பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, 10-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடின் போது 2024-ன் செக் குடியரசின் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 10 JAN 2024 6:39PM by PIB Chennai

செக் குடியரசின் பிரதமர் திரு பீட்டர் ஃபியாலா, 2024 ஜனவரி 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த மாநாட்டின் போது இன்று (10.01.2024) செக் குடியரசின் பிரதமர் திரு பியலாவைச் சந்தித்தார். அறிவுப்பகிர்வு, தொழில்நுட்பம், அறிவியல் போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் செக் குடியரசைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்திய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி வேகம் அதிகரிப்பு மற்றும் செக் குடியரசின் வலுவான தொழில்துறை அடித்தளம் ஆகியவை உலகளாவிய விநியோக சங்கிலியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

புதுமைக் கண்டுபிடிப்பு குறித்த இந்தியா-செக் குடியரசு உத்திசார் கூட்டு செயல்பாட்டுக்கான கூட்டு அறிக்கை இருதரப்பு உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர். புத்தொழில் மற்றும் புத்தாக்கம், இணையதளப் பாதுகாப்பு, டிஜிட்டல் தளங்கள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதை இந்த கூட்டு அறிக்கையின் செயல்திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

செக் குடியரசின் பிரதமர் திரு ஃபியாலா ஜெய்ப்பூருக்கும் செல்லவுள்ளார். அங்கு தேசிய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (NIMS) அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

----

(Release ID: 1994928)

ANU/AD/PLM/KPG/KRS


(Release ID: 1994962) Visitor Counter : 173