பிரதமர் அலுவலகம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நிகழ்த்திய உரை

Posted On: 05 OCT 2023 1:52PM by PIB Chennai

வணக்கம்!

வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமியின் 200-வது பிறந்த நாள் விழாவில் உரையாற்றுவது மிகப் பெரிய மரியாதையாகும். வள்ளலாருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான வடலூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி  அளிக்கிறது. வள்ளலார் 19-ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வாழ்ந்த மிகவும் மரியாதைக்குரிய மகான்களில் ஒருவர். அவரது ஆன்மீக போதனைகள் இன்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. வள்ளலாரின் தாக்கம் உலகளாவியது. அவரது சிந்தனைகள் மற்றும் லட்சியங்களைப் பின்பற்றி பல அமைப்புகள் செயல்படுகின்றன.

நண்பர்களே,

வள்ளலாரை நாம் நினைவுகூரும் போது, அவரது அக்கறை மற்றும் இரக்க உணர்வை நாம் நினைவு கூர்வோம். வள்ளலார் சக மனிதர்களிடம் இரக்கம் காட்டுவதையே முதன்மையாகக் கொண்ட வாழ்க்கை முறையை நம்பினார். பசியைப் போக்குவதில் வள்ளலாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஒரு மனிதன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வதை விட வேறு எதுவும் அவரை வேதனைப்படுத்தியதில்லை. பசித்தவர்களுடன் உணவைப் பகிர்வது எல்லா இரக்க நடவடிக்கைகளிலும் மிகவும் உன்னதமானது என்று வள்ளலார் நம்பினார். வாடிய பயிரைக்  கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறினார். அவரது லட்சியத்தில் அரசு உறுதிபூண்டு செயல்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் இலவச உணவு தானியஙகள் வழங்கியதன் மூலம் 80 கோடி பேருக்கு அரசு மாபெரும் நிவாரணத்தை  வழங்கியது.  இது சோதனைக் காலங்களில்  பெரிய நிவாரணமாக அமைந்தது .

நண்பர்களே,

கல்வி மற்றும் கற்றலின் சக்தியில் வள்ளலார் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு வழிகாட்டியாக, அவர் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்து எண்ணற்ற மக்களை வழிநடத்தினார். திருக்குறளை மேலும் பிரபலப்படுத்த வள்ளலார் முயற்சிகளை மேற்கொண்டதுடன், நவீன பாடத்திட்டங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் உள்கட்டமைப்பை மாற்றுவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உருவாக்கியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் முழு கல்விச் சூழலையும் இந்த கொள்கை மாற்றுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சாதனை எண்ணிக்கையிலானவை. இளைஞர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம் இப்போது மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் மாற முடியும். இதன் மூலம் இளைஞர்களுக்குப் பல வாய்ப்புகளை உருவாக்க முடியும்.  

நண்பர்களே,

சமூக சீர்திருத்தம் என்று வரும்போது வள்ளலார் தனது காலத்தை விட முன்னணியில் இருந்தார். வள்ளலாரின் கடவுள் மீதான பார்வை மதம், சாதி மற்றும் இன எல்லைகளைத் தாண்டியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தைக் கண்ட வள்ளலார், இந்த தெய்வீகத் தொடர்பை மனித குலம் அங்கீகரித்துப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலாரின் போதனைகள் சமத்துவ சமுதாயத்திற்காக பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது அனைவரும் இணைவோம்,  அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி  என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேறுவதற்காக வள்ளலார் ஆசீர்வதித்திருப்பார். வள்ளலாரின் படைப்புகள் எளிமையானவை. அவை படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதானவை. சிக்கலான ஆன்மீக ஞானத்தை எளிய சொற்களில் அவை வெளிப்படுத்துகின்றன. காலத்தாலும் இடத்தாலும் இந்தியாவின் கலாச்சார ஞானத்தில் உள்ள பன்முகத்தன்மை, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கூட்டு எண்ணத்துக்கு வலு சேர்க்கும் மகான்களின் போதனைகளின் பொதுவான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், வள்ளலாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியுடன் உள்ளோம். அன்பு, கருணை மற்றும் நீதியை அனைவரும் பரப்ப வேண்டும். வள்ளலாரின் இதயத்திற்கு நெருக்கமான முறையில் நடந்து கொள்ள நாமும் தொடர்ந்து கடினமாக உழைப்போம். நம்மைச் சுற்றி யாரும் பட்டினியாக இருக்காமல் பார்த்துக் கொள்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம். அந்த மிகப் பெரிய ஞானியின் 200-வது பிறந்த நாளில் மீண்டும் ஒரு முறை அவருக்கு மரியாதை செலுத்திகிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நன்றி  

*****

ANU/SMB/PLM/KPG/KV



(Release ID: 1964751) Visitor Counter : 152