பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சுமார் 70,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் வழங்கி, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 JUL 2023 2:07PM by PIB Chennai

வணக்கம்,

பணி நியமனக் கடிதங்களைப் பெறும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இன்று மறக்க முடியாத நாள். 1947 ஆம் ஆண்டில் இதே நாளில், அதாவது ஜூலை 22 அன்று, அரசியல் நிர்ணய சபையால் மூவர்ணக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த முக்கியமான நாளில் அரசுப் பணிக்கான நியமனக் கடிதங்களைப் பெறுவது ஒரு பெரிய உத்வேகமான நிகழ்வு ஆகும்.  அரசுப் பணியில் இருப்பவர்கள், மூவர்ணக் கொடியின் பெருமையை எப்போதும் உயர்த்தி, நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' எனப்படும் விடுதலைப் பெருவிழா நிகழ்ச்சியின் போது, நாடு வளர்ச்சி இலக்கை அடையும் நோக்கில் முன்னேறி வரும் நிலையில், அரசு பணியில் இருப்பது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது உங்கள் கடின உழைப்பின் பலன். நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்த அமிர்த காலத்தில்  நாட்டு மக்கள் அனைவரும் உறுதி பூண்டுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் உங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது. இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பத் தொடங்கியுள்ளன. இந்தியா மீது ஒரு ஈர்ப்பு உள்ளது. இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போதைய சூழலை நாம் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா வெறும் 9 ஆண்டுகளில் உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக மாறியிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என்று ஒவ்வொரு நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருவது அசாதாரணமான சாதனையாக இருக்கும். அதாவது ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சாதாரண குடிமக்களின் வருமானமும் அதிகரிக்கும். ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் இதை விட பெரிய வாய்ப்பு இருக்க முடியாது. இதை விட முக்கியமான நேரம் இருக்க முடியாது. நாட்டின் நலனுக்காக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பது எனது நம்பிக்கை. இந்த அமிர்த காலத்தில் நாட்டுக்கு சேவை செய்ய உங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து கஷ்டங்களை அகற்றுவதும் உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், எந்த நகரத்தில் அல்லது கிராமத்தில் இருந்தாலும், உங்கள் பணி பொதுமக்களின் சிரமங்களையும் பிரச்சினைகளையும் குறைக்கவும், அவர்களது வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கவும், 25 ஆண்டுகளுக்குள் நாட்டை வளர்ச்சி அடையச் செய்வதாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மக்களிடமிருந்து நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள், ஏழைகளிடமிருந்து நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் கடவுளின் ஆசீர்வாதங்களுக்கு சமமானவை. எனவே, பிறருக்கு உதவி செய்து, பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் செயல்பட்டால், புகழ் உயரும். வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் திருப்தி. எனவே அந்த திருப்தியை நீங்கள் காண்பீர்கள்.

நண்பர்களே,

இன்றைய நிகழ்வில் வங்கித் துறையைச் சேர்ந்த பலருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சியில் நமது வங்கித் துறை பெரும் பங்கு வகிக்கிறது. இன்று வங்கித் துறை மிகவும் வலுவானதாகக் கருதப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை. தேசிய நலனை விட அதிகார பேராசைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போது, பேரழிவு பல வழிகளில் நிகழ்கிறது. இதுபோல நாட்டில் நடந்த பேரழிவுகளுக்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நமது வங்கித் துறை இதனைக் கண்டுள்ளது. இப்போது டிஜிட்டல் யுகம். மக்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் வங்கி சேவைகளைப் பெறுகிறார்கள். ஆனால், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை வேறு, நோக்கங்கள் வேறு. அப்போது, அந்த அரசின் ஆட்சியில், போன் மூலமான வங்கி சேவை என்பது சாதாரண குடிமக்களுக்குக் கிடைக்கவில்லை. கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் வங்கி அமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்தது. 2014 ஆம் ஆண்டில், நீங்கள் அனைவரும் எங்களைத் தேர்ந்தெடுத்தன் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தீர்கள். 2014-ம் ஆண்டு இந்த ஆட்சி அமைந்த பிறகு, வங்கித் துறையையும், நாட்டையும் சிக்கலில் இருந்து மீட்க படிப்படியாக செயல்படத் தொடங்கினோம். பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, நிபுணத்துவத்தை அதிகரித்தோம். நாட்டில் உள்ள சிறிய வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்கினோம். முன்பு பல கூட்டுறவு வங்கிகள் மூழ்கத் தொடங்கின. சாமானியர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மூழ்கிக் கொண்டிருந்தது. இந்த அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கை, திவால் சட்டம் போன்ற சட்டங்களை உருவாக்கியது ஆகும். மேலும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். வங்கிகளில் மோசடி செய்தவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தோம். இன்று அதன் விளைவுகள் தெரிகின்றன. பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலும், வாராக்கடன் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்த பொதுத்துறை வங்கிகள், தற்போது சாதனை அளவாக லாபம் ஈட்டுகின்றன.

 

நண்பர்களே,

இந்தியாவின் வலுவான வங்கி அமைப்பும், வங்கியின் ஒவ்வொரு ஊழியரும், அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப கடந்த 9 ஆண்டுகளில் ஆற்றிய பணியும் நம் அனைவருக்கும் மிகவும் பெருமை தரக் கூடிய விஷயமாகும். வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்து வங்கிகளை நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த வங்கி ஊழியர்கள் என்னையோ அல்லது எனது கனவையோ ஒருபோதும் கைவிடவில்லை; அவர்கள் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டபோது எதிர்மறை எண்ணங்கள் பரவலாகப் பரப்பப்பட்டன. ஆனால் வங்கியைச் சேர்ந்த எனது நண்பர்கள் இரவு பகலாக உழைத்து ஏழைகளுக்கு ஜன்தன் கணக்கைத் தொடங்கினர். வங்கி ஊழியர்கள் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று மக்களின் வங்கிக் கணக்குகளைத் திறந்தனர். இன்று நாட்டில் சுமார் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. அதற்குக் காரணம் வங்கிகளில் பணிபுரியும் நமது ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பே ஆகும். வங்கி ஊழியர்களின் கடின உழைப்பால் மட்டுமே கொவிட் பாதிப்புக் காலத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தைச் செலுத்த முடிந்தது.

நண்பர்களே,

அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உதவ நமது வங்கித் துறையில் எந்த அமைப்பும் இல்லை என்று சிலர் முன்பு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த அரசாங்கங்களின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை அப்படி இல்லை. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்க அரசு முடிவு செய்தபோது, வங்கித் துறையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தொகையை அரசு இரட்டிப்பாக்கியபோது, வங்கிகள்தான் மேலும் மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தன. கொவிட் காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு உதவ அரசு முடிவு செய்தபோது, வங்கிகள் தான் அதிகபட்ச கடன்களை வழங்கி அந்த துறையை காப்பாற்ற உதவின.  1.5 கோடிக்கும் அதிகமான தொழில்முனைவோரின் சிறு தொழில்களை காப்பாற்றியதன் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களின் வேலைவாய்ப்புகள் காப்பாற்றப்பட்டன.  விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்துவதற்காக பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது, தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க வங்கியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தனர்.

நடைபாதையில் பொருட்களை விற்கும் சாலையோர வியாபாரிகளுக்காக அரசாங்கம் ஸ்வநிதி திட்டத்தைத் தொடங்கியபோது, வங்கியாளர்கள் ஏழை சகோதர சகோதரிகளுக்காக கடுமையாக உழைத்தனர். சில வங்கிக் கிளைகள் அவர்களை தனிப்பட்ட முறையில் அணுகி கடன் வழங்கி உதவியுள்ளன. இன்று, வங்கி ஊழியர்களின் கடின உழைப்பால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கி உதவிகள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு வங்கி ஊழியரையும் நான் பாராட்டுகிறேன். இப்போது வங்கித் துறையில் சேர்பவர்களுக்கு ஒரு புதிய ஆற்றலும் புதிய நம்பிக்கையும் புகுத்தப்படும். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற புதிய உத்வேகம் வளரும். உங்கள் கடின உழைப்பு தற்போதைய ஊழியர்களின் கடின உழைப்புடன் இணையும். வங்கித் துறையின் மூலம் ஏழை மக்களை வலுப்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, இன்று, நீங்கள் நியமனக் கடிதத்தைத் தவிர ஒரு தீர்மானக் கடிதத்துடன் திரும்பிச் செல்வீர்கள்.

நண்பர்களே,

சரியான நோக்கத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டு, சரியான கொள்கைகள் எடுக்கப்படும்போது, அதன் முடிவுகள் அற்புதமாகவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறந்ததாகவும் இருக்கும். இதற்கான ஆதாரங்களை நாடு சில நாட்களுக்கு முன்புதான் பார்த்தது. நித்தி ஆயோக்கின் அறிக்கையின்படி, வெறும் 5 ஆண்டுகளில், நாட்டில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே சென்றுள்ளனர். இந்தியாவின் இந்த வெற்றியில் அரசு ஊழியர்களின் கடின உழைப்பும் அடங்கும். ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு கழிவறை கட்டும் திட்டமாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி, நமது அரசு ஊழியர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சாதாரண குடிமக்களுக்கு இதுபோன்ற பல திட்டங்களைக் கொண்டு சென்றுள்ளனர். இந்தத் திட்டங்கள் ஏழைகளைச் சென்றடையும்போது, ஏழைகளின் மன உறுதியும் பெருமளவு உயர்த்தப்பட்டு, புதிய நம்பிக்கை ஊட்டப்படுகிறது. இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்தால், வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது. நிச்சயமாக நாட்டின் ஒவ்வொரு அரசு ஊழியரும் இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஏழைகளுக்கான ஒவ்வொரு நலத் திட்டங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த திட்டங்களுடன் பொதுமக்களை இணைக்க வேண்டும்.

நண்பர்களே

இந்தியாவில் குறைந்து வரும் வறுமைக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. நாட்டில் குறைந்து வரும் வறுமைக்கு மத்தியில் நடுத்தர வர்க்கம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கு கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று நாட்டில் உற்பத்தி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இன்று, நமது தொழிற்சாலைகள் மற்றும் நமது தொழில்கள் சாதனை அளவில் உற்பத்தியைக் கொண்டிருக்கின்றன. இதனால் நமது இளைஞர்கள்தான் அதிகம் பயனடைகிறார்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. இப்போது இந்தியாவில் இருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையும் ஊக்கமளிக்கிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் சாதனை படைத்து வருகிறது. இந்த காரணிகள் அனைத்தும் நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருகின்றன.

நண்பர்களே

 

இன்று உலகமே இந்தியாவின் திறமையை உற்று நோக்குகிறது. உலகின் பல வளர்ந்த நாடுகளில், மக்களின் சராசரி வாழ்க்கை வயது அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் மூத்த குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; உழைக்கும் மக்கள் தொகை குறைந்து வருகிறது. எனவே, இந்திய இளைஞர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. வளைகுடா நாடுகளில் இந்திய கட்டுமானத் துறை ஊழியர்கள், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்கு எந்த வகையான தேவை உள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு துறையிலும் இந்திய திறமையாளர்களுக்கு மரியாதை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால்தான் கடந்த 9 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 1.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் உலகளாவிய வாய்ப்புகளுக்கு தயாராகும் வகையில் 30 திறன் இந்தியா சர்வதேச மையங்களையும் அரசு அமைத்து வருகிறது. இன்று, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய ஐ.டி.ஐ.க்கள், புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கும் இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு வரை நம் நாட்டில் 380 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 700-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதேபோல், நர்சிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் திறன்கள் இந்திய இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றன.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் மிகவும் சாதகமான சூழலில் அரசு பணியில் சேருகிறீர்கள். நாட்டின் நேர்மறையான சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இப்போது உங்களுக்கு உள்ளது. புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகும் கற்றல் மற்றும் சுய மேம்பாட்டு செயல்முறையைத் தொடர வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில், ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி என்ற இணையதளக் கற்றல் தளத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த புதிய பொறுப்புக்காக உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பு ஒரு தொடக்கப் புள்ளியாகும். வாழ்க்கையில் மேலும் பல புதிய உயரங்களை அடைவீர்கள் என்று நம்புகிறேன். இந்த பொறுப்பை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

-----

 

ANU/PLM/KPG


(Release ID: 1942380) Visitor Counter : 171