பாதுகாப்பு அமைச்சகம்
24-வது கார்கில் வெற்றி தின நினைவாக புதுதில்லியில் இருந்து திராஸ் வரை, முப்படையின் அனைத்துப் பெண்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை இந்திய ராணுவம் தொடங்கியது
Posted On:
18 JUL 2023 1:39PM by PIB Chennai
1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, பாகிஸ்தானை வெற்றிகொண்ட 24-வது ஆண்டு தின நினைவாக பெண்களின் அசைக்கமுடியாத உணர்வை எடுத்துரைக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திலிருந்து லடாக்கின் திராசில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னம் வரையிலான முப்படையின் அனைத்துப் பெண்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை இந்திய ராணுவம் தொடங்கியது. இதனை ராணுவ தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே இன்று (18.07.2023) புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திலிருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், ராணுவ வீரர்களின் மனைவியர் நலச்சங்க தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டே பங்கேற்றார். இந்தப் பயணத்தில் பங்கேற்ற வீராங்கனைகளை ஏராளமாக திரண்டிருந்த மக்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டு தெரிவித்த ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே, சவால் மிக்க இந்தப் பயணம் மகளிர் சக்தியின் மன உறுதியையும், தேசக் கட்டமைப்பில் பெண்களின் முக்கியப் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
தற்போது பணியில் உள்ள 10 ராணுவப்பெண் அதிகாரிகள், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பெண் அதிகாரி, ராணுவத்தின் மூன்று வீராங்கனைகள், ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் மனைவியர் 8 பேர் உட்பட 25 பேர் இந்த மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளின் வழியாக சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்து இவர்கள் ஜூலை 25 அன்று, திராஸ் செல்வார்கள்.
***
SM/SMB/RJ/KRS
(Release ID: 1940556)
Visitor Counter : 190