பிரதமர் அலுவலகம்

பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார்

Posted On: 14 FEB 2024 3:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார்.

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்  இடையே விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், குறிப்பாக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் ஆற்றிய முக்கியப் பங்கையும் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையும் அவர்கள் வரவேற்றனர்.

துபாயில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு ஆதரவு அளிப்பதற்காக பிரதமர் திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். வர்த்தகம், சேவைகள் மற்றும் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக துபாய் உருவெடுத்ததில் இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்பை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

துபாயில் இந்திய சமூக மருத்துவமனைக்கு நிலம் வழங்கியதற்காக பிரதமர் திரு ஷேக் முகமது பின் ரஷீத்திற்கு, பிரதமர் பாராட்டு தெரிவித்தார். திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை விரைவில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

-----

(Release ID: 2005895)

ANU/PKV/IR/KPG/KRS



(Release ID: 2005964) Visitor Counter : 87