சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக மனநல தினம் 2023-ஐயொட்டி மனநல மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக்காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்

Posted On: 10 OCT 2023 4:00PM by PIB Chennai

உலக மனநல தினத்தையொட்டி தில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மனநல மாநாட்டில் "மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை" என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். தேசிய மனநலம் மற்றும்  நரம்பியல் கழகத்தில் புதிய வசதிகளைத் தொடங்கி வைத்த அவர் தொலைபேசி வாயிலாக  ஆலோசனை வழங்கப்படும் டெலி-மனஸின் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். அவருடன் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் பங்கேற்றார்.

 

இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, மனநலப் பராமரிப்பின் நன்மைகள் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும் பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையைப் பாராட்டிய மத்திய சுகாதார அமைச்சர், 2015-16 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மனநலக் கணக்கெடுப்பு ஒரு முன்னோடி முயற்சியாகும் என்று தெரிவித்தார். இதன் மூலம் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்ததாகக் கூறினார். "கடந்த ஆண்டு உலக மனநல தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட டெலி மனஸ் சேவை மூலம்,

இதுவரை 3,50,000-க்கும் அதிகமானவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 44 டெலி மனஸ் பிரிவுகள் மூலம் 2000 பேருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த உதவி எண்ணுக்கு தினமும் 1000-க்கும் அதிகமான ழைப்புகள் வருகின்றன. பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் பவள விழா அரங்கில் கல்வி வசதி, புதிய நிர்வாக அலுவலக வளாகம், மூளை மற்றும் மனம் மையம் ஆகிய புதிய வசதிகளைத் திறந்து வைத்தார்.

 

அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 743 மாவட்டங்களில் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெங்களூரு, ராஞ்சி மற்றும் தேஜஸ்பூரில் உள்ள மூன்று மத்திய மனநல நிறுவனங்கள் உட்பட நாட்டில் மொத்தம் 47 அரசு மனநல மருத்துவமனைகள் உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும் பல மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் மனநலப் பிரிவுகள் உள்ளன. கூடுதலாக, புதிதாக நிறுவப்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) மனநலத் துறைகள் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் தேசிய தொலைதூர மனநலத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகளைப் பெற்றமைக்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது . பெரிய மாநிலங்கள் பிரிவில் தமிழகம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப்  பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட தெலங்கானா, ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. வடகிழக்குப் பிரிவில் அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் பிரிவில் ஜம்மு-காஷ்மீர், தில்லி மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி டாமன் மற்றும் டையூ ஆகியவையும் விருதுகளைப் பெற்றன.

-----------


(Release ID: 1966284)
SMB/ANU/IR/RS/KRS



(Release ID: 1966371) Visitor Counter : 127