பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 26 JUL 2023 8:44PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 அஞ்சல்தலையை அவர் வெளியிட்டார். மாநாட்டு மையத்திற்கு பாரத மண்டபம்என பெயர் சூட்டும் விழா ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டதையும், அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள இந்த புதிய ஐஇசிசி வளாகம் இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தேசத்தின் புதிய உற்சாகத்தையும் மனநிலையையும் குறிக்கும் வகையில் கவிதையுடன் தனது உரையைத் தொடங்கினார். "பாரத மண்டபம் இந்தியாவின் திறன்கள் மற்றும் தேசத்தின் புதிய ஆற்றலுக்கான அழைப்பாகும். இது இந்தியாவின் பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் மன உறுதியின் தத்துவம்" என்று அவர் கூறினார்.

இன்று காலை தொழிலாளர்களை கௌரவித்ததை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். பாரத மண்டபத்திற்காக டெல்லி மக்களுக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். கார்கில் வெற்றி தினத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை குறிப்பிட்ட பிரதமர், கார்கில் போரின் போது இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தினார்.

'பாரத மண்டபம்' என்ற பெயருக்குப் பின்னால் பகவான் பசவேஸ்வரரின் 'அனுபவ் மண்டபம்' உத்வேகமாக உள்ளது என்று பிரதமர் விவரித்தார். அனுபவ் மண்டபம் விவாதம் மற்றும் வெளிப்பாட்டின் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் கூறினார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக பல வரலாற்று மற்றும் தொல்லியல் நிகழ்வுகளை அவர் மேற்கோள் காட்டினார். மேலும் அவர் ‘’இந்த பாரத மண்டபம் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்தியர்களாகிய நாம், நமது ஜனநாயகத்திற்கு அளித்த அழகான பரிசாகும்" என்று கூறினார். இன்னும் சில வாரங்களில் இந்த இடத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும்போது இந்தியாவின் முன்னேற்றத்தையும் வளர்ந்து வரும் மதிப்பையும் ஒட்டுமொத்த உலகமும் இங்கிருந்து காணும் என்று அவர் கூறினார்.

டெல்லியில் உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையத்தின் அவசியத்தை விளக்கிய பிரதமர், "21-ம் நூற்றாண்டில் 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற கட்டுமானத்தை கொண்டு இருக்க வேண்டும்" என்று கூறினார். உலகெங்கிலும் உள்ள கண்காட்சியாளர்களுக்கு பாரத மண்டபம் பெரிதும் பயனளிக்கும் என்றும், இந்தியாவில் மாநாட்டு சுற்றுலாவுக்கான தொடர்பு வழியாக மாறும் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கூறுகையில், நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் செயல்திறனுக்கு சாட்சியாகவும், கைவினைக் கலைஞர்களின் முயற்சிகளை வெளிப்படுத்துவதற்கான தளமாகவும் பாரத மண்டபம் செயல்படும் என்றார். "பாரத மண்டபம் தற்சார்பு பாரதம் மற்றும் உள்நாட்டுக்காக குரல் கொடுங்கள் பிரச்சாரத்திற்கான பிரதிபலிப்பாக மாறும்" என்று குறிப்பிட்ட பிரதமர், பொருளாதாரம் முதல் சூழலியல் வரை, மற்றும் வர்த்தகம் முதல் தொழில்நுட்பம் வரையில் ஒவ்வொரு துறைக்கும் இந்த மாநாட்டு மையம் ஒரு மேடையாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

பாரத மண்டபம் போன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். சுயநலவாதிகளின் எதிர்ப்பையும் மீறி உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உடைந்த மனநிலையுடன் செயல்படுவதன் மூலம் எந்த சமூகமும் முன்னேற முடியாது என்று அவர் வலியுறுத்தினார். தொலைநோக்குப் பார்வை கொண்ட முழுமையான நடைமுறைக்கு பாரத மண்டபம் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினார். 160-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இணைய காணொலி விசா வசதி போன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். டெல்லி விமான நிலையத்தின் திறன் 2014-ம் ஆண்டில் 5 கோடியாக இருந்ததில் இருந்து இன்று ஆண்டுக்கு 7.5 கோடியாக உயர்ந்துள்ளது. ஜேவர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும் இது மேலும் வலுப்படுத்தப்படும். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விருந்தோம்பல் துறையும் கணிசமாக விரிவடைந்தது. இது மாநாட்டு சுற்றுலாவுக்கான முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டமிட்ட அணுகுமுறையைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் புதுதில்லியின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை சுட்டிக் காட்டிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தை எடுத்துரைத்தார். மேலும், இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது என்றார். தேசிய போர் நினைவுச்சின்னம், காவலர் நினைவிடம் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவிடம் போன்ற நினைவுச்சின்னங்களின் எடுத்துக்காட்டுகளையும் அவர் எடுத்துரைத்தார். பணி கலாச்சாரம் மற்றும் பணிச் சூழலை மாற்றுவதற்கு அரசு உத்வேகம் அளித்து வருவதால், கடமைப் பாதையைச் சுற்றியுள்ள அலுவலக கட்டிடங்களின் மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா இதுவரை கண்ட ஒவ்வொரு பிரதமரின் வாழ்க்கையையும் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் பிரதமர்கள் அருங்காட்சியகத்தையும் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான “யுகம் யுகமாக பாரதம்புதுதில்லியில் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைய நாம் பெரியதாக சிந்தித்து பெரிய இலக்குகளை அடைய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதனால்தான், " பெரியதாக சிந்தியுங்கள், பெரியதாக கனவு காணுங்கள், பெரியதாக செயல்படுங்கள்' என்ற கொள்கையுடன் இந்தியா முன்னேறி வருகிறது" என்று அவர் கூறினார். மேலும், அவர் "அரசு பெரியதாக, சிறந்ததாக மற்றும் விரைவாக உருவாக்குகிறது". உலகின் மிகப்பெரிய சூரிய-காற்றாலை பூங்கா, மிக உயரமான ரயில் பாலம், மிக நீளமான சுரங்கப்பாதை, மோட்டார் செல்லக்கூடிய மிக உயரத்தில் உள்ள சாலை, மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், உலகின் மிக உயரமான சிலை மற்றும் இந்தியாவில் ஆசியாவின் இரண்டாவது பெரிய ரயில் பாலம் குறித்தும் பிரதமர் பேசினார். அவர் பசுமை ஹைட்ரஜனின் முன்னேற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

"தற்போதைய அரசின் இந்த பதவிக்காலம் மற்றும் முந்தைய ஆட்சியின் வளர்ச்சியின் தூண்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் சாட்சியாக உள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தற்போது தடுக்க முடியாதது என்பதை உறுதிப்படுத்தினார். 2014-ம் ஆண்டில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்தியா உலகின் 10 வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்பதை திரு. மோடி சுட்டிக் காட்டினார். மூன்றாவது முறையாக, ஆட்சி அமைக்கும் போது, இந்தியாவின் பெயர் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் இடம்பெறும் என்று பிரதமர் உறுதியளித்தார். "இது மோடியின் உத்தரவாதம்", என்று அவர் உறுதி அளித்தார். மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் வேகம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், மக்கள் தங்கள் கனவுகள் நனவாகுவதை காண்பார்கள் என்றும் பிரதமர் மக்களுக்கு உறுதியளித்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை உருவாக்க 34 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதால் இன்று இந்தியா மறுகட்டமைப்பு புரட்சியைக் காண்கிறது என்று பிரதமர் கூறினார். இந்தாண்டும் மூலதன செலவு 10 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், 40 ஆயிரம் கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. இது, அதற்கு முந்தைய எழுபதாண்டுகளில் 20 ஆயிரம் கி.மீ. ஆக இருந்தது என்று அவர் கூறினார். 2014-க்கு முன்பு, மாதத்திற்கு 600 மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இன்று ஒவ்வொரு மாதமும் 6 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு 4 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 7.25 லட்சம் கிலோ மீட்டர் நீள கிராமப்புற சாலைகள் உள்ளன. விமான நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 70-லிருந்து ஏறக்குறைய 150 ஆக அதிகரித்தது. நகர எரிவாயு விநியோகமும் 2014-ல் 60 நகரங்களில் இருந்ததுடன் ஒப்பிடும்போது 600 நகரங்களை எட்டியுள்ளது.

"புதிய இந்தியா முன்னோக்கிச் செல்கிறது மற்றும் அதன் வழியில் ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து வருகிறது" என்று கூறிய பிரதமர், பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டினார். சமூக உள்கட்டமைப்பிற்கான முக்கிய காரணியாக மாறி வரும் பிரதமர் கதிசக்தி முதன்மை திட்டத்தின் உதாரணத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இது 1600-க்கும் மேற்பட்ட தரவு அடுக்குகளைக் கொண்டுள்ளது மற்றும் நாட்டின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

1930-களின் சகாப்தத்தின் மீது கவனத்தை ஈர்த்த பிரதமர், கடந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கியமானது என்றும், அங்கு சுயாட்சியே இலக்காக இருந்தது என்றும் கூறினார். இதேபோல், இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அரசின் குறிக்கோள் வளமான இந்தியா, 'வளர்ந்த இந்தியா' என்று பிரதமர் கூறினார். சுயராஜ்ய இயக்கத்தின் விளைவாகவே இந்தியா சுதந்திரம் பெற்றது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். "இப்போது இந்த மூன்றாவது தசாப்தத்தில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அரசு கொண்டுள்ளது" என்று கூறிய பிரதமர், ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரின் கனவுகளையும் நனவாக்க மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார். அனுபவத்தின் அடிப்படையில் பேசிய பிரதமர், தனக்கு முன்னால் பல சாதனைகள் அரங்கேறுவதைக் கண்டதாகவும், நாட்டின் வலிமையை அறிந்திருப்பதாகவும் கூறினார். இந்தியா வளர்ந்த நாடாக மாறலாம்! இந்தியாவால் வறுமையை ஒழிக்க முடியும்" என்று பிரதமர் கூறினார். நிதி ஆயோக்கின் அறிக்கையை மேற்கோள் காட்டிய பிரதமர், இந்தியாவில் 5 ஆண்டுகளில் மட்டும் 13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் கடுமையான வறுமை நீங்கி வருவதாகவும், இதற்காக கடந்த 9 ஆண்டுகளில் அரசு எடுத்த கொள்கைகள் மற்றும் முடிவுகளை அவர் வலியுறுத்தினார்.

தூய்மையான நோக்கங்கள் மற்றும் சரியான கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ஜி-20 ஐ எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டினார். ஜி-20 மாநாட்டை ஒரு நகரத்துக்கோ அல்லது ஒரு இடத்திற்கோ என்று கட்டுப்படுத்தவில்லை. ஜி-20 மாநாட்டை நாட்டின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அரசு எடுத்துச் சென்றது. இதன் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தினோம். இந்தியாவின் கலாச்சார வலிமை என்ன, இந்தியாவின் பாரம்பரியம் என்ன என்பதை உலகிற்கு காட்டினோம். ஜி-20 மாநாட்டின் செயல்பாடு குறித்து மேலும் விளக்கிய பிரதமர், "ஜி-20 கூட்டங்களுக்காக பல நகரங்களில் புதிய வசதிகள் அமைக்கட்டப்பட்டன, பழைய வசதிகள் நவீனமயமாக்கப்பட்டன. இதனால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைத்தது. இதுதான் நல்லாட்சி. ‘’தேசம் முதலில், குடிமகன் முதலில்’’ என்ற உணர்வைப் பின்பற்றி இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய போகிறோம்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், ஏராளமான மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழில்துறை வல்லுநர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

நாட்டில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையே பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (ஐஇசிசி) கருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இத்திட்டம் பிரகதி மைதானத்தில் உள்ள பழைய மற்றும் காலாவதியான வசதிகளை மறுசீரமைத்து சுமார் 2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. சுமார் 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஐஇசிசி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய எம்ஐசிஇ (கூட்டங்கள், செயல் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு கிடைக்கும் பயன்படுத்த கூடிய இடத்தைப் பொறுத்தவரை, ஐஇசிசி வளாகம் உலகின் சிறந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாகும். பிரகதி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஐஇசிசி வளாகத்தில் மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள் மற்றும் ஆம்பிதியேட்டர் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் உள்ளன.

மாநாட்டு மையம் பிரகதி மைதான வளாகத்தின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டிடக்கலை அதிசயமாகும். இது பெரிய அளவிலான சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பிற கௌரவம் மிக்க நிகழ்வுகளை நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல கூட்டத்துக்கான அறைகள், ஓய்வறைகள், அரங்குகள், ஆம்பிதியேட்டர் மற்றும் ஒரு வர்த்தக மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பரந்த அளவிலான நிகழ்வுகளை நடத்தும் திறன் கொண்டது. அதன் கம்பீரமான பல்நோக்கு மண்டபம் மற்றும் முழுமையான மண்டபம் ஆகியவை இணைந்து ஏழாயிரம் பேர் அமரும் திறனைக் கொண்டுள்ளன. இது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி ஓபரா ஹவுஸின் இருக்கை திறனை விட அதிகமாகும். இதன் அற்புதமான ஆம்பிதியேட்டர் 3,000 பேர் அமரும் திறன் கொண்டது.

மாநாட்டு மைய கட்டிடத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு இந்திய பாரம்பரியங்களால் ஈர்க்கப்பட்டு, நவீன வசதிகள் மற்றும் வாழ்க்கை முறையை தழுவி, கடந்த கால இந்தியாவின் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது. கட்டிடத்தின் வடிவம் சங்கு என்பதில் இருந்து பெறப்பட்டது. மேலும் மாநாட்டு மையத்தின் பல்வேறு சுவர்கள் மற்றும் முகப்புகள் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் 'சூரிய சக்தி', 'ஜீரோ டூ இஸ்ரோ' (பூஜ்ஜியத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்), விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளைக் கொண்டாடும், ஐம்பெரும்பூதம் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானம் ஆகியவற்றோடு  நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் பழங்குடி கலை வடிவங்கள் மாநாட்டு மையத்தை அலங்கரிக்கின்றன.

மாநாட்டு மையத்தில் 5ஜி வசதியுடன் கூடிய முழுமையான வைஃபை வசதி, 10ஜி இணைய இணைப்பு, 16 மொழிகளை ஊக்குவிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு அறை, பெரிய அளவிலான வீடியோ சுவர்களுடன் கூடிய மேம்பட்ட காணொலி காட்சி அமைப்புகள், உகந்த செயல்பாடு மற்றும் ஆற்றல் செயல்திறனை உறுதி செய்யும் கட்டிட மேலாண்மை அமைப்பு, ஒளியை குறைக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு சென்சார்களுடன் கூடிய ஒளி மேலாண்மை அமைப்பு, அதிநவீன டிசிஎன் (தரவு தொடர்பு இணையம்) அமைப்பு ஆகியவை மாநாட்டு மையத்தில் உள்ளன. ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் வசதி அமைப்பு ஆகியவை உள்ளன.

மேலும், ஐஇசிசி வளாகத்தில் ஏழு கண்காட்சி அரங்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பல்துறை தலமாக செயல்படுகின்றன. கண்காட்சி அரங்குகள் பல்வேறு வகையான தொழில்களுக்கு இடமளிக்கும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கட்டமைப்புகள் நவீன பொறியியல் மற்றும் கட்டிடக்கலை திறமைக்கு சான்றாகும்.

ஐஇசிசி.க்கு வெளியே உள்ள பகுதியின் வளர்ச்சியும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான வளாகத்தின் அழகை பூர்த்தி செய்கிறது மற்றும் இந்த திட்டத்தின் கவனமா திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு சான்றாகும். சிற்பங்கள், நிறுவப்பட்ட நிலைகள் மற்றும் சுவரோவியங்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன; இசை நீரூற்றுகள் அழகு மற்றும் காட்சியின் அம்சத்தை ஒருங்கிணைக்கின்றன; குளங்கள், ஏரிகள் மற்றும் செயற்கை நீரோடைகள் போன்ற நீர்நிலைகள் இப்பகுதியின் அமைதியையும் அழகியலையும் மேம்படுத்துகின்றன.

ஐஇசிசி.யில் பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது 5,500-க்கும் மேற்பட்ட வாகன நிறுத்துமிடங்களை வழங்கியதன் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. சிக்னல் இல்லாத சாலைகள் வழியாக எளிதாக அணுகுவது, பார்வையாளர்கள் எந்த இடையூறும் இல்லாமல் இடத்தை அடைவதை உறுதி செய்கிறது. மேலும், ஒட்டுமொத்த வடிவமைப்பு பங்கேற்பாளர்களின் வசதி மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது. இது ஐஇசிசி வளாகத்திற்குள் தடையின்றி செல்வதை எளிதாக்குகிறது.

பிரகதி மைதானத்தில் புதிய ஐஇசிசி வளாகத்தை மேம்படுத்துவது இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும். இது தொழில் மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இது தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். இது அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கும் மற்றும் சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில் மாற்றங்களின் பரவலை ஊக்குவிக்கும். பிரகதி மைதானத்தில் உள்ள ஐஇசிசி, தற்சார்பு இந்தியாவின் உணர்வில் இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சிறப்பை பிரதிபலிக்கிறது என்பதோடு ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

***

ANU/ANT/AG



(Release ID: 1943184) Visitor Counter : 143