நிதி அமைச்சகம்
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் இந்தியா மற்றும் இதர நாடுகளுக்குப் பெரிய மாற்றத்தை உண்டாக்கவல்லது - நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
01 FEB 2024 12:44PM by PIB Chennai
அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் இந்தியாவுக்கும் இதில் சம்பந்தப்பட்ட இதர நாடுகளுக்கும் உத்திரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக அமையும் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர், இந்த வழித்தடம் பல நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடித்தளமாக அமையும் என்றார். “இது இந்தியாவால் தொடங்கப்பட்டது என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்” என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதையும் திருமதி நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிப் பேசினார்.
உலகளாவிய சூழல் குறித்துப் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், கடந்த சில ஆண்டுகளில் போர்கள் மற்றும் மோதல்களால் சிக்கலான சூழல் ஏற்பட்டது என்றும், உலகின் மிகவும் கடினமான காலத்தில் ஜி 20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது என்றும் கூறினார். உலகப் பொருளாதார மந்த நிலை, அதிகப் பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள், குறைந்த வளர்ச்சி, உயர்ந்த கடன், குறைந்த வர்த்தக வளர்ச்சி மற்றும் பருவநிலை சவால்கள் போன்றவற்றை உலகம் சந்தித்து வருவதை அவர் எடுத்துரைத்தார். கொவிட் பாதிப்பு, உணவு, உரம், எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியபோதும் இந்தியா வெற்றிகரமாக அதைக் கையாண்டது என்றார். உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா ஒருமித்த கருத்தை உருவாக்கியதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
முதலீடுகளை ஊக்குவித்தல்
2014-23-ம் ஆண்டு காலகட்டத்தில் 596 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது 2005-14 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முதலீடுகளை விட இரண்டு மடங்கு அதிகம் என்று அவர் எடுத்துரைத்தார்.
நிலையான வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
****
(Release ID: 2001162)
ANU/SMB/PLM/KRS
(Release ID: 2001557)
Visitor Counter : 130