பிரதமர் அலுவலகம்
ஷீரடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தொடங்கி வைத்தல் மற்றும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 OCT 2023 6:52PM by PIB Chennai
சத்ரபதி குடும்பத்தினருக்கு வணக்கம்!
மஹாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பயஸ், கடின உழைப்பாளி மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திரா, அஜித், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களே, எங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க ஏராளமாகத் திரண்டு வந்துள்ள எனது குடும்ப உறுப்பினர்களே
சாய்பாபாவின் ஆசியுடன், 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. (இதனை மராத்தி மொழியில் கூறினார்) மகாராஷ்டிரா கடந்த ஐந்து தசாப்தங்களாகக் காத்திருந்த நில்வாண்டே அணையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது; அங்கு 'தண்ணீர்ப் பூஜை' செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி. இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. 'தரிசன வரிசைத்' திட்டம் நிறைவடைவதால், நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் பயனடைவர்.
நண்பர்களே,
இன்று காலை, நாட்டின் விலைமதிப்பற்ற இரத்தினத்தின் மறைவு, பாபா மகாராஜ் சதார்கரின் மறைவு பற்றிய துரதிருஷ்டவசமான செய்தி எனக்குக் கிடைத்தது. கீர்த்தனைகள், சொற்பொழிவுகள் மூலம் அவர் செய்த சமூக விழிப்புணர்வுப் பணி வரும் தலைமுறையினருக்கு பல நூற்றாண்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது எளிமையான பேச்சு, அன்பான வார்த்தைகள், அவரது நடை, மக்களைக் கவர்ந்தது. 'ஜெய்-ஜெய் ராமகிருஷ்ண ஹரி' என்ற பாடலின் அற்புதமான தாக்கத்தை அவரது குரலில் பார்த்தோம். பாபா மகாராஜ் சதார்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
உண்மையான சமூகநீதியின் அர்த்தம் என்னவென்றால், நாடு வறுமையில் இருந்து விடுபட வேண்டும், ஏழ்மையான குடும்பங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். இதைத்தான் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் எங்கள் அரசு செயல்படுத்துகிறது. ஏழைகளின் நலனே எங்கள் இரட்டை என்ஜின் அரசின் தலையாய முன்னுரிமை. இன்று நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், ஏழைகளின் நலனுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் இன்று 1 கோடியே 10 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ .5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க நாடு ரூ .70 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்திற்காக நாடு ரூ .4 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்ட அரசு ரூ.4 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இது, 2014க்கு முந்தைய, 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டதை விட, 6 மடங்கு அதிகம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்போது அரசு மற்றொரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது - பிரதமர் விஸ்வகர்மா. இதன் கீழ், தச்சர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், சிற்பிகள் போன்ற லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு முதல் முறையாக அரசின் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. லட்சங்கள் மற்றும் கோடிகளில் உள்ள இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பே இதுபோன்ற புள்ளிவிவரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பல லட்சம் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் மோசடிகளைப் பற்றியவை. இப்போது என்ன நடக்கிறது? ஏதாவது ஒரு திட்டத்திற்காகப் பல லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
எனது குடும்ப உறுப்பினர்களே,
முன்பெல்லாம் விவசாயிகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. எனது விவசாய சகோதர, சகோதரிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கெளரவிப்பு நிதியைத் தொடங்கினோம். இதன் கீழ், நாடு முழுவதும் கோடிக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.26 ஆயிரம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் என்ற பெயரில் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் உங்களை கஷ்டப்படுத்தியுள்ளனர். இன்று நில்வாண்டே திட்டத்தில் 'தண்ணீர்ப் பூஜை' நடத்தப்பட்டது. இது 1970-ல் அங்கீகரிக்கப்பட்டது. கற்பனை செய்து பாருங்கள், இந்த திட்டம் ஐந்து தசாப்தங்களாக நிலுவையில் இருந்தது! எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டப்பணிகள் துரிதமாக நடந்தன. இப்போது இடது கரை கால்வாயில் இருந்து மக்கள் தண்ணீரைப் பெறத் தொடங்கியுள்ளனர், விரைவில் வலது கரை கால்வாயும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
நண்பர்களே,
அண்மையில் ரபி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.105 ஆகவும், கோதுமை மற்றும் குங்குமப்பூவின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் உள்ள விவசாய நண்பர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். கரும்பு விவசாயிகளின் நலனிலும் முழு அக்கறை செலுத்தி வருகிறோம். கரும்பு விலை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான எத்தனால் வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் கரும்பு விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்க வேண்டும் என்பதற்காக, சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் எங்கள் அரசு முயற்சித்து வருகிறது. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் விவசாயிகளுக்கு அதிக சேமிப்பு மற்றும் குளிர்பதன கிடங்கு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பி.ஏ.சி.எஸ். மூலம் சிறு விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். அரசின் முயற்சியால், நாடு முழுவதும் இதுவரை 7500-க்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனது குடும்ப உறுப்பினர்களே,
மகாராஷ்டிரா மகத்தான ஆற்றல் மற்றும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளின் மையமாக உள்ளது. மகாராஷ்டிரா எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாக பாரதம் வளரும். சில மாதங்களுக்கு முன்பு, மும்பையையும் ஷீரடியையும் இணைக்கும் வந்தே பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மஹாராஷ்டிராவில், ரயில்வே விரிவாக்க பணி தொடர்கிறது. இது ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கும்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்து என்னை ஆசீர்வதித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள் 2047-ம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, 'வளர்கிசியடைந்த பாரதம்' என்று உலகில் அழைக்கப்படும் தீர்மானத்தை முன்னெடுப்போம்.
மிக்க நன்றி.
*****
ANU/PKV/SMB/KV
(Release ID: 1974109)
Visitor Counter : 113
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam