பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை பிரதமர் சந்தித்தார்

Posted On: 13 FEB 2024 5:33PM by PIB Chennai

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.

இரு தலைவர்களும் தனியே மற்றும் பிரதிநிதிகள்  நிலையிலான பேச்சுகளில் ஈடுபட்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்த அவர்கள், ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகள் குறித்து விவாதித்தனர். வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு, நிதிசார் தொழில்நுட்பம், எரிசக்தி, கட்டமைப்பு, கலாச்சாரம், இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதை அவர்கள் வரவேற்றனர். அத்துடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்

இரு தலைவர்களும் கீழ்க்கண்ட ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர்:

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் முதலீடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான முக்கிய உதவியாக இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மின்சார இணைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: இது எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி வர்த்தகம் உட்பட எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளுக்கு வழிகாண்கிறது.

இந்தியா-மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் குறித்து இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகளுக்கு இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தம்: முந்தைய புரிந்துணர்வு, ஒத்துழைப்பை உருவாக்கி, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒத்துழைப்பை வளர்த்தல்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு துறையில் முதலீட்டு ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப அறிவு, திறன்கள், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவும்.

இரு நாடுகளின் தேசிய ஆவணக் காப்பகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு நெறிமுறை: ஆவணக் காப்பகப் பொருட்களை மீட்டெடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட இந்தத் துறையில் விரிவான இருதரப்பு ஒத்துழைப்பை இந்த நெறிமுறை வடிவமைக்கும்.

பாரம்பரியம், அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: குஜராத்தின் லோதலில் உள்ள கடல்சார் பாரம்பரிய வளாகத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை இது ஊக்குவிக்கும்.

உடனடி பணப் பரிவர்த்தனை தளங்களான யுபிஐ (இந்தியா), எஎஎன்ஐ (யுஎஇ) ஆகியவற்றை இணைப்பதற்கான ஒப்பந்தம்: இது இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமரின் அபுதாபி பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பணம் பரிவர்த்தனை, செய்தி அனுப்பும் முறைகளை ஒன்றிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இது கையெழுத்திடப்பட்டது.

உள்நாட்டு பற்று/ கடன் அட்டைகளை ஜெய்வான் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) உடன் ரூபே (இந்தியா) அட்டையை இணைப்பதற்கான ஒப்பந்தம்: நிதித் துறை ஒத்துழைப்பை உருவாக்குவதில் முக்கியமான நடவடிக்கையான இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் ரூபே பயன்பாட்டை ஏற்பதை அதிகரிக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்நாட்டு அட்டை ஜெய்வான் அறிமுகம் செய்யப்பட்டதற்காக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஜெய்வான் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையை தலைவர்கள் பார்வையிட்டனர்.

எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயுவின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதுடன் திரவ இயற்கை எரிவாயுவுக்கான நீண்டகால ஒப்பந்தங்களில் இந்தியா தற்போது ஈடுபடுவதை அவர்கள் பாராட்டினர்.

இப்பயணத்தையொட்டி ரைட்ஸ் லிமிடெட் அபுதாபி துறைமுக நிறுவனத்துடனும், குஜராத் கடல்சார் வாரியம் அபுதாபி துறைமுக நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது துறைமுக உள்கட்டமைப்பை உருவாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தவும் உதவும்.

அபுதாபியில் பிஏபிஎஸ் (போச்சாசன் வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் கோயில்) கட்டுவதற்கு நிலம் வழங்கியதற்காகவும், தனிப்பட்ட முறையில் ஆதரவு அளித்ததற்காகவும் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பிஏபிஎஸ் கோயில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா நட்பின் கொண்டாட்டம், ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புகள், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, இரு தரப்பு அமைதிக்கான  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய உறுதிப்பாட்டின் உருவகம் என்று இருதரப்பும் குறிப்பிட்டன.

***

(Release ID: 2005628)

ANU/SMB/IR/RS/KRS


(Release ID: 2005669) Visitor Counter : 144