கள் விரிவாக பணியாற்றி வருகிறோம். பாரம்பரியம், தொழில்நுட்பம், திறமை மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இன்றைய நவநாகரிகத்தின் தேவைகளுக்கு ஏற்ப நமது பாரம்பரிய நடைமுறைகளை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதையும், வடிவமைப்புகளுக்கு எவ்வாறு புத்துயிர் ஊட்டலாம் என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
எதிர்காலத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏழு பி.எம். மித்ரா (பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள்) நிறுவப்பட்டு வருகின்றன. உங்களைப் போன்ற தோழர்களுக்கு இந்தத் திட்டம் எவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். மதிப்புச் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட முழு சூழலியலையும் ஒரே இடத்தில் தயாரிப்பதே இதன் யோசனையாகும், அங்கு நவீன, ஒருங்கிணைந்த மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இது, செயல்பாடுகளின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தளவாட செலவுகளையும் குறைக்கும்.
நண்பர்களே,
ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். இது பண்ணைகளில் இருந்து எம்.எஸ்.எம்.இ.களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது மற்றும் ஏற்றுமதி செய்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் கணிசமான பகுதி மற்றும் பெண்கள் இந்த முழு துறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆடை தயாரிக்கும் ஒவ்வொரு 10 தோழர்களில் 7 பேர் பெண்கள், அது கைத்தறியில் இன்னும் அதிகம். ஜவுளி மட்டுமின்றி, நமது பாரதத்தின் பெண்களுக்கு கதர் துணிகள் அதிகாரம் அளித்துள்ளன. அரசு ஒரு கிரியா ஊக்கியாக உள்ளது. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்ற இது செயல்படும். மிகவும் நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
(Release ID: 2011166)
Visitor Counter : 75
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Malayalam