சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய குழுவின் 76 வது அமர்வு; மத்திய அமைச்சர் டாக்டர் மாண்டவியா உரை
Posted On:
30 OCT 2023 1:10PM by PIB Chennai
தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய குழுவின் 76வதுஅமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார். அவருடன் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸும் கலந்து கொண்டார்.தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியக் குழுவின் 76வது அமர்வின் தலைவராக டாக்டர் மாண்டவியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் முன்னெடுப்புகளைப் பாராட்டினார், அவை விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. "அக்டோபர் 24ம் தேதி நிலவரப்படி, 2,110 மில்லியனுக்கும் அதிகமானோர் சேவைகளுக்காக வருகை தந்துள்ளனர். 1,830 மில்லியனுக்கும் அதிகமான முறை இலவச மருந்துகளும், 873 மில்லியனுக்கும் அதிகமான முறை ஆய்வக சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.". "306 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஈடுபடுத்தி 26 மில்லியன் நல்வாழ்வு அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை மீண்டும் வலியுறுத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், "ஆரோக்கியமே செல்வம், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், ஒவ்வொரு பணியையும் நிறைவேற்ற முடியும்" என்று கூறினார். "இந்தியாவில் ஒரு முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகிறோம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறோம். உலகளாவிய சுகாதாரப்பாதுகாப்பு என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் மலிவான சுகாதார சேவையை வழங்குகிறோம்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
புது தில்லியில் உள்ள ஐபி எஸ்டேட்டில் உள்ள உலக சுகாதார அமைப்பின் சீரோ கட்டிட தளத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் டாக்டர் மாண்டவியா உரையாற்றினார், "தென்கிழக்கு பிராந்தியத்தில் சுகாதார சேவைகளின் உள்ளடக்கிய மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா மற்றும் உலக சுகாதார அமைப்பின் கூட்டு முயற்சியின் அடையாளமாக உலக சுகாதார அமைப்பின் சீரோ கட்டிடம் திகழ்கிறது" என்று அவர் கூறினார்.
மாலத்தீவு, இலங்கை, நேபாளம், வங்கதேசம், இந்தோனேஷியா, பூட்டான் ஆகிய நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மானஸ்வி குமார், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
----
ANU/PKV/BS/KPG
(Release ID: 1973020)
Visitor Counter : 141