பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 01 NOV 2023 8:57PM by PIB Chennai

நண்பர்களே,

உங்கள் அனைவரையும் சந்திக்கவும், உங்களுடன் உரையாடவும், உங்கள் அனுபவங்களைக் கேட்கவும் நான் காத்திருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இங்கு வருவதை நான் காண்கிறேன். இது ஒரு பெரிய உத்வேகமாக அமைகிறது. எனவே, முதலில், ஒரே ஒரு நோக்கத்திற்காக நான் உங்களைச் சந்திக்கிறேன். அது உங்கள் அனைவரையும் வாழ்த்துவதற்காக. நீங்கள் அனைவரும் பாரதத்திற்கு வெளியே, சீனாவில் விளையாடினீர்கள்.  ஆனால் நானும் உங்களுடன் இருந்தேன். அது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் செயல்கள், உங்கள் முயற்சிகள், உங்கள் நம்பிக்கையின் ஒவ்வொரு கணத்தையும் நான் இங்கிருந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். நீங்கள் அனைவரும் நாட்டின் பெருமையை உயர்த்திய விதம் உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாதது. அதற்காக, உங்களையும், உங்கள் பயிற்சியாளர்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவது மட்டும் போதாது. இந்த வரலாற்று வெற்றிக்காக நாட்டு மக்கள் சார்பில் உங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

விளையாட்டுத் துறை எப்போதுமே மிகவும் போட்டி நிறைந்தது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறீர்கள். உங்களுக்குள்ளும் ஒரு போர் நடக்கிறது என்பதை நான் அறிவேன். நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களுடன் போட்டியிடுகிறீர்கள். நீங்கள் உங்களுடன் போராட வேண்டும். போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும். உங்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று உங்களைத் தூண்டுகிறது மற்றும் ஆற்றல் பெருக்கெடுத்து உங்களை விழிப்படையச் செய்து சுறுசுறுப்புடன் நிரப்புகிறது. நீங்கள் அனைவரும் பிரகாசிக்க கஷ்டங்களை சந்தித்திருக்கிறீர்கள். இந்த ஆசிய விளையாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், சிலர் வெற்றி பெற்று திரும்பியுள்ளனர். சிலர் அங்கிருந்து கற்றுக் கொண்டு திரும்பியுள்ளனர். உங்களில் ஒருவர் கூட எதையும் இழந்து திரும்பி வரவில்லை. எனக்கு மிகவும் எளிமையான வரையறை உள்ளது. எந்தவொரு விளையாட்டிலும் இரண்டு விளைவுகள் மட்டுமே உள்ளன. வெற்றி மற்றும் கற்றல். தோல்வியோ, இழப்போ கிடையாது. ஒருவர் கற்றுவிட்டுத் திரும்பும்போது, அவர் ஒரு புதிய நம்பிக்கையுடன் திரும்பி வருகிறார்.

 

பல சவால்களை எதிர்கொண்ட பிறகு நீங்கள் வலுவாகிவிட்டீர்கள். உங்கள் முடிவு வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல.  ஒவ்வொரு நாட்டு மக்களும் பெருமிதம் கொள்கிறார்கள். ஒரு புதிய நம்பிக்கை நாட்டை நிரப்புகிறது. நீங்கள் முந்தைய சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், சில துறைகளில் நீங்கள் அந்த சாதனைகளை முறியடிப்பதைத் தாண்டிச் சென்றுள்ளீர்கள், இதனால் சிலர் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களுக்கு அந்த இடத்தை அடைய முடியாமல் போகலாம். இதுதான் நீங்கள் உருவாக்கிய சூழ்நிலை! 111 பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ளீர்கள் - 111! இது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. இந்த 111 வெற்றிகள் வெறும் எண்ணிக்கை அல்ல. இவை 140 கோடி கனவுகள். இது 2014 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும். கடந்த 2014-ம் ஆண்டை விட இந்த முறை 10 மடங்கு அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளோம். 2014 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த செயல்திறனில் நாம் 15 வது இடத்தில் இருந்தோம், ஆனால் இந்த முறை நீங்கள் அனைவரும் நாட்டை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்துள்ளீர்கள். கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்று நீங்கள் நாட்டை பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். எனவே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

நண்பர்களே

கடந்த சில மாதங்கள் இந்தியாவில் விளையாட்டுத்துறையில் நல்ல முன்னேற்றங்கள் உள்னள.  ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றோம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இந்திய அணி முதல் தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் இரட்டையர் இணை முதல் பதக்கம் வென்றது. 2022 தாமஸ் கோப்பையை வென்று இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி வரலாறு படைத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது வீரர்கள் வரலாற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 28 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்றனர். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

 

நண்பர்களே,

உங்கள் செயல்பாட்டைக் காண நாடே ஆவலாக உள்ளது. நண்பர்களே, ஒரு வீரர் பதக்கம் பெறும்போது, அந்த நபர் விளையாட்டு உலகிற்கும், வீரர்களுக்கும், புதிய வீரர்களுக்கும் ஒரு பெரிய உத்வேகமாகவும் உற்சாகத்திற்கும் காரணமாக மாறுகிறார். ஒரு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் வெற்றி பெறும்போது, அவர் விளையாட்டு உலகில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஒரு உத்வேகமாக மாறுகிறார். விரக்தியில் இருக்கும் ஒருவருக்கு உங்கள் வெற்றி மிகப்பெரிய உத்வேகமாக அமைகிறது. எனவே, நீங்கள் வெற்றி பெறும்போது, அது விளையாட்டு உலகத்துடன் நின்றுவிடாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. நண்பர்களே, நீங்கள் ஊக்கமளிக்கும் பணியைச் செய்கிறீர்கள்.

 

நண்பர்களே,

விளையாட்டுத்துறையில் பாரதத்தின் முன்னேற்றத்தை நாம் அனைவரும் நாளுக்கு நாள் பார்த்து வருகிறோம். பாரதம் முன்னேறுவதற்கான நம்பிக்கையைப் பெற்றிருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இப்போது நாங்கள் 2030 இளைஞர் ஒலிம்பிக் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறோம்.

 

நண்பர்களே,

விளையாட்டில் குறுக்குவழிகள் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பை வேறு யாராலும் செய்ய முடியாது. விளையாட்டு உலகில், விளையாட்டு வீரர் அனைத்து கடின உழைப்பையும் தானே செய்ய வேண்டும். ஆட்டத்தின் அனைத்து அழுத்தங்களையும் வீரர்கள் தாங்களே கையாள வேண்டும். உங்கள் பொறுமையும் கடின உழைப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆதரவு கிடைக்கும்போது, அவரது பலம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பம், சமூகம், நிறுவனங்கள் மற்றும் பிற ஆதரவு சுற்றுச்சூழல் அமைப்புகள் வீரர்களை புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கின்றன. அவர்கள் அனைவரும் எந்த அளவுக்கு நமது வீரர்களுக்கு ஆதரவு தருகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு நல்லது. இப்போது குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் விளையாட்டைத் தொடர அதிக ஆதரவை வழங்குகின்றன. சில வாய்ப்புகள் கிடைத்த பிறகு, உங்களில் சிலருக்கு வீட்டிலிருந்து கொஞ்சம் ஊக்கம் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கு முன்பு, குடும்பங்கள் சில நேரங்களில் உங்களை அதிகமாகப் பாதுகாத்து வந்தன. நீங்கள் காயப்பட்டால், என்ன செய்வது? எனவே அவர்கள் உங்களை விளையாட்டில் ஈடுபட அனுமதித்திருக்க மாட்டார்கள். முன்பு பலர் இதுபோன்றவற்றை அனுபவித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பமும் குழந்தைகளை இந்தத் துறையில் முன்னேற ஊக்குவிப்பதைக் காண்கிறேன். இந்த புதிய கலாச்சாரம் நாட்டில் தோன்றுவது ஒரு பெரிய விஷயம். சமூகத்தைப் பற்றிப் பேசினால், மக்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டால், நீங்கள் படிக்கவில்லை என்ற எண்ணம் மக்களுக்கு முன்பு இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். "நான் பதக்கம் வென்றுவிட்டேன்" என்று சொன்னால். அதற்கு அவர்கள், "நீங்கள் செய்வது இதுதானா? நீங்கள் படிக்கவில்லையா? நீ எப்படி பிழைப்பு நடத்துவாய்?" இந்த கேள்விகளை அவர்கள் முன்பு கேட்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் சொல்கிறார்கள், "நீங்கள் பதக்கம் வென்றது எவ்வளவு அற்புதமானது! அதை ஒரு முறை தொட்டுப் பார்க்கிறேன்". இதுதான் இப்போதைய மாற்றம்.

 

நண்பர்களே,

முன்பு, யாராவது விளையாட்டில் ஈடுபட்டிருந்தால், அவர் வாழ்கையில் வெற்றி பெற்றவராகக்  கருதப்படவில்லை. அவரிடம் நீங்கள் வாழ்க்கை நடத்த என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.  ஆனால் இப்போது சமூகமும் விளையாட்டை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்கிறது.

 

நண்பர்களே,

அரசைப் பற்றி பேசுகையில், முன்னதாக வீரர்கள் அரசாங்கத்திற்காக என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அரசு முழுக்க முழுக்க வீரர்களுக்கானது என்ற நிலை உருவாகியுள்ளது. அரசும் கொள்கை வகுப்பாளர்களும் விளையாட்டு மைதானத்துடன் இணைக்கப்படும்போது, வீரர்களின் நலன்கள் குறித்து அரசு அக்கறை கொள்ளும்போது, வீரர்களின் போராட்டங்களையும் அவர்களின் கனவுகளையும் அரசாங்கம் புரிந்து கொள்ளும்போது, அதன் நேரடி தாக்கம் அரசின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறையில் தெரியும். இதற்கு முன்பும் நாட்டில் சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களை ஆதரிப்பதற்கான கொள்கைகள் எதுவும் இல்லை. நல்ல பயிற்சி முறையோ, நவீன உள்கட்டமைப்பு வசதியோ, தேவையான நிதி உதவியோ இல்லை. இந்த நிலையில் நமது வீரர்கள் எப்படி வெற்றிக் கொடி நாட்ட முடியும்? கடந்த 9 ஆண்டுகளில், அந்த பழைய சிந்தனை மற்றும் பழைய அமைப்பில் இருந்து நாடு வெளியே வந்துள்ளது.

 

இன்று, நாட்டில் பல வீரர்கள் உள்ளனர். அவர்களுக்காக அதிகம் செலவிடப்படுகிறது. அரசின் அணுகுமுறை இப்போது விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் பாதைகளில் உள்ள தடைகளை நீக்கி, வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. திறன் சரியான தளத்தைப் பெறும்போது, செயல்திறன் இன்னும் சிறப்பாக மாறும். 'கேலோ இந்தியா' போன்ற திட்டங்கள் வீரர்களுக்கான ஒரு தளமாக மாறியுள்ளன. இது மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதற்கும் அடிமட்டத்தில் உள்ள நமது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டமான டாப்ஸ் முன்முயற்சி நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த எவ்வாறு உதவுகிறது என்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். பாரா தடகள வீரர்களுக்கு உதவ, குவாலியரில் விளையாட்டுப் பயிற்சி மையத்தையும் நிறுவியுள்ளோம். இந்தத்

நண்பர்களே,

300 பேருக்கு மேல் கொண்ட உங்கள் குழுவில் யாரும் தோற்கவில்லை என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என் தாரக மந்திரம் என்னவென்றால், சிலர் வெற்றி பெற்றுள்ளனர், சிலர் கற்றுக் கொண்டுள்ளனர். நீங்கள் பதக்கங்களை விட உங்களையும் உங்கள் பாரம்பரியத்தையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் அது மிகவும் முக்கியமானது. நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களும், அவற்றைக் கடக்க உங்கள் பலத்தைக் காட்டிய விதமும் இந்த நாட்டிற்கு நீங்கள் செய்த மிகப்பெரிய பங்களிப்பாகும். உங்களில் பலர் சிறிய நகரங்கள், எளிய பின்னணி மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். பலர் பிறந்ததில் இருந்தே உடல் உபாதைகளை சந்தித்துள்ளனர். பலர் தொலைதூரக் கிராமங்களில் வாழ்ந்துள்ளனர். ஆனால் நீங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறீர்கள். சமூக ஊடகங்களில் உங்கள் புகழைப் பாருங்கள். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், இந்தக் குழந்தை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது' என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்கள் உங்களைப் பார்த்து தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு வழி காட்டுகிறார்கள். உங்கள் போராட்டமும், இந்த வெற்றியும் அவர்கள் மனதிலும் ஒரு புதிய கனவை விதைக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பங்கேற்பது மனித கனவுகளின் வெற்றியாகும்.

 

நீங்கள் இப்படி கடினமாக உழைத்து தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நமது  அரசு உங்களுடன் உள்ளது. நாடு உங்களுடன் உள்ளது.

 

நண்பர்களே,

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஆனால் இதோடு நின்றுவிடக் கூடாது. புதிய தீர்மானங்களுடனும், புதிய நம்பிக்கையுடனும் முன்னேறுவோம். ஒவ்வொரு காலையும் ஒரு புதிய விடியலாக மாறட்டும்! அப்போதுதான் நாம் நமது இலக்குகளை அடைவோம் நண்பர்களே.

 

மிக்க நன்றி, வாழ்த்துகள்!

 

****  

PKV/PLM/DL


(Release ID: 1976351) Visitor Counter : 141