பிரதமர் அலுவலகம்

ரூ.41,000 கோடி மதிப்புள்ள 2000த்துக்கும் மேற்பட்ட ரயில்வே கட்டமைப்பு திட்டங்களுக்கு பிப்ரவரி 26 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்


ரூ.19,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமிர்த பாரத நிலையம் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

மறுசீரமைக்கப்பட்ட கோமதி நகர் ரயில் நிலையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சுமார் ரூ.21,520 கோடி செலவில் நாடு முழுவதும் 1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 25 FEB 2024 3:29PM by PIB Chennai

பிப்ரவரி 26 அன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி  மூலம் ரூ.41,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த நிலையங்கள், ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

இந்த நிலையங்கள் நகரின் இருபுறமும் ஒருங்கிணைக்கும் 'நகர மையங்களாக' செயல்படும். மேற்கூரை பிளாசா, அழகிய இயற்கையை ரசித்தல், இடைநிலை இணைப்பு, மேம்படுத்தப்பட்ட நவீன முகப்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, விற்பனை நிலையங்கள், உணவு மையங்கள் போன்ற நவீன பயணிகள் வசதிகளை கொண்டிருக்கும். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாகவும்  மாற்றியமைக்கப்படும். இந்த நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றால் ஈர்க்கப்படும்.

மேலும், சுமார் 385 கோடி ரூபாய் செலவில் மறுமேம்பாடு செய்யப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் கோமதி நகர் ரயில் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். அதிகரித்து வரும் எதிர்காலப் பயணிகளின் வருகையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு வசதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.

இது நகரத்தின் இருபுறத்தையும் ஒருங்கிணைக்கிறது. முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த நிலையத்தில் ஏர் கான்கோர்ஸ், நெரிசல் இல்லாத சுழற்சி, உணவகங்கள் மற்றும் மேல் மற்றும் கீழ் அடித்தளத்தில் போதுமான வாகன நிறுத்துமிடம் போன்ற நவீன பயணிகள் வசதிகள் உள்ளன.

1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.21,520 கோடியாகும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.

 

*******

ANU/PKV/BS/DL



(Release ID: 2008847) Visitor Counter : 102