பிரதமர் அலுவலகம்
குவாஹத்தியிலிருந்து புதிய ஜல்பைகுரி வரையிலான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனைகளையும் மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
"வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில், சுற்றுலாவையும், போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும்"
"புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கில் கடந்த 9 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத சாதனைகள் செய்யப்பட்டுள்ளன"
"இந்த அரசு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளது"
"உள்கட்டமைப்பு என்பது அனைவருக்குமானது. அது பாகுபாடு பார்க்காதது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது உண்மையான சமூக நீதி மற்றும் உண்மையான மதச்சார்பின்மையாகும்"
"உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய பயன்களை பெற்றுள்ளன"
"இந்திய ரயில்வே மக்களின் இதயங்கள், சமூகங்களை இணைப்பதுடன் அதன் அதிவேகத்தைப்போல் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் ஊடகமாக மாறியுள்ளது"
Posted On:
29 MAY 2023 1:16PM by PIB Chennai
அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் விரைவு ரயில், குவாஹத்தி- புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 182 வழித்தடக் கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதால் வடகிழக்கு மாநிலங்களின் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கு இந்த நாள் ஒரு மகத்தான நாள் என்று கூறினார். முதலாவதாக, வடகிழக்கு மாநிலங்களின் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இது வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் என்பதுடன், மேற்கு வங்க மாநிலத்தை இணைப்பதற்கான மூன்றாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும் என அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக, அசாம் மற்றும் மேகாலயாவில் சுமார் 425 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு அவை இன்று நாட்டுக்கு அரப்பணிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். மூன்றாவதாக, அசாமில் உள்ள லும்டிங்கில் புதிய டெமு/மெமு பணிமனை திறக்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இந்த முக்கியமான தருணத்தில் அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.
குவாஹத்தி -புதிய ஜல்பைகுரி வந்தே பாரத் விரைவு ரயில் அசாம் மற்றும் மேற்கு வங்கம் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார். இது பயணத்தை எளிதாக்கும் என்பதுடன், மாணவர்களுக்கும் பெரிய பயனளிக்கும் என்றார். சுற்றுலா மற்றும் வணிக வாய்ப்புகளையும் இது அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். இந்த வந்தே பாரத் விரைவு ரயில், மாதா காமாக்யா கோயில், காசிரங்கா, மனாஸ் தேசிய பூங்கா மற்றும் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு போக்குவரத்து இணைப்பை வழங்கும் என்று அவர் கூறினார். மேலும், இது ஷில்லாங், மேகாலயாவின் சிரபுஞ்சி, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் பாசிகாட் ஆகிய இடங்களுக்கான பயணம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் எண்ணற்ற சாதனைகளையும், முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் நாடு கண்டுள்ளது என்று குறிப்பிட்டார். சுதந்திர இந்தியாவில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரமாண்டமான நாடாளுமன்றக் கட்டிடம் குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகால ஜனநாயக வரலாற்றை எதிர்கால ஜனநாயகத்துடன் இணைக்கும் என்று அவர் கூறினார். கடந்த கால சூழல்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல முறைகேடுகள் நடைபெற்றதாக கூறினார். ஏழைகள் மற்றும் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் மீது அக்கறை செலுத்தப்படாத நிலை தற்போது மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஏழைகளுக்கு பாதுகாப்பான வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் இணைப்பு, மின்சாரம், குழாய் மூலமான எரிவாயு இணைப்புகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அதிகரிப்பு, சாலைக் கட்டமைப்புகள், ரயில்வே கட்டமைப்புகள், விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு நீர்வழித்தடங்கள், துறைமுகங்கள், மொபைல் இணைப்பு மேம்பாடு போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம். இதன் மூலம், இந்த அரசு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இலக்குகளை அடைவதற்கு அரசு முழு சக்தியுடன் உழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வேலை வாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சி வேகம் குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் பிற பின்தங்கிய பிரிவினரை வலுப்படுத்தி, அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும் அது பாகுபாடு இல்லாதது எனவும் அவர் தெரிவித்தார். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையின் தூய்மையான வடிவமே இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற வடிவம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகப்பெரிய பயனடைந்துள்ளன என்று பிரதமர் கூறினார். முந்தைய காலங்களில், வடகிழக்கு மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட, இல்லாமல் இருந்துவந்ததாக அவர் கூறினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்சாரம், தொலைபேசி, ரயில் போக்குவரத்து இணைப்பு, சாலைப்போக்குவரத்து இணைப்பு, விமானப் போக்குவரத்து இணைப்பு போன்றவை நல்ல நிலையில் இல்லாத நிலை இருந்ததாக அவர் தெரிவித்தார். வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராமங்கள் மற்றும் குடும்பத்தினர் முன்பு அடிப்படை வசதிகளின்றி, இருந்து வந்தாக அவர் தெரிவித்தார்.
சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதற்கான எடுத்துக்காட்டாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து இணைப்பை பிரதமர் எடுத்துக்காட்டினார். வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து இணைப்பு, அரசின் வேகமான செயல்பாடுகள் மற்றும் சிறந்த சிந்தனைக்கு சான்றாகும் என்று பிரதமர் கூறினார். காலனித்துவ காலத்திலும், அசாம், திரிபுரா மற்றும் வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரயில்வே இணைப்பு இருந்தாலும், இப்பகுதியின் இயற்கை வளங்களை சுரண்டும் நோக்கத்திலேயே அந்த இணைப்பு அமைக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். அதைத்தொடர்ந்து, சுதந்திரத்திற்குப் பிறகும், இப்பகுதியில் ரயில்வே விரிவாக்கம் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதைய அரசு இப்பகுதியின் மீது அதிகக் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
வடகிழக்கு பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் தேவைகளுக்கு இந்த அரசு, அதிக முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் கூறினார். இந்த மாற்றம் பரவலாக உணரப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில்வே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு சராசரியாக சுமார் 2500 கோடி ரூபாயாக இருந்தது என அவர் கூறினார். ஆனால் இந்த ஆண்டில் அந்த ஒதுக்கீடு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது நான்கு மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு என பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் அகல ரயில்பாதை கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசின் வளர்ச்சிப் பணிகளின் அளவும், வேகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது என பிரதமர் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் முன்பை விட மூன்று மடங்கு வேகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், முன்பை விட 9 மடங்கு வேகமாக இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இரட்டை ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் கடந்த 9 ஆண்டுகளில் மிக வேகமாக நடைபெறும் நிலையில் இலக்கை அடையும் நோக்கில் செயல்பாடுகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களின் பல தொலைதூரப் பகுதிகள் ரயில்வே கட்டமைப்பின் மூலம் இணைக்கப்படுவதற்கு வேகமான பணிகள் வழி வகுத்துள்ளதாக பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து மாநிலத்துக்கு இரண்டாவது ரயில் நிலையம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இப்போது, வந்தே பாரத், பாதி அதிவேக ரயில்கள் மற்றும் தேஜாஸ் விரைவு ரயில்கள் ஆகியவை, முன்பு குறுகிய பாதைகளாக இருந்த அதே பாதைகளில் இயங்குகின்றன என்று பிரதமர் கூறினார். இந்திய ரயில்வேயின், அதிக உயர் வசதிகள் கொண்ட விஸ்டா டோம் பெட்டிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
குவாஹத்தி ரயில் நிலையத்தில் முதல் திருநங்கையர் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த பிரதமர், இந்திய ரயில்வே, மக்களின் இதயங்களையும், சமூகங்களையும் இணைப்பதுடன், மக்களுக்கு வாய்ப்புகளை வேகமாக வழங்கும் ஊடகமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சமுதாயத்தில் நல்ல நடைமுறைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு கெளரவமான வாழ்க்கையை வழங்குவதற்கான முன்முயற்சி இது என்று அவர் கூறினார். ஒரு ரயில் நிலையம், ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கும் வகையில், விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த செயல் திறன் மற்றும் வேகம் ஆகியவை இணைந்திருப்பதால் மட்டுமே வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றப்பாதையில் சென்று, வளர்ந்த இந்தியாவை நோக்கி நடை போட வழி வகுத்துள்ளது என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் வடகிழக்குப் பகுதி மக்கள், வேகத்துடனும், சிறப்பு வசதிகளுடனும் பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்யும். இது இப்பகுதியில் சுற்றுலாவையும் மேம்படுத்தும். குவஹாத்தியை புதிய ஜல்பைகுரியுடன் இணைப்பதன் மூலம், இரண்டு நகரங்களையும், இந்த வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 30 நிமிடங்களில் இணைக்கும். இதுவரை இந்தத் தடத்தில் சென்ற ரயில்கள் இந்த நகரங்களுக்கிடையே பயணிக்க 6 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டன. புதிய வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் பயண நேரத்தில் சுமார் ஒரு மணிநேரம் மிச்சமாகும்.
புதிதாக மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் 182 கிலோமீட்டர் ரயில் பாதைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதிவேகத்தில் ரயில்கள் இயக்கம், ரயில்களின் பயண நேர குறைப்பு, மாசு இல்லாத போக்குவரத்து ஆகியவற்றுக்கு இந்த நடவடிக்கை உதவும். மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த ரயில்கள் மேகாலயா மாநிலத்திற்கும் செல்வதற்கான வழிவகைகளை இது ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனையையும் பிரதமர் திறந்து வைத்தார். இந்தப் புதிய வசதி, இந்தப் பகுதியில் இயங்கும் டெமு ரயில் பெட்டிகளை பராமரிக்க உதவும் என்பதுடன் சிறந்த செயல்பாட்டுக்கும் வழிவகுக்கும்.
******
(Release ID: 1928058)
AD/PLM/RS/KRS
(Release ID: 1928115)
Visitor Counter : 193
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam