பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 25 JUN 2023 5:13AM by PIB Chennai

அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023 அன்று எகிப்து அமைச்சரவையில் உள்ள இந்தியப் பிரிவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு (2023) குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த இந்தியப் பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரிவு எகிப்து பிரதமர் திரு முஸ்தபா மத்பவுலி தலைமையில் பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

 

எகிப்து பிரதமர் மத்பவுலியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியப் பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய துறைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்தியப் பிரதிகளிடமிருந்து நேர்மறையான கருத்துகள் வருவதை அவர்கள் பாராட்டினர். மேலும் பல துறைகளில் இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

இந்தியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முழுமையான அரசு ரீதியிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார். மேலும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் எகிப்துடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். 

 

வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளங்கள், மருந்து, மக்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

எகிப்து பிரதமர் மத்பவுலி மற்றும் ஏழு எகிப்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்:

 

எகிப்து மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் டாக்டர் முகமது ஷேக்கர் எல்-மர்காபி

 

எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சாமே ஷௌக்ரி

 

எகிப்து திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் திரு ஹாலா அல்-சயீத்

 

எகிப்து சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் ரனியா அல்-மஷாத்

 

எகிப்து நிதி அமைச்சர் டாக்டர் முகமது மாயித்

 

எகிப்து தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் அம்ர் தலாத்,

 

எகிப்து தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு அகமது சமீர்

 

***

AD/PLM/DL


(Release ID: 1935135) Visitor Counter : 180