பிரதமர் அலுவலகம்
'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் மற்றும் இதர வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் குஜராத் முழுவதும் கட்டப்பட்ட 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் பூமி பூஜை மற்றும் தொடக்க விழாவை நடத்தினார்
"இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் அளித்துள்ள ஆசீர்வாதங்கள் எங்கள் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துகின்றன"
"இன்றைய நேரம் வரலாறு படைக்கும் நேரம்"
"ஒவ்வொருவருக்கும் மேலே ஓர் உறுதியான தளம் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் அரசின் முயற்சி"
"அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறார். இதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனர்"
"வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கு எங்களின் வீட்டுவசதித் திட்டங்களில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது"
"வளர்ச்சியடைந்த பாரதத்தின் நான்கு தூண்களான இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்"
"உத்திரவாதம் இல்லாதவர்களுக்கு மோடி உத்திரவாதம் அளித்துள்ளார்"
"ஒவ்வொரு ஏழ
Posted On:
10 FEB 2024 2:45PM by PIB Chennai
'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் வீட்டுவசதித் திட்டம் மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் குஜராத் முழுவதும் கட்டப்பட்ட 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளின் பூமி பூஜை மற்றும் தொடக்கவிழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார். வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், குஜராத் வளர்ச்சிப் பயணத்துடன் குஜராத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 20 ஆண்டுகளை நிறைவு செய்த துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியில் அண்மையில் தாம் பங்கேற்றதை அவர் நினைவுகூர்ந்தார். துடிப்புமிக்க குஜராத் என்ற மாபெரும் முதலீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக குஜராத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஏழைகளுக்கு சொந்தமான வீடு என்பது அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆனால் காலப்போக்கில், குடும்பங்கள் வளரத் தொடங்கியபோது, ஒவ்வொரு ஏழைக்கும் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான அரசின் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர், இன்று மேற்கொள்ளப்பட்ட சுமார் 1.25 லட்சம் பேரின் பூமி பூஜை பற்றியும் குறிப்பிட்டார். இன்று புதிய இல்லம் கிடைத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்தினார். "இத்தகைய பணிகள் முடிவடையும் போது, நாடு அதை 'மோடியின் உத்தரவாதம்' என்று அழைக்கிறது. இதன் பொருள் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதாகும்" என்று திரு மோடி கூறினார்.
மாநிலத்தில் 180-க்கும் அதிகமான இடங்களில் இத்தனை பேர் கூடியிருந்த இன்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். "இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் அளித்துள்ள ஆசீர்வாதங்கள் எங்கள் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. இப்பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நினைவுகூர்ந்த பிரதமர், ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக பயிர் சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம் போன்ற முன்முயற்சிகள் பனஸ்கந்தா, மெஹ்சானா, அம்பாஜி, படான் ஆகிய பகுதிகளில் விவசாயத்திற்கு உதவியதாக குறிப்பிட்டார். அம்பாஜியில் வளர்ச்சி முயற்சிகள் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அகமதாபாத் முதல் அபு சாலை வரையிலான அகல ரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே நிலுவையில் உள்ளது என்று அவர் கூறினார்.
தனது கிராமமான வாத்நகர் பற்றி பேசிய பிரதமர், அண்மையில் மீட்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான பழங்கால கலைப்பொருட்கள் பற்றியும் குறிப்பிட்டார். இவை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. ஹட்கேஷ்வர், அம்பாஜி, பதான், தரங்காஜி போன்ற இடங்களைக் குறிப்பிட்ட பிரதமர், வடக்கு குஜராத் படிப்படியாக ஒற்றுமை சிலை போன்ற சுற்றுலா மையமாக மாறி வருகிறது என்றார்.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மோடியின் உத்தரவாத வாகனம் நாட்டின் லட்சக்கணக்கான கிராமங்களை சென்றடைந்த வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய பிரதமர், குஜராத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் என்றார். நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க உதவுவதில் அரசின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், திட்டங்களிலிருந்து பயனடைந்ததற்காகவும், நிதியை புத்திசாலித்தனமாக நிர்வகித்ததற்காகவும், வறுமையை வெல்வதற்கான திட்டங்களின்படி அவர்களின் வாழ்க்கையை வடிவமைத்ததற்காகவும் அவர்களைப் பாராட்டினார். வறுமையை வேரறுக்க பயனாளிகள் முன்வந்து ஆதரவு அளித்து உதவ வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.. இன்று காலை பயனாளிகளுடன் கலந்துரையாடியதைத் தொட்டுக் காட்டிய பிரதமர், புதிய வீடுகள் மூலம் பயனாளிகளின் தன்னம்பிக்கைக்கு ஊக்கம் கிடைத்துள்ளது என்று பாராட்டினார்.
"இன்றைய நேரம் வரலாறு படைக்கும் நேரம்" என்று பிரதமர் கூறினார். இந்தக் காலகட்டத்தை சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் தண்டி யாத்திரை ஆகிய காலகட்டத்துடன் பிரதமர் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது சுதந்திரம் ஒவ்வொரு குடிமகனின் லட்சியமாக மாறியது. வளர்ச்சியடைந்த பாரதம் அமைப்பை உருவாக்குவது நாட்டுக்கு இதேபோன்ற தீர்மானமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். 'மாநிலத்தின் முன்னேற்றத்தின் மூலம் தேசிய வளர்ச்சி' என்ற குஜராத்தின் சிந்தனையை அவர் எடுத்துரைத்தார். இன்றைய நிகழ்ச்சி வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த குஜராத் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும் என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் நகர்ப்புறங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றார். பிரதமரின் வீட்டுவசதி – ஊரகத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தரமான மற்றும் விரைவான கட்டுமானத்தை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். கலங்கரை விளக்கத் திட்டத்தின் கீழ் 1100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். முந்தைய காலங்களில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட சொற்ப நிதி ஒதுக்கீடு, கமிஷன் வடிவில் கசிவுகள் போன்றவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், ஏழைகளின் வீடுகளுக்காக மாற்றப்பட்ட பணம் தற்போது 2.25 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும், இடைத்தரகர்களை நீக்கி, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது என்றும் கூறினார். குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டுவதற்கான சுதந்திரம் பற்றியும் அவர் குறிப்பிட்டார், அதே நேரத்தில் கழிப்பறைகள், குழாய் நீர் இணைப்புகள், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்குதல் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார். "இந்த வசதிகள் ஏழைகளுக்கு பணத்தை சேமிக்க உதவியுள்ளன" என்று அவர் கூறினார். இந்த வீடுகள் இப்போது பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு அவற்றை வீட்டு உரிமையாளர்களாக ஆக்குகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகள் ஆகியோர் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் நான்கு தூண்கள் என்பதை வலியுறுத்திய பிரதமர், அவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அரசின் தலையாய உறுதிப்பாடு என்றார். 'ஏழைகள்' என்பது அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியது என்று அவர் வலியுறுத்தினார். இத்திட்டங்களின் பயன்கள் எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் சென்றடைகிறது. உத்திரவாதம் இல்லாதவர்களுக்கு மோடி உத்திரவாதம் அளித்துள்ளார். முத்ரா திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அங்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும் அடமானம் இல்லாத கடன்களைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இதேபோல், விஸ்வகர்மாக்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு நிதி மற்றும் திறன்கள் வழங்கப்பட்டன. "ஒவ்வொரு ஏழை நலத்திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் தலித், ஓபிசி மற்றும் பழங்குடி குடும்பங்கள். மோடியின் உத்தரவாதத்தால் யாராவது அதிகம் பயனடைந்திருக்கிறார்கள் என்றால், அது இந்தக் குடும்பங்கள்தான்" என்று அவர் கூறினார்.
"லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை மோடி வழங்கியுள்ளார்" என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் ஏற்கனவே 1 கோடி லட்சாதிபதி சகோதரிகள் உள்ளனர், இதில் குஜராத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான அரசின் முயற்சியை மீண்டும் வலியுறுத்திய அவர், இது ஏழைக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் அளிக்கும் என்றார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தற்போது சேர்க்கப்பட்டுள்ள ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இலவச ரேஷன், மருத்துவமனைகளில் மலிவான சிகிச்சை வசதிகள், குறைந்த விலை மருந்துகள், மலிவான மொபைல் போன் கட்டணங்கள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எல்இடி பல்புகள் மின்சாரக் கட்டணத்தில் குறைவு என்று அவர் குறிப்பிட்டார். மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் வருவாயை ஈட்டவும் 1 கோடி வீடுகளுக்கான மேற்கூரை சூரிய சக்தி திட்டத்தையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் கீழ், சுமார் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை அரசு வாங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மோதேராவில் கட்டப்பட்ட சூரிய கிராமம் குறித்து பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற புரட்சி இப்போது முழு தேசத்திலும் காணப்படும் என்று கூறினார். தரிசு நிலங்களில் சூரிய சக்தி பம்புகள் மற்றும் சிறிய சூரிய சக்தி ஆலைகளை அமைப்பதில் விவசாயிகளுக்கு அரசு உதவுவதையும் அவர் குறிப்பிட்டார். குஜராத்தில் சூரிய சக்தி மூலம் விவசாயிகளுக்கு தனி ஃபீடர் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும், இதனால் விவசாயிகள் பகலில் கூட பாசனத்திற்கான மின்சாரத்தைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத் ஒரு வர்த்தக மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அதன் வளர்ச்சிப் பயணம் தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், குஜராத் இளைஞர்கள் ஒரு தொழில்துறை சக்தியாக மாறுவதற்கான முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றார். தனது உரையை பிரதமர் நிறைவு செய்தார். குஜராத் இளைஞர்கள் இன்று மாநிலத்தை ஒவ்வொரு துறையிலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றனர் என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு அடியிலும் இரட்டை என்ஜின் அரசின் ஆதரவை உறுதி செய்தார்.
பின்னணி
குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 180 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சி பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெறுகிறது. மாநிலம் தழுவிய நிகழ்ச்சியில் வீட்டுவசதி திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு திட்டங்களின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பங்கேற்றனர். குஜராத் முதலமைச்சர், குஜராத் அரசின் பிற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.
----
ANU/PKV/SMB/DL
(Release ID: 2004838)
Visitor Counter : 106
Read this release in:
Telugu
,
Kannada
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam