பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 13 JUL 2023 5:53AM by PIB Chennai

எனது நண்பர், பிரான்ஸ் அதிபர் மேதகு திரு. இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில் ஜூலை 13 முதல் 14 வரை அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் செல்கிறேன்.

நான் அதிபர்  மேக்ரானுடன் பாரீஸில் நடைபெறும் ‘பிரான்ஸ் தேசிய தினம்’ அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதால், இந்தப் பயணம் சிறப்பு வாய்ந்தது. பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய முப்படை அணி பங்கேற்பதோடு, இந்திய விமானப்படை  விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்தாண்டு இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் வேரூன்றியுள்ள இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, கடல்சார் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

இந்த நீண்டகால மற்றும் காலத்தால் அழியாத கூட்டாண்மையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வது குறித்து அதிபர் மேக்ரானை சந்தித்து விரிவான விவாதங்களை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த 2022-ம் ஆண்டு எனது கடைசி பிரான்ஸ் பயணத்திற்குப் பிறகு, மிக சமீபத்தில் மே 2023-ல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி -7 உச்சிமாநாட்டின் போது அதிபர் மேக்ரானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பிரான்சின் பிரதமர் மேதகு திருமதி. எலிசபெத் போர்ன், நாடாளுமன்றத் தலைவர்களான மேதகு திரு. ஜெரார்ட் லார்ச்சர் மற்றும்  நாடாளுமன்ற சபாநாயகர் மேதகு திருமதி. யேல் பிரவுன்-பிவெட் உள்ளிட்ட பிரான்ஸ் தலைவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

எனது பயணத்தின் போது, துடிப்பான இந்திய சமூகம், இரு நாடுகளின் முன்னிலையில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரான்ஸ் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பயணம் நமது உத்தி சார்ந்த  கூட்டாண்மைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்.

பாரிஸில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு ஜூலை 15-ம் தேதி அரசு முறைப் பயணமாகச் செல்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளரும் எனது நண்பருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, ஃபின்டெக், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன. கடந்தாண்டு, அதிபர் ஷேக் முகமது பின் சயீதும் நானும் எங்கள் கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து உடன்பட்டோம். மேலும் எங்கள் இந்த உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவருடன் விவாதிக்க ஆவலாக இருக்கிறேன்.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தாண்டின் பிற்பகுதியில் யு.என்.எஃப்.சி.சி.சி நாடுகளின் 28 வது மாநாட்டை (சிஓபி -28) நடத்துகிறது. எரிசக்தி மாற்றம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ப பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் எதிர்பார்க்கிறேன்.

எனது ஐக்கிய அரபு அமீரகப் பயணம் நமது விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

***

AP/LK/ANT/RJ



(Release ID: 1939123) Visitor Counter : 208