ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கேரிசன் மைதானத்தில் நடைபெறும் 9-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் 15000 க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் தலைமை வகிக்கிறார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் உலகளாவிய கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்க உள்ளார்

Posted On: 20 JUN 2023 2:38PM by PIB Chennai

இந்த ஆண்டு (2023) 9 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி தேசிய அளவிலான கொண்டாட்டம் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நாளை ( 21.06.2023) குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் சகன்பாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், ஆயுஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு பொதுவான யோகா பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

ஜபல்பூரில் நடைபெறும்   முக்கிய யோகா நிகழ்ச்சியில் சுமார் 15,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் 'வசுதைவ குடும்பகத்திற்கான யோகா' என்பதாகும். இது இந்திய சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால், கடந்த 9 ஆண்டுகளில் யோகா உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். இந்த யோகா நிகழ்ச்சியில்  180 க்கும் மேற்பட்ட நாடுகளின்  பிரதிநிதிகள் பங்கேற்று யோகா மீதான தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த ஆண்டு  "சர்வதேச யோகா தினத்தை ஜூன் 21 அன்று ஐ.நா தலைமையகத்தில் சர்வதேச சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கொண்டாட இருப்பதாக தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் முன்மொழிவை அங்கீகரித்து சர்வதேச யோகா தினத்தை அறிவித்த ஐநாவின் தலைமையகத்தில் இந்த ஆண்டு சிறப்பு கொண்டாட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களையொட்டி 100 நாள் கவுன்ட்டவுன் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி நிறைவடைகிறது. இது ஒரு மக்கள் இயக்கமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் ஓஷன் ரிங் ஆஃப் யோகா என்ற கடல் வளையம் போன்ற தனித்துவமான அம்சத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்திய கடற்படை மற்றும் வணிகக் கப்பல்கள் பல்வேறு பெருங்கடல்களிலும் நட்பு நாடுகளின் துறைமுகங்களிலும் யோகா பயிற்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன.

ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா என்பது இந்த ஆண்டு யோகா கொண்டாட்டத்தின் மற்றொரு அம்சமாகும். இதில் வெளியுறவு அமைச்சகம் ஆயுஷ் அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஆர்க்டிக் பகுதியில் உள்ள இந்திய ஆராய்ச்சித் தளமான ஹிமாத்ரி மற்றும் அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆராய்ச்சித் தளமான பாரதி ஆகியவற்றில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து வட துருவம் மற்றும் தென் துருவப் பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்திய திபெத் எல்லை காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை, எல்லை சாலைகள் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஆயுதப்படைகள் சார்பில் யோகா நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் ஐ.என்.எஸ் விக்ராந்தில்  யோகா செயல்விளக்கம் நடைபெறும்.

 

இந்த ஆண்டு கிராம அளவிலும், சர்வதேச யோகா தினத்தை மக்கள் முழுமையாக கொண்டாட வேண்டும் என்று கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தவிர, தேசிய ஆயுஷ் இயக்கம், ஆயுஷ் கிராமின் கீழ் சுமார் 2 லட்சம் பொது சேவை மையங்கள், ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றன.

ஆயுஷ் அமைச்சகம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்) மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து மைகவ் (MyGov.in) தளத்தில், யோகா எனது பெருமிதம் என்ற பொருள்படும்  "யோகா மை பிரைட்" என்ற புகைப்பட போட்டியை நடத்துகிறது. இதில் தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் "யோகாசனங்கள்" செய்யும் புகைப்படத்தை புகைப்படத்திற்கு பொருத்தமான தலைப்புடன் பதிவேற்றம் செய்யலாம். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பணியிடங்களில் ஒய்-பிரேக் எனப்படும் குறுகிய யோகா பயிற்சிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மன அழுத்தத்தைக் குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும், பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் ஆயுஷ் அமைச்சகத்தால் இந்த ஒய்-பிரேக்  அறிமுகப்படுத்தப்பட்டது.

சர்வதேச யோகா தினம், முழுமையான அரசு  அணுகுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசின் அனைத்து முக்கிய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள முன்னணி யோகா நிறுவனங்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆயுதப்படைகள், தேசிய சாரணர் இயக்கம், நேரு யுவகேந்திரா மற்றும் பல்வேறு தரப்பினரும் 2023 சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.

*****

SM/PLM/MA/KRS


(Release ID: 1933663) Visitor Counter : 229