பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


ராஜஸ்தானில் ரூ.17,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்

ராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

ரூ.2300 கோடி மதிப்பிலான எட்டு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
'காதிபுரா ரயில் நிலையத்தை' நாட்டுக்கு அர்ப்பணித்தார்

சுமார் ரூ.5,300 கோடி மதிப்பிலான சூரியசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

ரூ.2,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான மின் பகிர்மானத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், சுமார் ரூ.2,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

ஜோத்பூரில் இந்தியன் ஆயிலின் எல்பிஜி நிரப்புதல் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வளர்ச்சியடைந்த ராஜஸ்தானுக்கு முக்கியப் பங்கு உள்ளது"

"கடந்த காலத்தின் விரக்தியை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் முன்னேற இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது"

"வ

Posted On: 16 FEB 2024 12:15PM by PIB Chennai

"வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் 17,000 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் அனைத்துத் தொகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' திட்டத்தில் இணைந்துள்ளதைக் குறிப்பிட்டு, அவர்கள் வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தார். அனைத்துப் பயனாளிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்திய ராஜஸ்தான் முதலமைச்சரை அவர் பாராட்டினார். ராஜஸ்தான் மக்களின் நற்பண்புகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரனின் வரவேற்பு நிகழ்வை நினைவுகூர்ந்தார். அதன் தாக்கம் இந்தியா முழுவதும் மட்டுமல்ல, ஃபிரான்சிலும் எதிரொலித்தது என்றார். ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலின் போது அந்த மாநிலத்திற்கு சென்றபோது மக்கள் தமக்கு அளித்த ஆசிகளையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அதே நேரத்தில், இரட்டை என்ஜின் அரசை அமைப்பதற்கு வழிவகுக்கும் 'மோடியின் உத்தரவாதம்' மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். சாலைகள், ரயில்வே, சூரிய சக்தி, மின்பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகிய துறைகளில் இன்று ரூ.17,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

"இதுதான் தருணமாக இருக்கிறது- இதுதான் சரியான தருணமாக இருக்கிறது" என்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து தாம் விடுத்த அழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போதைய காலம் ஒரு பொற்காலம் என்று குறிப்பிட்டதுடன், முந்தைய தசாப்தங்களில் இருந்த விரக்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இப்போது இந்தியா முழு நம்பிக்கையுடன் முன்னேற முடியும் என்று கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன் ஊழல்கள், பாதுகாப்பின்மை மற்றும் பயங்கரவாதம் பற்றி பேசப்பட்டதற்கு மாறாக, இப்போது நாம் வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் என்ற இலக்குகளில் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார். "இன்று நாங்கள் பெரிய தீர்மானங்களை எடுத்து வருகிறோம், பெரிய கனவுகளைக் காண்கிறோம், அவற்றை அடைய நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். "வளர்ச்சியடைந்த பாரதம்” பற்றி நான் பேசும் போது, அது வெறும் வார்த்தை அல்லது உணர்ச்சி அல்ல. ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் வளமாக்குவதற்கான இயக்கம்" என்று அவர் மேலும் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது வறுமையை ஒழித்து, தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டில் நவீன வசதிகளை உருவாக்குவதற்கான இயக்கம் என்றும் அவர் கூறினார். நேற்று தனது வெளிநாட்டுப் பயணத்தில் உலகத் தலைவர்களுடனான தனது உரையாடல்களை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியா பெரியதாகக் கனவு காண முடியும் மற்றும் அந்தக் கனவுகளை அடைய முடியும் என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைத்தார்.

"வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் வளர்ச்சியடைந்த பாரத்திற்கு இன்றியமையாதது" என்று குறிப்பிட்ட பிரதமர், ரயில்வே, சாலை, மின்சாரம், நீர் போன்ற அத்தியாவசிய சேவைத் துறைகளின் விரைவான வளர்ச்சியின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற துறைகளின் வளர்ச்சி விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், தொழில்கள், சுற்றுலா ஆகியவற்றிற்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும், அதே நேரத்தில் மாநிலத்திற்குப் புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சாதனை அளவாக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது முந்தைய எந்த அரசையும் விட 6 மடங்கு அதிகம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த செலவினம் சிமெண்ட், கற்கள் மற்றும் பீங்கான் தொழில்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரகச் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று ராஜஸ்தான் மாநிலம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் வரையிலான கடலோரப் பகுதிகளுடன் அகன்ற நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். இன்றைய திட்டங்கள் கோட்டா, உதய்பூர், டோங்க், சவாய் மாதோபூர், பூண்டி, அஜ்மீர், பில்வாரா, சித்தோர்கர் ஆகிய நகரங்களில் இணைப்பை மேம்படுத்தும். இந்த சாலைகள் தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்யும்.

இன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ரயில்வே மின்மயமாக்கல், புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் குறித்தும் பிரதமர் பேசினார்.

மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், கூடுதல் மின்சாரத்தை விற்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கும் அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பிரதமரின் சூர்யோதயத் திட்டம் அல்லது இலவச மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டதை திரு மோடி நினைவுகூர்ந்தார். இதில் 300 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும். ஆரம்பத்தில் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்றும், திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.75,000 கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்க சமூகம் இதன் மூலம் அதிகம் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கடன்களை எளிதாக வழங்கவும் வங்கிகள் உதவும் என்று அவர் மேலும் கூறினார். "ராஜஸ்தானில், 5 லட்சம் வீடுகளில் சூரிய ஒளி தகடுகளைப் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது" என்று கூறிய திரு மோடி, ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரின் செலவினங்களைக் குறைப்பதில் இரட்டை என்ஜின் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் என்ற நான்கு

பிரிவுகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். "இந்த 4 பெரிய பிரிவினருக்கு அதிகாரம் அளிக்க, மோடி அளித்த உத்தரவாதங்களை இரட்டை என்ஜின் அரசு நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் கூறினார். ராஜஸ்தான் புதிய அரசின் முதல் பட்ஜெட்டில் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் முன்மொழியப் பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்காக எஸ்.ஐ.டி புலனாய்வுக் குழு அமைத்ததற்காக புதிய மாநில அரசையும் அவர் பாராட்டினார். வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கடுமையான புதிய மத்திய சட்டம் குறித்துப் பேசிய அவர், இத்தகையை முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இது செயல்படும் என்றார்.

ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.450-க்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான மாநில அரசின் உத்தரவாதத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இது ராஜஸ்தானைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்களுக்கு பயனளித்துள்ளது என்றார். முந்தைய ஆட்சியின் போது ஜல் ஜீவன் இயக்கத்தில் நடந்த ஊழல்களை சுட்டிக்காட்டிய திரு மோடி, தற்போது பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதியின் கீழ் தற்போதுள்ள ரூ.6,000 நிதி உதவி என்பது ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மேலும் ரூ.2,000 அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் குறித்து நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். அதனால்தான் மோடியின் உத்தரவாதம் நிறைவேறுவதற்கான உத்தரவாதம் என்று மக்கள் கூறுகிறார்கள்" என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் குறித்து பேசிய பிரதமர், "ஒவ்வொரு பயனாளியும் தங்கள் உரிமைகளை விரைவாகப் பெறுவதை உறுதி செய்வதும், அனைவரும் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதும் மோடியின் முயற்சியாகும்" என்று கூறினார். சுமார் 3 கோடி மக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையும், ஒரு கோடி புதிய ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டதையும், 15 லட்சம் விவசாயிகள் வேளாண் கடன் அட்டைக்குப் பதிவு செய்துள்ளதையும், பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதித் திட்டத்திற்கு சுமார் 6.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்திருப்பதையும் ராஜஸ்தானைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார். உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்புக்கு சுமார் 8 லட்சம் மகளிர் பதிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே 2.25 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறினார். ராஜஸ்தானைச் சேர்ந்த 16 லட்சம் பேர் தலா ரூ.2 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நம்பிக்கையற்ற சூழலை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் வெற்றிகளைக் கொண்டாடுவதைத் தவிர்க்கும் சக்திகளைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். வாரிசு அரசியலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார். இதுபோன்ற அரசியல் இளைஞர்களை ஊக்குவிப்பதாக இல்லை என்று அவர் கூறினார். முதல் முறை வாக்காளர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அத்தகைய இளைஞர்கள் "வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குடன் உள்ளனர்" என்று கூறினார். வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் வளர்ச்சியடைந்த பாரதம் ஆகியவற்றின் பார்வை அத்தகைய முதல் முறை வாக்காளர்களுக்கானது.

ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

ராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். தில்லி மும்பை பசுமை வள இணைப்பு அதாவது பாவோன்லி ஜாலாய் சாலை முதல் முய் கிராமம் வரையிலான மூன்று தொகுப்புகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார். ஹர்டோகஞ்ச் கிராமம் முதல் மெஜ் நதி பிரிவு, தக்ளியில் இருந்து ராஜஸ்தான் / மத்தியப் பிரதேச எல்லை வரையிலான பகுதி ஆகிய இந்தப் பிரிவுகள் இப்பகுதியில் விரைவான மற்றும் மேம்பட்ட இணைப்பை வழங்கும். வன உயிரினங்களின் தடையற்ற நடமாட்டத்திற்கு ஏதுவாக விலங்குகள் சுரங்கப்பாதை, விலங்குகள் மேம்பாலம் ஆகிய திட்டங்களும் அடங்கும். மேலும், வன உயிரினங்களுக்கு ஏற்படும் தாக்கத்தினைக் குறைக்கும் பொருட்டு இரைச்சல் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேபாரியில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்தோர்கர் உதய்பூர் நெடுஞ்சாலை பிரிவை இணைக்கும் 6 வழி பசுமை வழி உதய்பூர் புறவழிச்சாலையையும், கயா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் உதய்பூர் ஷாம்லாஜி பிரிவையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த புறவழிச்சாலை உதய்பூர் நகர நெரிசலைக் குறைக்க உதவும். ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, அபு ரோடு மற்றும் டோங்க் மாவட்டங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்தப் பிராந்தியத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், சுமார் ரூ.2300 கோடி மதிப்பிலான ராஜஸ்தானின் எட்டு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ரயில் திட்டங்களில் ஜோத்பூர்-ராய் கா பாக்-மெர்தா சாலை-பிகானீர் பிரிவு (277 கி.மீ) உள்ளிட்ட ரயில் பாதைகளை மின்மயமாக்குவதற்கான பல்வேறு திட்டங்களும் அடங்கும்; ஜோத்பூர்-பலோடி பிரிவு (136 கி.மீ); மற்றும் பிகானேர் - ரத்தன்கர்-சாதுல்பூர்-ரேவாரி பிரிவு (375 கி.மீ). 'கதிபுரா ரயில் நிலையம்' ஆகியவற்றையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில் நிலையம் ஜெய்ப்பூரின் செயற்கைக்கோள் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரயில்கள் புறப்படும் மற்றும் நிறுத்தக்கூடிய 'டெர்மினல் வசதி' பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் அடிக்கல் நாட்டும் ரயில் திட்டங்களில் பகத் கி கோதியில் (ஜோத்பூர்) வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயில்களின் பராமரிப்பு பிரிவு; கதிபுராவில் (ஜெய்ப்பூர்) வந்தே பாரத், எல்.எச்.பி போன்ற அனைத்து வகையான பெட்டிகளையும் பராமரித்தல்; ஹனுமன்கரில் ரயில்களை பராமரிக்க பெட்டி பராமரிப்பு வளாகம் கட்டுதல், பண்டிகுய் முதல் ஆக்ரா கோட்டை ரயில் பாதை வரை இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும். ரயில்வே துறை திட்டங்கள் ரயில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், இணைப்பை மேம்படுத்துதல், சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்தை மிகவும் திறமையாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பிராந்தியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க, ராஜஸ்தானில் சுமார் ரூ.5300 கோடி மதிப்பிலான முக்கியமான சூரிய சக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரில் உள்ள பார்சிங்சார் அனல் மின் நிலையம் அருகே நிறுவப்படவுள்ள 300  மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டமான என்.எல்.சி.ஐ.எல் பர்சிங்சார் சூரிய மின்சக்தி திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உயர் திறன் கொண்டதாக சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பத்துடன் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உருவாக்கப்படவுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் என்எச்பிசி நிறுவனத்தின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியில் உருவாக்கப்பட்ட 300 மெகாவாட் திறன் கொண்ட என்டிபிசி கிரீன் எனர்ஜி நிறுவனம் நோக்ரா சூரிய சக்தி தகடுகள் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சூரிய சக்தி திட்டங்கள் பசுமை சக்தியை உருவாக்கும், கரியமில வாயு உமிழ்வை ஈடுசெய்ய உதவும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ராஜஸ்தானில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின் பகிர்மானத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் உள்ள சூரிய ஆற்றல் மண்டலங்களில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதாகும். இதனால் இந்த மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தியை பயனாளிகளுக்கு அனுப்ப முடியும். 2-வது கட்டம் பகுதி ஏ –யின் கீழ் ராஜஸ்தானில் சூரிய ஆற்றல் மண்டலங்களில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்மாற்றி அமைப்பை வலுப்படுத்தும் திட்டம் (8.1 ஜிகா வாட்); ராஜஸ்தானில் சூரிய சக்தி மண்டலங்களில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின் பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டம் (8.1 ஜிகாவாட்) 2-வது கட்டம், பகுதி-பி1;   மற்றும் பிகானீர், ஃபதேஹ்கர்-II & பத்லா-II ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கான மின் பகிர்மான அமைப்பு ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் இயக்கத் திட்டங்கள் உட்பட சுமார் ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். நாடு முழுவதும் வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் சுத்தமான குடிநீரை வழங்குவதில் பிரதமரின் அர்ப்பணிப்பை இந்தத் திட்டங்கள் குறிக்கின்றன.

ஜோத்பூரில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான தானியங்கி அமைப்புடன் கூடிய எரிவாயு நிரப்பும் ஆலை, வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும், பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்யும்.

ராஜஸ்தானில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது, ராஜஸ்தானின் கட்டமைப்பை மாற்றியமைக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமரின் இடைவிடாத முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது. ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 200 இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களின் லட்சக்கணக்கான பயனாளிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதலமைச்சர், ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

---------------

ANU/SMB/BS/RS/KV

 


(Release ID: 2006632) Visitor Counter : 155