பிரதமர் அலுவலகம்
மஹாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் ரூ.12,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்
அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவா சேவா அடல் சேதுவை திறந்து வைத்தார்
Posted On:
12 JAN 2024 7:18PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரூ.12,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, நவி மும்பையில் ரூ.17,840 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவா சேவா அடல் சேதுவைப் பிரதமர் திறந்து வைத்தார். சாலை மற்றும் ரயில் இணைப்பு, குடிநீர், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை இன்று தொடங்கப்படும் வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று மும்பை மற்றும் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற உறுதிப்பாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார். "இந்த வளர்ச்சித் திட்டங்கள் மும்பையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசத்தின் கண்களும் அவற்றின் மீது பதிந்துள்ளன" என்று திரு மோடி கூறினார். இந்தியாவின் மிக நீள கடல் பாலமான அடல் சேதுவை திறந்து வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டிற்கு சான்றாகும் என்றார்."சத்ரபதி சிவாஜி, மும்பா தேவி, சித்திவிநாயகர் ஆகியோருக்குத் தலைவணங்கும் மும்பைக்காரர்களுக்கும் தேசத்திற்கும் அடல் சேதுவை அர்ப்பணிக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
சாலைகள், ரயில்வே, மெட்ரோ மற்றும் நீர் மற்றும் வணிகம் தொடர்பான உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் உள்ள இன்றைய திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு இருந்தபோது தொடங்கப்பட்டவை என்று கூறிய பிரதமர், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார்.தலைமையிலான குழுவின் முயற்சிகளைப் பாராட்டினார்.
பெண்களின் வருகை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், "மோடி வழங்கிய மகள்கள் மற்றும் சகோதரிகளின் அதிகாரமளித்தலுக்கான உத்தரவாதத்தை மகாராஷ்டிரா அரசு முன்னெடுத்துச் செல்கிறது" என்று கூறினார். எங்கள் தாய் மற்றும் மகள்களின் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் அகற்றுவதும், அவர்களுக்கு எளிதான வாழ்க்கையை உறுதி செய்வதும் எங்கள் அரசின் முன்னுரிமையாகும்", என்று அவர் மேலும் கூறினார். உஜ்வாலா, ஆயுஷ்மான் அட்டை, ஜன்தன் கணக்குகள், பிரதமர் வீட்டுவசதியின் கீழ் பக்கா வீடுகள், மாத்ரு வந்தனா, 26 வார மகப்பேறு விடுப்பு, சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்ற திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், 2014-க்கு முந்தைய இந்தியாவை நினைவு கூரும் போது உருமாறிய இந்தியாவின் பிம்பம் இன்னும் தெளிவாகிறது என்றார். "முன்பு, பல மில்லியன் கோடி ரூபாய் ஊழல்கள் விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்தன, இன்றைய விவாதங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை முடிப்பதைச் சுற்றி சுழல்கின்றன" என்று திரு மோடி கூறினார். வடகிழக்கில் பூபன் ஹசாரிகா சேது மற்றும் போகிபீல் பாலம், அடல் சுரங்கம் மற்றும் செனாப் பாலம், பல அதிவேக நெடுஞ்சாலைகள், நவீன ரயில் நிலையங்கள், கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு நடைபாதை, வந்தே பாரத், நமோ பாரத் ரயில்கள் மற்றும் புதிய விமான நிலையங்களைத் திறந்து வைத்தல் ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்.
வரி செலுத்துவோரின் பணம் நாட்டின் வளர்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கிய பிரதமர், இந்தப் பணத்தை முன்பு இரக்கமின்றி தவறாகப் பயன்படுத்தியதுடன் ஒப்பிட்டார். 5 தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போதைய அரசால் முடிக்கப்பட்ட நில்வாண்டே அணை திட்டம் குறித்தும், உரான்-கார்கோபர் ரயில் பாதையின் பணிகள் 3 தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகவும், இரட்டை இயந்திர அரசால் விரைவுபடுத்தப்பட்டதாகவும், முதல் கட்டம் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், நவி மும்பை மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டம் நீண்ட தாமதத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. அடல் சேது கூட 5-6 தசாப்தங்களாக திட்டமிடலில் இருப்பதாக அவர் தெரிவித்தார். மற்றும் பாந்த்ரா-வொர்லி சீலிங்க், 5 மடங்கு சிறிய திட்டத்திற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது; பட்ஜெட் 4-5 மடங்கு அதிகரித்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.12 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசின் 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மஹாராஷ்டிராவில் மட்டும், மத்திய அரசு, 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது அல்லது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் தொகை ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது", என்று அவர் மேலும் கூறினார்.
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், "மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் முடிவடையும் இடத்தில் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது" என்று கூறினார். தூய்மை, கல்வி, மருத்துவ உதவி மற்றும் வருமானம் தொடர்பான திட்டங்கள் பெண்களுக்கு மிகவும் பயனளித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலுவான தூணாக மாறுவதை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சியையும் எடுக்கும்" என்று கூறி பிரதமர் மோடி உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ் மற்றும் திரு அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி - நவா சேவா அடல் சேது
மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் சேது கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு மேல் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்ட 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழி பாலமாகும். இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும், மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.
ஏனைய வளர்ச்சித் திட்டங்கள்
கிழக்கு நெடுஞ்சாலையின் ஆரஞ்சு கேட் மற்றும் மரைன் டிரைவை இணைக்கும் நிலத்தடி சாலை சுரங்கப்பாதைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 9.2 கி.மீ சுரங்கப்பாதை ரூ .8700 கோடிக்கு மேல் செலவில் கட்டப்படும், மேலும் இது மும்பையில் ஒரு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியாக இருக்கும், இது ஆரஞ்சு கேட் மற்றும் மரைன் டிரைவ் இடையேயான பயண நேரத்தை குறைக்கும்.
சூர்ய பிராந்திய மொத்தக் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.1975 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் தானே மாவட்டத்திற்குக் குடிநீரை விநியோகிக்கும், சுமார் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
*****
ANU/PKV/SMB/DL
(Release ID: 1995876)
Visitor Counter : 99
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam