பிரதமர் அலுவலகம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்

Posted On: 23 SEP 2023 3:10PM by PIB Chennai

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியின் கஞ்சரியில் சுமார் ரூ.450 கோடி செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நவீன சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட உள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் திரு.மோடி, வாரணாசிக்கு மீண்டும் வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இந்த நகரத்தின் மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் சந்திரயான் நிலவில் தரையிறங்கி சிவ சக்தி புள்ளியை கடந்த மாதம் 23 ஆம் தேதி அடைந்தது.  சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, தான் காசிக்கு விஜயம் செய்வதாக பிரதமர் எடுத்துரைத்தார். "சிவ சக்தியின் ஒரு இடம் சந்திரனில் உள்ளது, மற்றொன்று காசியில் உள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முக்கியமான சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.

மாதா விந்தியவாசினிக்குச் செல்லும் பாதையின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கியத்துவத்தையும், ராஜ் நாராயண் அவர்கள் வாழ்ந்த இடமான மோதிகோட் கிராமத்துடனான அதன்நெருக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.

மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அரங்கத்தின் வடிவமைப்பு காசி மக்கள் மத்தியில் ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

இங்க கட்டமைக்கப்பட உள்ள மைதானம் சிறந்த கிரிக்கெட் போட்டிகளைக் காணும் என்றும், இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்துடன் கூடிய மைதானத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  "இது காசி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்", என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட்டின் மூலம், உலகம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும், பல புதிய நாடுகள் கிரிக்கெட் விளையாடுவதால் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளுக்கு வழிவகுக்கிறது என்றும் பிரதமர் கூறினார். இந்த சர்வதேச ஸ்டேடியம் வரும் ஆண்டுகளில் அதிகரித்து வரும் மைதானங்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார். பி.சி.சி.ஐ.யின் பங்களிப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது விளையாட்டில் சாதகமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பிராந்திய பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இதுபோன்ற முன்னேற்றங்கள் அதிக அளவு சர்வதேச  பார்வையாளர்களை ஈர்க்கின்றன. எனவே இதுபோன்ற மைதானங்கள்  ஹோட்டல்கள், உணவகங்கள், ரிக்ஷாக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் போன்றருக்கு பெரிதும் பயனளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி விளையாட்டு பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனங்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது, இளைஞர்கள் விளையாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கவும் வழிவகுக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். வரும் நாட்களில் வாரணாசியில் ஒரு புதிய விளையாட்டு மேம்பாடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பெற்றோர்கள் மத்தியில் விளையாட்டு குறித்த மாறிவரும் அணுகுமுறையை பிரதமர் எடுத்துரைத்தார். "இப்போது தேசத்தின் மனநிலை - விளையாடுபவர் மலர்வார்" என்று உள்ளதாக பிரதமர் கூறினார்.

சமீபத்தில் ஷாதோலுக்குச் சென்றதையும், அங்குள்ள பழங்குடி கிராமத்தில் இளைஞர்களுடனான தனது உரையாடலையும் நினைவுகூர்ந்த பிரதமர், அங்குள்ள 'மினி பிரேசில்' மீதான உள்ளூர் பெருமையையும், அங்கு கால்பந்தின் மீதான அவர்களின் ஆழமான அன்பையும் நினைவு கூர்ந்தார்.

விளையாட்டில் காசியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் பிரதமர் விவரித்தார். காசி நகர இளைஞர்களுக்கு, உலக அளவிலான விளையாட்டு வசதிகளை வழங்குவதே அந்த மாற்றம் என்றார்.

இந்த ஸ்டேடியத்துடன் சேர்த்து 400 கோடி ரூபாய் சிக்ரா ஸ்டேடியத்திற்கு செலவிடப்படுகிறது, அங்கு 50 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த முதல் மல்டி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் இதுவாகும். புதிய கட்டுமானங்களுடன், பழைய அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சமீபத்திய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளுக்கு அணுகுமுறை மாற்றமே காரணம் என்று கூறிய பிரதமர், தற்போது இளைஞர்களின் உடற்தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஆகியவற்றுடன் விளையாட்டு இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த 9 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விளையாட்டுதுறைக்கான பட்ஜெட் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த  ஆண்டை விட இந்த ஆண்டு கேலோ இந்தியாவின் பட்ஜெட் சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

தடகள வீரர்கள் குழுவில் இடம் பெறும் ஒருவர் பள்ளியிலிருந்து ஒலிம்பிக் என்ற உயர்ந்த மேடைக்கு செல்ல வேண்டும் என்பதை நோக்கியே  அரசாங்கம் நகர்கிறது, என்று அவர் கூறினார். பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பு மற்றும் டாப்ஸ் திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றதன் மூலம் மொத்தமாக பெற்ற பதக்கங்களின் மொத்த எண்ணிக்கையுடன்  ஒப்பிடும்போது, இந்த ஆண்டுஅதிக பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும், மூலை முடுக்கிலும் விளையாட்டுத் திறன் பெற்றவர்கள் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருப்பதாக கூறிய  திரு. மோடி, அவர்களைக் கண்டறிந்து அவர்களின் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

"சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வரும் இளைஞர்கள் இன்று நாட்டின் பெருமையாக மாறியுள்ளனர்" என்று திரு. மோடி கூறினார். உள்ளூர் திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களாக மாற்ற அரசு பாடுபடும் என கேலோ இந்தியாவை அவர் எடுத்துக்காட்டினார்.

நிகழ்வில்  பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டதை குறிப்பிட்ட பிரதமர், காசி மீது அவர்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்தார்.

"புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக நல்ல பயிற்சியாளர்களும் முக்கியம்" என்று வலியுறுத்திய பிரதமர், தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்களின் பாத்திரத்தை ஏற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

புதிய உள்கட்டமைப்புகள்  சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் கூறினார். கேலோ இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு பெண்களுக்கு பயனளிக்கிறது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் விளையாட்டு என்பது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயலாக இல்லாமல் சரியான பாடமாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூரில் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில், விளையாட்டு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று அவர் கூறினார். கோரக்பூரில் விளையாட்டுக் கல்லூரி விரிவுபடுத்துவது, மீரட்டில் மேஜர் தயான் சந்த் பல்கலைக்கழகம் நிறுவப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் அவசியம்", என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒரு நாட்டின் நற்பெயருக்கு இது  முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் பல நகரங்கள் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் பெயர் பெற்றவை என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்ட நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த மைதானம், வெறும் செங்கற்கள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்பாக மட்டும் இல்லாமல், எதிர்கால இந்தியாவின் அடையாளமாக மாறும் வளர்ச்சிக்கான தீர்வுக்கு சாட்சியாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

காசி நகரில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி முயற்சிகளுக்கும் காரணமான நகர மக்களை பிரதமர் பாராட்டினார். "நீங்கள் இல்லாமல் காசியில் எதையும் சாதிக்க முடியாது. உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுடன் காசியின் வளர்ச்சியின் புதிய அத்தியாயங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்", என்று பிரதமர் தமது உரையை முடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ செயலாளர் ரோஜர் பின்னி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார், மதன் லால், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் கோபால் சர்மா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உத்தரபிரதேச அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

வாரணாசியின் கஞ்சரியில் சுமார் ரூ.450 கோடி செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நவீன சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

***

ANU/SM/BS/DL



(Release ID: 1959917) Visitor Counter : 141