சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லைஃப் இயக்கம் குறித்த உத்வேகத்துடன் உலக சுற்றுச்சூழல் தினம் 2023 கொண்டாடப்பட்டது


உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்

Posted On: 05 JUN 2023 4:39PM by PIB Chennai

லைஃப் இயக்கம் குறித்த உத்வேகத்துடன் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2023, ஜூன் 5 அன்று ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்பதன் சுருக்கமாக லைஃப் என்ற கோட்பாட்டை கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி 26 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகம் செய்துவைத்தார். தண்ணீர் சேமிப்பு, எரிசக்தி சேமிப்பு, மின்னணுக் கழிவுகளை குறைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைத்தல், கழிவுப்பொருட்களைக் குறைத்தல், நீடிக்கவல்ல உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை பின்பற்றுதல் என்ற ஏழு மையப்பொருட்கள் லைஃப் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டன. இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல்தின மையப்பொருள் பிளாஸ்டிக் கழிவுக்கு தீர்வுகள் என்பதாக உள்ளது.

 சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு காண்பது பற்றி 2018-ம் ஆண்டு பிரதமர் திரு மோடி வெளியிட்ட அறைகூவலை அடுத்து, 2022-ல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட மக்கள் திரள் இயக்கம் பற்றிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதுபற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக எனது லைஃப் இணையப்பக்கம் (merilife.org) உருவாக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமான நிகழ்வுகளில் சுமார் 2 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். 1.8 கோடி மக்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 5 பேருக்கு மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் பரிசுகளை வழங்கினார்.

இதேபோல்  ஐநா சுற்றுச்சூழல் திட்டமும், இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகமும் இணைந்து 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகளை நடத்தின. இவற்றில் 25 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5,980 மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில் வெற்றி பெற்ற 3 மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929939

***

AD/SMB/AG/GK


(Release ID: 1930021) Visitor Counter : 196