பிரதமர் அலுவலகம்

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை அர்ப்பணித்தார்

பிரதமர் - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தெலங்கானா முழுவதும் கட்டப்படவுள்ள 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டினார்

சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

"சீரான மின்சார விநியோகம் ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது"

"நான் அடிக்கல் நாட்டிய திட்டங்களை நிறைவேற்றுவது எங்கள் அரசின் பணி கலாச்சாரம்"

"ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி மாற்றம், போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு அடித்தளமாக இருக்கும், இது செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இருக்கும்"

அனைத்து ரயில் பாதைகளையும் 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்குடன் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது

Posted On: 03 OCT 2023 5:03PM by PIB Chennai

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்தப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய அனல் மின் கழகத்தின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகு, மனோகராபாத் மற்றும் சித்திபேட்டை இணைக்கும் புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்கள் இதில் அடங்கும். தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம். பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் திரு மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர், இன்றைய திட்டங்களுக்காக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியும் மின்சார உற்பத்திக்கான அதன் தற்சார்பு திறனைப் பொறுத்தது. ஏனெனில் இது ஒரே நேரத்தில் வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார். பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகை அர்ப்பணிப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், "சீரான மின்சார விநியோகம் ஒரு மாநிலத்தில் தொழில்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டார். இரண்டாவது அலகும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அது முடிந்ததும் மின் நிலையத்தின் நிறுவு திறன் 4,000 மெகாவாட்டாக உயரும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து என்.டி.பி.சி மின் நிலையங்களில் தெலங்கானா சூப்பர் அனல் மின் நிலையம் மிகவும் நவீன மின் நிலையம் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும்பகுதி தெலங்கானா மக்களுக்குச் செல்லும்" என்று கூறிய பிரதமர், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை குறிப்பிட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், இன்று அதனைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். "இது எங்கள் அரசின் புதிய பணிக் கலாச்சாரம்", என்று அவர் மேலும் கூறினார்.

தெலங்கானாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். சமீபத்தில் ஹாசன்-செர்லபள்ளி குழாய் இணைப்பை அர்ப்பணித்ததை அவர் நினைவு கூர்ந்தார். "இந்த குழாய்  இணைப்பு எல்பிஜி மாற்றம், போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு அடிப்படையாக இருக்கும், இது செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இருக்கும்", என்று அவர் கூறினார்.

தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர், இது மாநிலத்தில் இணைப்பை அதிகரிப்பதோடு, இரண்டு ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிக்கும் என்று கூறினார். "அனைத்து ரயில் பாதைகளையும் 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்குடன் இந்திய ரயில்வே செயல்படுவதாக கூறினார். மனோகராபாத்-சித்திபேட் இடையேயான புதிய ரயில் இணைப்பு வணிகம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். 2016-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

சுகாதாரம் என்பது முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரின் துறையாக இருந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். சுகாதார சேவைகள் குறைந்த செலவில் கிடைக்க எடுக்கப்பட்ட பல்வேறு  நடவடிக்கைகள் குறித்து திரு மோடி தெரிவித்தார். பீபிநகரில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் பேசினார். அதே நேரத்தில், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு இயக்கம் குறித்து பிரதமர் தெரிவித்தார், இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரமான உள்கட்டமைப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ், தெலங்கானாவில் 20 தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான முழுமையான ஏற்பாடுகளைக் கொண்ட வகையில் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். "தெலங்கானாவில் சுகாதார வசதிகளை அதிகரிக்க 5000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் ஏற்கனவே செயல்படுகின்றன" என்று அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், தெலங்கானாவில் 50 பெரிய பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டதாகவும், அவை விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். மின்சாரம், ரயில்வே மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் இன்றைய திட்டங்களுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

நாட்டில் மேம்பட்ட எரிசக்தி செயல்திறனுடன் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, என்.டி.பி.சியின் தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் 800 மெகாவாட் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது தெலங்கானாவுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். இது நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான மின் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.

மனோகராபாத் - சித்திபேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததால் தெலங்கானாவின் ரயில்வே உள்கட்டமைப்புக்கு ஊக்கம் கிடைக்கிறது.  தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர்- கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம். 76 கி.மீ நீளமுள்ள மனோகராபாத்-சித்திபேட் ரயில் பாதை பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். குறிப்பாக மேடக், சித்திபேட் மாவட்டங்களில். தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம் ரயில்களின் சராசரி வேகத்தை மேம்படுத்த உதவும் மற்றும் இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்திற்கு வழிவகுக்கும். சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தெலங்கானாவில் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்கும் முயற்சியில், பிரதமரின் - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். திலாபாத், பத்ராத்ரி கொத்தகூடம், ஜெயசங்கர் பூபாலபள்ளி, ஜோகுலாம்பா கட்வால், ஹைதராபாத், கம்மம், குமுராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், மகபூப்நகர் (படேபள்ளி), முலுகு, நாகர்கர்னூல், நல்கொண்டா, நாராயண்பேட்டை, நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா, ரங்காரெட்டி (மகேஸ்வரம்), சூர்யபேட், பெத்தபள்ளி, வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த அவசர சிகிச்சைப் பிரிவுகள் கட்டப்படும்.

இது தெலங்கானா முழுவதும் மாவட்ட அளவிலான தீவிர சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்கும், இது மாநில மக்களுக்கு பயனளிக்கும்.

***

AD/ANU/IR/RS/KPG



(Release ID: 1963785) Visitor Counter : 122