தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டயங்கள் வழங்கப்பட்டன

Posted On: 10 JAN 2024 3:25PM by PIB Chennai

போலியான மற்றும் தவறான செய்திகள் முழு உலகிற்கும் மிகப்  பெரிய சவாலாகும் என்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில்  பட்டம் பெறும் மாணவர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.சி) 55-வது பட்டமளிப்பு விழா புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (10.01.2024) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் தில்லி, ஐஸ்வால், அமராவதி, கோட்டயம், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.எம்.சி நிறுவனத்தைச் சேர்ந்த  700-க்கும் அதிகமான மாணவர்கள் முதுகலைப் பட்டயம் பெற்றனர். இந்தி, ஆங்கிலம், ஒடியா, மராத்தி, மலையாளம் மற்றும் உருது இதழியல், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டயங்களை இந்த மாணவர்கள் பெற்றனர்.

மேலும், 65 மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், பட்டம் பெற்ற மாணவர்களிடம், ஐ.ஐ.எம்.சி போன்ற நிறுவனங்களில் பட்டம் பெறும் எதிர்கால பத்திரிகையாளர்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றார். இன்று, யார் வேண்டுமானாலும், வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்ப முடிவதாகவும், இன்றைய டிஜிட்டல் வழிமுறைகளை அவர்கள்  பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் முழு உலகிற்கும் சவாலாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த சவால்களுக்கு மத்தியில் மக்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கப் போதுமான அளவு செயலாற்ற வேண்டும் என்று பத்திரிகை மற்றும் ஊடகத் துறைக்கு வரும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பத்திரிகைத்  துறையின் மதிப்புகளை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்றும், இந்த ஆற்றலை அவர்கள் திறன் வாய்ந்த முறையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.ஐ.எம்.சி. தலைவர் திரு ஜெகநாதன், தலைமை இயக்குநர் டாக்டர் அனுபமா பட்நாகர், கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் நிமிஷ் ரஸ்தகி, நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

---

(Release ID: 1994813)

ANU/SMB/PLM/KPG/KRS

 


(Release ID: 1994909) Visitor Counter : 119