உள்துறை அமைச்சகம்
சிக்கிம் மாநிலத்துடன் தோளோடு தோள் நிற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு
Posted On:
06 OCT 2023 10:11AM by PIB Chennai
சிக்கிமுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது. சிக்கிம் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் (எஸ்.டி.ஆர்.எஃப்), ரூ.44.80 கோடி மதிப்பிலான இரண்டு தவணைகளையும் சிக்கிமுக்கு முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
பனிப்பாறை ஏரி உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளம் (ஜி.எல்.ஓ.எஃப்) / மேக வெடிப்பால் அதிக மழைபொழிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஆகியவற்றால் விளைந்த சேதங்களை மதிப்பிடுவதற்காக, உள்துறை அமைச்சகம் அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழுவை (ஐ.எம்.சி.டி) அமைத்துள்ளது, இது விரைவில் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும்.
மத்தியக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி, சிக்கிமுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்) மேலும் கூடுதல் மத்திய உதவிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
பனிப்பாறை ஏரி வெள்ளம் / மேக வெடிப்பு / திடீர் வெள்ளம் காரணமாக, அக்டோபர் 4 ஆம் தேதி அதிகாலையில், டீஸ்டா ஆற்றில் திடீர் என வெள்ளம் அதிகரித்தது, இது பல பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை எண்-10-ன் சில பகுதிகள், சுங்தாங் அணை ஆகியவற்றை அடித்துச் சென்றது. சிக்கிமில் நதி பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளில் பல சிறிய நகரங்கள் மற்றும் பல உள்கட்டமைப்பு திட்டங்களும் சேதம் அடைந்தன.
சிக்கிமின் நிலைமையை மத்திய அரசு 24 மணி நேரமும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நிலைமையை திறம்பட கையாள்வதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) போதுமான குழுக்களை அனுப்புதல் உள்ளிட்ட தளவாட வளங்களைத் திரட்டுவதன் மூலம் சிக்கிம் அரசுக்கு மத்திய அரசு முழு ஆதரவை வழங்கி வருகிறது.
தேவையான தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்துறை, தொலைத்தொடர்பு மற்றும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின் தொழில்நுட்பக் குழுக்கள் மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்பை சரியான நேரத்தில் சீரமைக்க உதவி வருகின்றன.
***
ANU/PKV/BS/AG
(Release ID: 1964938)
Visitor Counter : 131
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada