மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
16 DEC 2023 11:58AM by PIB Chennai
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (17 டிசம்பர் 2023) காசியின் நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் 2023 டிசம்பர் 17 முதல் 30 வரை புனித நகரமான காசியில் (வாரணாசி) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து முதல் குழு நேற்று (2023 டிசம்பர் 15) சென்னையில் இருந்து புறப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) காசித் தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்கிறார்கள். காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.
இந்த இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் குழுவினர் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் குழுவுக்கு கங்கை எனவும், ஆசிரியர்கள் குழுவுக்கு யமுனை எனவும், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவுக்கு கோதாவரி எனவும், ஆன்மீக குழுவுக்கு சரஸ்வதி எனவும், விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்கள் குழுவுக்கு நர்மதா எனவும், எழுத்தாளர்கள் குழுவுக்கு சிந்து எனவும், வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவுக்கு காவேரி எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் மொத்தமாக 1400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
2023 டிசம்பர் 8 ஆம் தேதி வரை இதில் கலந்து கொள்ள விரும்பும் பிரதிநிதிகளிடமிருந்து 42,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1400 பேர் தேர்வு செய்யப்பட்டு 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் வீதம் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலாச்சாரம், ரயில்வே, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தகவல் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து இந்தக் காசி தமிழ் சங்கமத்தை கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.
மத்திய கலாசார அமைச்சகம், உத்தரப்பிரதேச அரசின் குறிப்பிட்ட துறைகளும் இதில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட காசி தமிழ் சங்கமத்தின்போது கிடைத்த நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) தமிழ்நாட்டில் இதனை ஏற்பாடு செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இதனை நடத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.
இந்தப் பயணத்தில் 2 நாட்கள் வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல், காசியின் 2 நாள் பயணம், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் தலா 1 நாள் பயணம் ஆகியவை அடங்கும். தமிழகம் மற்றும் காசியின் கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், சமையல் மற்றும் பிற சிறப்பு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் அரங்குகளும் அமைக்கப்படும். காசியில் உள்ள நமோ படித்துறையில் தமிழ்நாடு மற்றும் காசியின் கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வணிகப் பரிமாற்றங்கள், கல்வித் தொழில்நுட்பங்கள், பிற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் போன்ற அறிவின் பல்வேறு அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தமிழ்நாடு மற்றும் காசியைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
காசி தமிழ் சங்கமத்தின் முதல் கட்டம் 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கல்வி அமைச்சகம் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு 8 நாள் பயணமாகச் சென்று வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான அனுபவத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.
*******
ANU/PLM/PKV/DL
(Release ID: 1987093)
Visitor Counter : 99