பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி 20 மாநாடு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிர்வாகிகளுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி உரையாடியதன் தமிழாக்கம்

Posted On: 22 SEP 2023 10:59PM by PIB Chennai

உங்களில் சிலர் சோர்வாக இருப்பதையும் மீறி இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து, நாட்டின் பெயர் ஒளிர்ந்துள்ளது; அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நீங்கள் அனைவரும் அதன் பின்னணியில் இருந்தவர்கள், இரவும் பகலும் உழைத்தவர்கள், அதன் விளைவாகவே, இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஒரு வீரர் ஒலிம்பிக் மேடைக்குச் சென்று பதக்கம் வெல்வது போலவும், நாட்டின் பெயர் ஜொலிப்பது போலவும், அதற்கான கைதட்டல் நீண்ட நேரம் தொடர்கிறது. அதேபோல், நீங்கள் அனைவரும் சேர்ந்து நாட்டின் பெயரை ஒளிரச் செய்துள்ளீர்கள்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததில் எத்தனை பேர் ஈடுபட்டனர், எந்த சூழ்நிலையில் எவ்வளவு பணிகள் செய்யப்பட்டன என்பதை மக்கள் உணராமல் இருக்கலாம். உங்களில் பெரும்பாலோர் இதற்கு முன்பு இவ்வளவு பெரிய நிகழ்வில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறாதவர்களாக இருக்கலாம். ஒரு வகையில், நீங்கள் நிகழ்வை கற்பனை செய்து பார்க்க வேண்டும், சாத்தியமான சிக்கல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும், அவற்றைத் தீர்க்க என்ன செய்ய முடியும்?  வெவ்வேறு சூழ்நிலைகளில் அதற்கான பதில் என்னவாக இருக்கும்? நீங்கள் பல விஷயங்களை உங்கள் சொந்த வழியில் பரிசீலிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் உங்கள் அனைவருக்கும் நான் ஒரு சிறப்பு வேண்டுகோளை வைக்கிறேன்: நீங்கள் சாதித்ததை அப்படியே விட்டுவிடுவீர்களா?

உங்களில் சிலர் இந்த திட்டத்தில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம். உங்களுக்கு விளக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டத்தை மேற்கொள்ள நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் வரை அனைத்தையும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் அதாவது தங்களுக்கு வசதியாக உள்ள மொழியில் எழுத வேண்டும், இந்த வேலையை எப்படிச் செய்தார்கள், எப்படி உணர்ந்தார்கள், என்ன குறைகளை கவனித்தார்கள், ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால், அதற்கான தீர்வுகளை எப்படிக் கண்டறிந்தார்கள். உங்கள் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டால், அது எதிர்கால திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு மதிப்புமிக்க வழிகாட்டியாக செயல்படும். எதிர்காலத்தில், இந்த அளவில் எந்தவொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் போது அவர்கள் அதை ஒரு வரபிரசாதமாகப் பயன்படுத்தலாம்.

எனவே, 100 பக்கங்கள் எடுத்தாலும் அனைத்தையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அதை க்ளவுடில் சேமிக்கலாம், அங்கு ஏராளமான இடம் உள்ளது. உங்கள் அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அனைவரும் பயனடைய வேண்டும் என்று நம்புகிறேன். இருப்பினும், நான் உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன், உங்களில் யாராவது தொடங்க விரும்பினால், உங்கள் அனுபவங்களை நான் அறிய விரும்புகிறேன்.

எடுத்துக்காட்டாக, பூந்தொட்டிகளைப் பராமரிக்க நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அதனை சரியான உணர்வுடன் பூந்தொட்டிகளை பராமரிப்பது ஜி 20 மாநாட்டின் வெற்றியை உறுதி செய்யும். பூந்தொட்டிகளின் பராமரிப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் அது ஜி 20 மீது பாதிப்பு எனும் கருநிழலை ஏற்படுத்தி விடும் . எனவே, இது ஒரு முக்கியமான பொறுப்பாகும். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சிறியதல்ல என்று நீங்கள் நினைத்தால், வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடத்தொடங்கும்.

நண்பர்களே

அதேபோல், ஒவ்வொரு துறையிலும் உள்ள சக ஊழியர்களுடன் உங்கள் அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து விவாதிக்க வேண்டும், மற்றவர்களின் அனுபவங்களையும் கேட்க வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "நான் நிறைய வேலை செய்துள்ளேன். நான் இல்லையென்றால் ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நிகழ்வு என்னவாகியிருக்கும்?"  என்று சில நேரங்களில் நீங்கள் தனியாக இருக்கும்போது, நீங்கள் நினைத்துப்பார்க்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் இன்னொருவர் கதைகளைக் கேட்கும்போது, நீங்கள் செய்ததை விட மற்றவர்கள் அதிகம் செய்தார்கள் என்பது தெளிவாகும். கடினமான காலங்களில் அவர்கள் கடினமாக உழைப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்போதுதான் நீங்கள் செய்தது நல்லது, ஆனால் மற்றவர்களும் ஒரு அற்புதமான வேலையைச் செய்தார்கள், அப்படித்தான் இந்த வெற்றியை அடைய முடியும் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.

அடுத்தவரின் திறமைகளை நாம் அடையாளம் கண்டு, அவர்களின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளும் தருணத்தில், பொறாமை மறைந்து, நமக்குள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. "சரி, நேற்று வரை, நான் எல்லாவற்றையும் செய்தேன் என்று நினைத்தேன், ஆனால் இன்று இன்னும் பலர் பங்களித்துள்ளனர் என்பதை நான் கண்டுபிடித்தேன்." நீங்கள் டிவியில் தோன்றியிருக்க மாட்டீர்கள், உங்கள் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருக்காது, உங்கள் சாதனைகள் விவாதிக்கப்பட்டிருக்காது என்பது உண்மைதான். வியர்வை சிந்தாதவர்களும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருப்பார்கள். ஆனால் அனைத்து வேலைகளும் தொழிலாளர்களாகிய நாங்கள் செய்தோம் என்று நீங்கள் உணர்வீர்கள். இன்றைய நிகழ்ச்சி தொழிலாளர்களின் ஒற்றுமை கொண்டாட்டமாகும். நான் கொஞ்சம் பெரிய தொழிலாளியாக இருக்கலாம், நீங்கள் சிறிய தொழிலாளர்களாக இருக்கலாம், ஆனால் இறுதியில், நாம் அனைவரும் தொழிலாளர்கள். இந்த கடின உழைப்பின் மகிழ்ச்சியை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். மிகச் சிறப்பான செயலை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

*****

ANU/SMB/BS/KPG


(Release ID: 1975301) Visitor Counter : 119