விண்வெளித்துறை

குறுகிய காலத்திற்குள் விண்வெளித்துறை சார்ந்த 140 ஸ்டார்ட்அப்கள் மூலம் இந்தியா சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது ; முழு உலகமும் அதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது - டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 JUL 2023 12:58PM by PIB Chennai

விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை  முழு உலகமும் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

ஜி-20 4-வது பதிப்பின் விண்வெளி பொருளாதார தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் இன்று உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும் என்று கூறினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது விண்வெளிப் பயணத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகே தொடங்கினாலும், இன்று இந்திய நிறுவனங்கள் விண்வெளித்துறையில் சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, விண்வெளி தொடர்பான ஒப்பந்தங்கள் அவரது பயணத்தின் முக்கிய அங்கமாக இருந்ததாகவும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதாகக் கருதப்படும் நாடுகள் கூட, இன்று இந்தியாவையே எதிர்நோக்கி இருப்பதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.  விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும், உலகப் பொருளாதாரத்தில் விண்வெளிப் பொருளாதாரத்தின் பங்கை மேம்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவை எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

***

AP/CR/RJ(Release ID: 1937710) Visitor Counter : 147