உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா 2023 நிகழ்வு, தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது

Posted On: 06 NOV 2023 2:41PM by PIB Chennai

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'உலக உணவு இந்தியா 2023' நிகழ்வு நேற்று (நவம்பர் 5) புதுதில்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு முன்னிலையில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், துடிப்பான சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் இந்தியாவின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். உலகளாவிய உணவு மையமாக உருவாகும் அளவு நாட்டின் திறன் உள்ளதாக அவர் தெரிவித்தார். உலகளாவிய பசியை எதிர்த்துப் போராட உணவு விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்ப மூலதன உதவி வழங்கும் நிகழ்ச்சியுடன் இந்த உலக உணவு இந்தியா 2023 நிகழ்வைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவை 'உலகின் உணவுக் கூடை' என்று முன்னிறுத்துவதிலும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதிலும் இந்த நிகழ்வுக்கு உள்ள பங்கை அவர் எடுத்துரைத்தார். உணவு பதப்படுத்தும் துறையை வளர்ந்து வரும் சூரிய உதயத் துறை என்று கூறிய பிரதமர், ஒன்பது ஆண்டுகளில் ரூ. 50,000 கோடிக்கு மேல் இத்துறை அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகக் கூறினார்.

மத்திய அரசின் பத்து அமைச்சகங்கள், துறைகள், ஆறு பொருட்கள் வாரியங்கள் மற்றும் 25 மாநிலங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்தப் பெரிய உணவு நிகழ்வு சர்வதேச மற்றும் உள்நாட்டு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் 1208 கண்காட்சியாளர்கள், 14 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அரங்குகள், சர்வதேச அளவில் 715 வாங்குபவர்கள், உள்நாட்டு அளவில் 218 வாங்குபவர்கள் மற்றும் 97 பெருநிறுவனங்களின் பங்கேற்பு இருந்தது. ஏழு கண்காட்சி அரங்குகளில் 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த நிகழ்வு, உணவு பதப்படுத்தும் துறையில் அண்மைக்கால முன்னேற்றங்களை காட்சிப்படுத்துவதற்கான விரிவான தளத்தை வழங்கியது.

மூன்று நாள் நிகழ்வில் 48 அமர்வுகளில் விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம், இயந்திரங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மின் வணிகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சரக்குப் போக்குவரத்து வசதிகள் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டன. மேலும், மாநிலங்களை மையமாகக் கொண்ட 12 குழு விவாதங்கள் நடைபெற்றன. இதில் குஜராத், கேரளா, ஆந்திரா மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் விளைவாக ரூ. 33,129 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  இது இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ளது. அமுல், ஐடிசி, மாண்டலெஸ், கெல்லாக்ஸ், ஏபி இன்பெவ், ஐபி குழுமம், பாலாஜி வேஃபர்ஸ், ஆனந்தா டெய்ரி, ஃபெர்டிஸ் மற்றும் பிகானேர்வாலா போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த நிகழ்வின் போது நடத்தப்பட்ட கூட்டங்களும் அர்த்தமுள்ள உரையாடல்களும் ஒத்துழைப்புகளை அதிகரித்திருப்பதுடன் அறிவுப் பரிமாற்றம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளன.

********

ANU/PKV/PLM/KV


(Release ID: 1975020) Visitor Counter : 166