பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 17 DEC 2023 4:03PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே,  எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சூரத்தின் சக்திவாய்ந்த வரலாறு; அதன் தீவிரமடைந்து வரும் நிகழ்காலம்; எதிர்காலத்தைப் பற்றிய அதன் தொலைநோக்குப் பார்வை இதுதான் சூரத்!  அத்தகைய (வளர்ச்சி) பணிகளில் யாரும் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.  எனவே, சூரத்தைச் சேர்ந்தவர்களுக்கு  உணவுக் கடைக்கு வெளியே அரை மணி நேரம் வரிசையில் நிற்கும் பொறுமை  உள்ளது. உதாரணமாக, பலத்த மழை பெய்தாலும், முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருந்தாலும் பரவாயில்லை; ஒரு சூரத்தி இன்னும் பக்கோடா கடைக்கு வெளியே வரிசையாக நிற்பார். 

நண்பர்களே,

இப்போது உலகில் யாராவது வைரத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், சூரத் மற்றும் பாரத் பற்றியும் பேசப்படும். சூரத் வைர வளாக  இந்திய வடிவமைப்பு, இந்திய வடிவமைப்பாளர்கள், இந்தியப் பொருட்கள் மற்றும் இந்தியக் கருத்தாக்கங்களின் சக்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கட்டிடம் புதிய பாரதத்தின் புதிய ஆற்றல் மற்றும் புதிய உறுதியின் அடையாளமாகும். சூரத் வைரக் கண்காட்சிக்காக வைரத் தொழில், சூரத், குஜராத் மற்றும் முழு நாட்டையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இன்று சூரத் மக்கள், இங்குள்ள வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மேலும் இரண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். சூரத் விமான நிலையத்தின் புதிய முனையம் இன்றே திறக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சூரத் விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. சூரத்திகளின் பல ஆண்டுகால கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. நான் முன்பு இங்கு வந்தபோது, சூரத் விமான நிலையத்தை விட பேருந்து நிலையம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. விமான நிலையம் ஒரு சிறிய குடிசை போலக் காட்சியளித்தது. ஆனால் இன்று நாம் பெரும் உயரங்களைத் தொட்டுள்ளோம், இது சூரத்தின் சக்தியை சித்தரிக்கிறது.

சூரத்தில் இருந்து துபாய்க்கு இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது, விரைவில் ஹாங்காங்கிற்கான விமானமும் தொடங்கும். சூரத் விமான நிலையம் கட்டப்பட்டதால், இப்போது குஜராத்தில் 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. வைரங்கள் தவிர, ஜவுளித் தொழில், சுற்றுலாத் தொழில், கல்வி மற்றும் திறன் தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இதன் மூலம் பயனடையும். இந்த அற்புதமான முனையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்திற்காக சூரத் மக்களுக்கும் குஜராத் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

சூரத் நகரத்தின் மீது எனக்கு இருக்கும் ஆழமான பாசத்தை நான் வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நீங்கள் அதை நன்கு அறிவீர்கள். சூரத் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் முயற்சி செய்யும் போது, மிகப்பெரிய சவால்களை கூட நாம் எதிர்கொள்ள முடியும் என்பதை சூரத் நமக்குக் கற்பித்துள்ளது. சூரத்தின் மண்ணைப் பற்றிய ஏதோ ஒன்று உள்ளது, இது மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபடுகிறது. சூரத் மக்களின் திறன் இணையற்றது.

சூரத் நகரத்தின் பயணம் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆங்கிலேயர்களும் இந்த இடத்தின் அழகைப் பார்த்து முதலில் சூரத் வந்தனர். ஒரு காலத்தில், உலகின் மிகப்பெரிய கப்பல்கள் சூரத்தில் மட்டுமே கட்டப்பட்டன. சூரத்தின் வரலாற்றில் பல பெரிய நெருக்கடிகள் இருந்தன, ஆனால் சூரத் மக்கள் அவை ஒவ்வொன்றையும் ஒன்றாக எதிர்கொண்டனர். ஒரு காலத்தில் 84 நாடுகளின் கப்பல் கொடிகள் இங்கு பறந்து கொண்டிருந்தன என்று கூறப்படுகிறது. இன்று 125 நாடுகளின் கொடிகள் இங்கு பறக்கப் போகின்றன.

சில நேரங்களில் சூரத் சில கடுமையான நோய்களின் பாதிப்பின்  கீழ் இருந்தது; சில நேரங்களில் தாபியில் வெள்ளம் ஏற்படும். பல்வேறு வகையான எதிர்மறை எண்ணங்கள் பரப்பப்பட்டு, சூரத்தின் ஆன்மா சவாலுக்கு உள்ளான அந்த காலகட்டத்தை நான் உன்னிப்பாகக் கண்டிருக்கிறேன். ஆனால் சூரத் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது மட்டுமல்லாமல், புதிய வலிமையுடன் உலகில் தனது இடத்தைப் பிடிக்கும் என்று நான் நம்பினேன். இன்று, இந்த நகரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களில் ஒன்றாகும்.

இப்போதெல்லாம் நீங்கள் அனைவரும் மோடியின் உத்தரவாதத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்த விவாதப் பொருள் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் மோடியின் உத்தரவாதம் குறித்து சூரத் மக்களுக்கு நீண்ட காலமாகவே தெரியும். மோடியின் உத்தரவாதம் உண்மையாக மாறுவதை இங்குள்ள கடின உழைப்பாளிகள் பார்த்துள்ளனர். இந்த சூரத் வைர வளாகம் இந்த உத்தரவாதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

உங்களைப் போன்ற என் நண்பர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் கூறியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. இங்கு சிறிய அல்லது பெரிய வணிகங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்கள் மற்றும் வைர வணிகங்களுடன் தொடர்புடைய கைவினைஞர்களின் முழு சமூகமும் உள்ளது. ஆனால் அவர்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று கச்சா வைரங்களைச் சரிபார்த்து வாங்க வேண்டும் என்றால், அதற்கும் தடைகள் இருந்தன. சப்ளை மற்றும் மதிப்பு சங்கிலி பிரச்சினைகள் முழு வணிகத்தையும் பாதித்தன. வைரத் தொழிலுடன் தொடர்புடைய நண்பர்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

இந்தப் பின்னணியில், 2014-ம் ஆண்டு டெல்லியில் உலக வைர மாநாடு நடைபெற்றது. அப்போதுதான் வைரத் துறைக்கு சிறப்பு அறிவிக்கை மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.

சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதிகள் உள்ளன. சில்லறை நகை வணிகத்திற்காக ஒரு நகை வணிக வளாகம் உள்ளது. சூரத்தின் வைரத் தொழில் ஏற்கனவே 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இப்போது சூரத் வைர வளாகம் காரணமாக 1.5 லட்சம் புதியவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. இந்தத்தொழிலை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரவு பகலாக உழைத்த வைர வியாபாரத்துடன் தொடர்புடைய உங்கள் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.

சூரத் குஜராத்துக்கும் நாட்டிற்கும் நிறைய கொடுத்துள்ளது, ஆனால் சூரத் இதை விட அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை, இது ஆரம்பம்; நாம் மேலும் முன்னேற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மோடி தனது மூன்றாவது இன்னிங்ஸில், இந்தியா நிச்சயமாக உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் சேர்க்கப்படும் என்று நாட்டிற்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கையும் அரசு நிர்ணயித்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் இலக்காக இருந்தாலும் சரி, 10 டிரில்லியன் டாலர் இலக்காக இருந்தாலும் சரி, நாம் இவற்றில் பணியாற்றி வருகிறோம். நாட்டின் ஏற்றுமதியை சாதனை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில், சூரத்தின் பொறுப்பு, குறிப்பாக சூரத்தின் வைரத் தொழிலின் பொறுப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சூரத்தின் அனைத்து ஜாம்பவான்களும் இங்கு உள்ளனர். நாட்டின் வளர்ந்து வரும் ஏற்றுமதியில் தனது பங்களிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் சூரத் நகரம் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்றுமதி மேம்பாட்டிற்கான மையப் பகுதியாக இந்தத் துறையை நாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளோம். காப்புரிமை பெற்ற வடிவமைப்புகளை ஊக்குவித்தல், ஏற்றுமதி பொருட்களை பன்முகப்படுத்துதல், பிற நாடுகளுடன் இணைந்து சிறந்த தொழில்நுட்பத்தை ஆராய்தல், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட அல்லது பசுமை வைரங்களை ஊக்குவித்தல் என பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பசுமை வைரங்களை ஊக்குவிக்க பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடுகளையும் அரசு செய்துள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தையும் நீங்கள் அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று, நீங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்ததிலிருந்து சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஆதரவான சூழலை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். இன்று உலகத்தின் சூழல் பாரதத்திற்கு சாதகமாக உள்ளது. இன்று பாரதத்தின் புகழ் உலகம் முழுவதும் உச்சத்தில் உள்ளது. பாரதம் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 'மேட் இன் இந்தியா' இப்போது ஒரு சக்திவாய்ந்த பிராண்டாக மாறியுள்ளது. உங்கள் வணிகம் இதனால் நிறைய நன்மை அடைவது உறுதி. நகைத் துறையினரும் நன்மை அடைவது உறுதி. எனவே உங்கள் அனைவருக்கும் நான் சொல்கிறேன், ஒரு தீர்மானத்தை எடுத்து அதைச் செய்யுங்கள்!

சமீபத்தில், ஜி - 20 உச்சி மாநாடு நடந்தபோது, தகவல் தொடர்புக்கு தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினோம். ஓட்டுநருக்கு இந்தி தெரிந்திருந்தாலும், அவருடன் அமர்ந்திருந்த விருந்தினருக்கு பிரெஞ்சு தெரிந்திருந்தால், அவர்கள் எப்படி உரையாடியிருப்பார்கள்? எனவே மொபைல் செயலி ஏற்பாடு செய்தோம். அவர் பிரெஞ்சு மொழியில் பேசினால், ஓட்டுநர் அதை இந்தியில் கேட்கலாம், அதே நேரத்தில் ஓட்டுநர் இந்தியில் பேசினால் விருந்தினர் அதை பிரெஞ்சு மொழியில் கேட்கலாம்.

இந்த வளர்ச்சித் திருநாளைக் கொண்டாட நீங்கள் அனைவரும் இன்று பெருந்திரளாக கூடியிருக்கிறீர்கள். எவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். பாரதம் முன்னேற இதுவே மிகப் பெரிய நல்ல அறிகுறியாகும். வல்லப பாய் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினரையும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்துகிறேன். எனக்குத் தெரியும், அப்போது கோவிட் நம்மைத் தாக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்த வேலையை நாம் விரைவில் முடித்திருப்போம். ஆனால் கொரோனா காரணமாக சில பணிகள் தடைபட்டன. ஆனால் இன்று இந்தக் கனவு நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நன்றி.

*******


ANU/PKV/DL


(Release ID: 1990034) Visitor Counter : 71