பிரதமர் அலுவலகம்

கிரீஸ் பிரதமருடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம்

Posted On: 25 AUG 2023 8:08PM by PIB Chennai

மரியாதைக்குரிய கிரீஸ் பிரதமர் மித்சோடாக்கிஸ் அவர்களே,

இரு நாட்டு பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

 

கிரீஸிஸ் (கிரேக்கம்) ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பான துயரச் சம்பவங்களில் உயிர் இழந்தவர்களுக்கு முதலில் எனது இரங்கலை, இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

 

நண்பர்களே,

 

கிரீஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையில் இது ஒரு இயற்கையான பிணைப்பு ஆகும். உலகின் இரண்டு பண்டைய நாகரிகங்களுக்கு இடையில், உலகின் இரண்டு பண்டைய ஜனநாயக சித்தாந்தங்களுக்கு இடையில், மற்றும் உலகின் இரண்டு பண்டைய வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளுக்கு இடையிலான சந்திப்பு இது.

 

நண்பர்களே,

 

நமது உறவின் அடித்தளம் எவ்வளவு பழமையானதோ, அதே அளவுக்கு அது வலுவானது. அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் நாம் ஒருவருக்கொருவர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். இந்தோ-பசிபிக் அல்லது மத்திய தரைக்கடல் பகுதியில் புவிசார் அரசியல், சர்வதேச மற்றும் பிராந்திய விஷயங்களில் இன்று நாம் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளோம். இரண்டு பழைய நண்பர்களைப் போலவே, நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மதிக்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் வருவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், நமது உறவுகளின் ஆழம் குறையவில்லை. உறவுகளின் அரவணைப்பும் குறையவில்லை. எனவே, இன்று கிரேக்க பிரதமரும் நானும் இந்திய-கிரீஸ் கூட்டு செயல்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

 

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், கல்வி, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் கூட்டு செயல்பாட்டை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

 

நண்பர்கள்,

 

பாதுகாப்புத் துறையில், ராணுவ உறவுகளுடன், பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளோம். பயங்கரவாதம் மற்றும் இணையதளப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் இன்று விவாதித்தோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலும், பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கிரேக்கப் பிரதமரும் நானும், நமது இருதரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருவது குறித்துப் பேசினோம். மேலும் இதன் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

 

இன்று, இன்னும் சில நிமிடங்களில், கிரேக்கப் பிரதமர் ஒரு வணிகக் கூட்டத்தை நடத்துகிறார். அதில், இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகளுடன், சில குறிப்பிட்ட துறைகள் குறித்து விவாதிக்க உள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் நமது தொழில்துறை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம்.

 

வேளாண் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயம், விதை உற்பத்தி மட்டுமின்றி ஆராய்ச்சி, கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளிலும் நாம் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும்.

 

நண்பர்களே,

 

இரு நாடுகளுக்கும் இடையே திறன் வாய்ந்த முறையில் குடியேற்றத்தை எளிதாக்குவதற்காக, விரைவில் இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்துக் கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளோம். நமது மக்களுக்கு இடையிலான உறவுகளுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க, நாம் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்றங்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம்.

 

நண்பர்களே,

 

தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்திற்கு கிரீஸ் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியான தீர்வு மற்றும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு கிரீஸ் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றி தெரிவித்தேன். இந்தியாவின் ஜி-20 தலைமைப் பதவி குறித்து கிரீஸ் பிரதமர் அளித்த வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

 

நண்பர்களே,

 

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் என்ற விருதை இன்று எனக்கு வழங்கியதற்காக, ஹெலனிக் (கிரீஸ்) குடியரசின் மக்களுக்கும் அதிபருக்கும் நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பில் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தேன். இந்தியா மற்றும் கிரேக்கத்தின் பகிரப்பட்ட மதிப்புகள், நீண்ட மற்றும் நம்பகமான கூட்டுச் செயல்பாட்டின் அடித்தளமாகும்.

 

ஜனநாயகத்தின் விழுமியங்கள் மற்றும் லட்சியங்களை நிறுவி வெற்றிகரமாக அவற்றைச் செயல்படுத்தியதில் இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்று பங்களிப்பு உள்ளது. இந்திய மற்றும் கிரேக்க-ரோமானியக் கலைகளின் அழகிய கலவையான காந்தாரக் கலைப் பள்ளியைப் போலவே, இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நட்பும் காலத்தால் அழியாத முத்திரையைப் பதிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

கிரேக்கத்தின் இந்த அழகான மற்றும் வரலாற்று நகரத்தில் இன்று எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கு கிரீஸ் பிரதமர் மற்றும் கிரீஸ் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மிக்க நன்றி.

 

பொறுப்பு துறப்பு - இது பிரதமரின் ஊடக சந்திப்பு உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது ஊடக சந்திப்பு உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

 

Release ID = 1952264

 

SM/ PLM /KRS



(Release ID: 1952325) Visitor Counter : 122