இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் 2023-ல் பாரா தடகள வீரர்களுக்கான ஆதரவை மேம்படுத்த கேலோ இந்தியா மற்றும் ஸ்வயம் இணைந்துள்ளன
Posted On:
19 DEC 2023 2:39PM by PIB Chennai
கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளின் போது புதுதில்லியில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை அணுகுவதை உறுதி செய்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மை திட்டமான கேலோ இந்தியாவும் இந்தியாவின் முன்னோடி அணுகல் அமைப்பான ஸ்வயம் அமைப்பும் கைகோர்த்துள்ளன.
1400-க்கும் அதிகமான பாரா-தடகள வீரர்களுக்கு அணுகக்கூடிய போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டன. இந்த 8 நாள் நிகழ்வின் தொடக்கத்தில் 300-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மற்றும் விளையாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் உட்பட அனைத்து பாரா-தடகள வீரர்கள், துணை அதிகாரிகள் மற்றும் பாரா-பயிற்சியாளர்கள் நகரத்திற்கு வந்ததிலிருந்து அவர்கள் புறப்படும் வரை அணுகக்கூடிய பேருந்துகள் மற்றும் மினிவேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தங்குமிடம் (ஹோட்டல்கள் / விடுதிகள்) மற்றும் அந்தந்த மைதானங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கருத்தில் கொள்ளப்பட்டது.
கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் 2023-ல், 500-க்கும் அதிகமான சக்கர நாற்காலி பயன்படுத்தும் வீரர்கள் பங்கேற்றனர். எனவே, அவர்களுக்கு அணுகக்கூடிய உள்கட்டமைப்பை வழங்குவது மிகவும் முன்னுரிமையாக இருந்தது, இதில் கைப்பிடிகளுடன் கூடிய சாய்வுதளங்கள் மட்டுமல்லாமல் அணுகக்கூடிய கழிப்பறைகள், இருக்கைகள், பாரா வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அணுகக்கூடிய வகையில் வாகன நிறுத்துமிட வசதி ஆகியவை அடங்கும்.
பாராலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேல் கூறுகையில், "அனைவரையும் உள்ளடக்கிய உள்கட்டமைப்பு மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பு என்பது ஒரு பாரா-விளையாட்டு வீரருக்கு சமவாய்ப்பை வழங்குகிறது. அணுகக்கூடிய போக்குவரத்தின் முக்கியத்துவத்தை பலர் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் பாரா-விளையாட்டு வீரர்களாக, நிகழ்வுகளின் போது அணுகக்கூடிய வேன் அல்லது பேருந்து வழங்கப்படும்போது நாங்கள் எவ்வளவு கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறோம் என்பதை நேரடியாக அனுபவித்துள்ளோம் என்றார்.
கேலோ இந்தியா, ஸ்வயம் இடையேயான ஒத்துழைப்பு இந்தியாவில் மிகவும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய விளையாட்டு சூழலை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க செயலாகும். உடல் திறன்களைப் பொருட்படுத்தாமல், அனைவரும் பங்கேற்கவும், போட்டியிடவும், தேசத்தை ஒன்றிணைக்கும் விளையாட்டுகளின் உற்சாகத்தைக் காணவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்புடனான இணைப்பை இது பிரதிபலிக்கிறது.
***
ANU/SMB/PKV/RR/KPG
(Release ID: 1988230)
Visitor Counter : 117