பிரதமர் அலுவலகம்
வாரணாசியில் துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் உரை
துறவி ரவிதாசின் புதிய சிலையைத் திறந்து வைத்தார்
துறவி ரவிதாஸ் பிறந்த இடத்தைச் சுற்றியுள்ள வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
துறவி ரவிதாஸ் அருங்காட்சியகம், பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
"இந்தியாவுக்கு ஒரு வரலாறு உள்ளது, நாட்டிற்கு எப்போது தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் சில துறவிகள், முனிவர்கள் அல்லது சிறந்த ஆளுமைகள் இந்தியாவில் பிறக்கின்றனர்."
"துறவி ரவிதாஸ் பக்தி இயக்கத்தின் மகத்தான துறவி. பலவீனமான மற்றும் பிளவுபட்ட இந்தியாவுக்கு அது புதிய சக்தியை அளித்தது"
"துறவி ரவிதாஸ் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், சமூகப் பிளவைக் குறைக்கவும் பாடுபட்டார்"
"ரவிதாஸ் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரும் ரவிதாஸூக்குச் சொந்தமானவர்கள்."
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி, துறவி ரவிதாசின் போதனைகள் மற்றும் கோட்பாடுகளை அரசு முன்னெடுத்துச் செல்கிறது"
"நாம் சாதியத்தின் எதிர்மறை மனப்பான்மையைத் தவிர்த்து, துறவி ரவிதாசின் ந
Posted On:
23 FEB 2024 12:47PM by PIB Chennai
வாரணாசியில் இன்று நடைபெற்ற துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில், ரவிதாஸ் பூங்காவிற்கு அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையைப் பிரதமர் திறந்து வைத்தார். சுமார் ரூ.32 கோடி மதிப்புள்ள துறவி ரவிதாஸ் கோவிலைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகத்திற்கும் மற்றும் சுமார் ரூ.62 கோடி மதிப்பிலான பூங்காவை அழகுபடுத்தும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், துறவி ரவிதாசின் 647-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த இடத்திற்கு அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்றதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பஞ்சாபிலிருந்து காசிக்கு வருபவர்களின் உணர்வைப் பாராட்டியதோடு, காசி ஒரு குட்டி பஞ்சாப் போல தோற்றமளிக்கத் தொடங்கியுள்ளது என்றார். துறவி ரவிதாஸ் பிறந்த இடத்திற்கு மீண்டும் வருகை தந்து அவரது சிந்தனைகளையும், தீர்மானத்தையும் முன்னெடுத்துச் சென்றதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
காசியின் பிரதிநிதி என்ற முறையில், துறவி ரவிதாசின் சீடர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். கோயில் பகுதியை மேம்படுத்துதல், அணுகு சாலைகள் அமைத்தல், வழிபாட்டுக்கான ஏற்பாடுகள், பிரசாதங்கள் உள்ளிட்ட துறவி ரவிதாசின் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கோவிலை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றிப் பிரதமர் குறிப்பிட்டார். துறவி ரவிதாசின் புதிய சிலை குறித்தும் பேசிய பிரதமர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று மாபெரும் துறவியும், சமூக சீர்திருத்தவாதியுமான கட்கே பாபாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்கு அவரது பங்களிப்பை எடுத்துரைத்தார். பாபா சாஹேப் அம்பேத்கர் காட்கே பாபாவின் பணிகளின் மிகப்பெரிய அபிமானியாக இருந்தார் என்றும், கட்கே பாபாவும் பாபா சாஹேப்பால் ஈர்க்கப்பட்டார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கட்கே பாபாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
துறவி ரவிதாசின் போதனைகள் எப்போதும் தன்னை வழிநடத்தி வந்ததாகக் கூறிய பிரதமர், துறவி ரவிதாசின் கொள்கைகளுக்கு சேவை செய்யும் நிலையில் இருப்பதற்கு நன்றி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் துறவி ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
"தேவைப்படும் நேரத்தில் ஒரு துறவி, முனிவர் அல்லது சிறந்த ஆளுமை வடிவில் ஒரு மீட்பர் வெளிப்படுவது இந்தியாவின் வரலாறு" என்று சுட்டிக்காட்டிய பிரதமர், பிளவுபட்ட இந்தியாவுக்கு புத்துயிர் அளித்த பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக துறவி ரவிதாஸ் இருந்தார் என்பதை எடுத்துரைத்தார். ரவிதாஸ், சமூகத்தில் சுதந்திரத்திற்கு அர்த்தம் அளித்ததுடன், சமூக இடைவெளியையும் குறைத்தார் என்றும் அவர் கூறினார். தீண்டாமை, வர்க்கவாதம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக அவர் குரல் எழுப்பினார். "கருத்து மற்றும் மதத்தின் சித்தாந்தங்களுடன் துறவி ரவிதாசை முடிச்சுப் போட முடியாது", " ரவிதாஸ் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரும் ரவிதாசுக்குச் சொந்தமானவர்கள்" என்று அவர் கூறினார்.
வைணவ சமூகத்தினர் துறவி ரவிதாசை ஜகத்குரு ராமானந்தரின் சீடராகத் தங்கள் குருவாகக் கருதுவதாகவும், சீக்கிய சமூகத்தினர் அவரை மிகுந்த போற்றுதலுடன் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கங்கை மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும், வாரணாசியைச் சேர்ந்தவர்களும் துறவி ரவிதாசிடமிருந்து உத்வேகம் பெறுகிறார்கள் என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி, துறவி ரவிதாசின் போதனைகளையும், கோட்பாடுகளையும் தற்போதைய அரசு முன்னெடுத்துச் செல்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சமத்துவம் மற்றும் ஒருங்கிணைப்புக் குறித்த துறவி ரவிதாசின் போதனைகளை விரிவாக விவரித்த பிரதமர், பின்தங்கிய சமூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சமத்துவம் வருகிறது என்று கூறினார். வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரசின் முன்முயற்சிகளின் பலன்களை எடுத்துச் செல்வதற்கான அரசின் முயற்சிகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். 'உலகின் மிகப்பெரிய நலத்திட்டங்கள்' என்று குறிப்பிட்ட பிரதமர், 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதைப் பட்டியலிட்டார். "இந்த அளவிலான திட்டம் உலகின் எந்த நாட்டிலும் இல்லை" என்று பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டதால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பெண்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். இதேபோல், ஜல் ஜீவன் இயக்கம் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 11 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் நீரை எடுத்துச் சென்றுள்ளது என்றார்.
மேலும் ஏழைகள் ஆயுஷ்மான் அட்டையுடன் பாதுகாப்பு உணர்வை அனுபவித்து வருகின்றனர். ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலம் பெருமளவில் நிதி உள்ளடக்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் அவர் பேசினார். நேரடி பணப்பலன் பரிமாற்றம் பெரும் நன்மைகளை விளைவித்துள்ளது, அவற்றில் ஒன்று வேளாண் ஊக்கநிதியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்வதும் ஒன்றாகும். இது பல தலித் விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. பயிர் காப்பீட்டுத் திட்டமும் இந்தப் பிரிவினருக்கு உதவுகிறது என்று அவர் கூறினார். 2014 முதல் உதவித்தொகை பெறும் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும், பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் உதவியைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பட்டியலினத்தவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்கான அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், அதுவே இன்று உலகில் இந்தியாவின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். துறவிகளின் வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதையை ஒளிரச் செய்வதாகவும், நம்மை எச்சரிப்பதாகவும் அவர் கூறினார். ரவிதாசை மேற்கோள் காட்டிய பிரதமர், பெரும்பாலான மக்கள் சாதி மற்றும் இன வேறுபாடுகளில் சிக்கித் தவிப்பதாகவும், சாதியம் என்ற நோய் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் விளக்கினார். சாதியின் பெயரால் யாரையாவது தூண்டினால், அதுவும் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
பட்டியலின மக்களின் நலனுக்கு எதிரான சக்திகளுக்கு பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். அத்தகையவர்கள் சாதி அரசியல் என்ற போர்வையில் குடும்பம் மற்றும் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று அவர் கூறினார். பட்டியலின மக்களின் எழுச்சியையும், சோதனைகளையும் இத்தகைய சக்திகள் பாராட்டுவதை வாரிசு அரசியல் தடுக்கிறது என்று அவர் கூறினார். "நாம் சாதி வெறியின் எதிர்மறை மனப்பான்மையைத் தவிர்த்து, ரவிதாசின் நேர்மறையான போதனைகளைப் பின்பற்ற வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.
ரவிதாசை மேற்கோள் காட்டிய பிரதமர், ஒருவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்று விளக்கினார். ஏனெனில், கர்மா ஒரு மதம் என்றும், தன்னலமின்றி பணி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் விளக்கினார். துறவி ரவிதாசின் இந்தப் போதனை இன்று நாடு முழுமைக்குமானது என்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ள விடுதலையின் அமிர்தகாலத்தை இந்தியா கடந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 140 கோடி மக்களின் பங்களிப்புடன் மட்டுமே ஏழைகளுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதற்கான இயக்கங்களை விரிவுபடுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். "நாம் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிளவுபடுத்தும் கருத்துக்களில் இருந்து விலகி நாட்டின் ஒற்றுமையை நாம் வலுப்படுத்த வேண்டும்" என்று கூறிய பிரதமர், துறவி ரவிதாசின் அருளால் குடிமக்களின் கனவுகள் நனவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், துறவி குரு ரவிதாஸ் ஜன்மஸ்தான் ஆலய அறக்கட்டளையின் தலைவர் துறவி நிரஞ்சன் தாஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
ANU/PKV/BS/RS/KV
(Release ID: 2008399)
Visitor Counter : 105
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam