பிரதமர் அலுவலகம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
28 MAY 2023 3:41PM by PIB Chennai
மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மூத்த பிரமுகர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, இதர பிரதிநிதிகளே, எனதருமை நாட்டு மக்களே!
ஒவ்வொரு தேசத்தின் வரலாற்று பயணத்திலும் சில தருணங்கள் அழிக்க முடியாதவையாக மாறும். மே 28, 2023 என்ற இன்றைய தினம், அதுபோன்ற புனிதமான தருணம். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை அமிர்த பெருவிழாவாக நாடு கொண்டாடி வரும் நேரத்தில், இந்திய மக்கள் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்னும் அன்பளிப்பை வழங்கி உள்ளார்கள். இது வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயக ஆலயம், இது. திட்டமிடலை யதார்த்தத்துடனும், கொள்கைகளை அமலாக்கத்துடனும், மன உறுதியை செயலாகத்துடனும், உறுதிப்பாட்டை வெற்றியுடனும் இணைக்கும் முக்கிய கருவியாக இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் விளங்கும்.
நண்பர்களே,
புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமாகவே புதிய மாதிரிகள் உருவாக்கப்படும். இன்று புதிய பாதைகளை வகுப்பதற்காக, புதிய இலக்குகளை புதிய இந்தியா நிர்ணயித்து வருகிறது. புதிய உற்சாகமும், புதிய ஆர்வமும் எழுந்துள்ளது. இந்தியாவின் உறுதித் தன்மை, மக்கள் சக்தி மற்றும் இந்திய மக்களின் உணர்வை ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் போது புனித செங்கோலும் இந்த புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சோழப் பேரரசு காலத்தில் சேவை, கடமை, தேசத்தின் பாதையின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் ஆதீன துறவிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாகியது. தமிழ்நாட்டில் துறவிகள் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்திருந்து நமக்கு ஆசி வழங்கினார்கள். அவர்களது வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நமக்கு எழுச்சியூட்டும்.
நண்பர்களே,
இந்தப் புதிய நாடாளுமன்றம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும், வலிமையையும் வழங்கும். தங்களது வேர்வை மற்றும் கடின உழைப்பால் பணியாளர்கள் இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நமது அர்ப்பணிப்பால் இதனை மேலும் புனிதமாக மாற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நமது கடமை. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்பதோடு, பல தலைமுறைகளுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமல்படுத்தப்படும் புதிய சட்டங்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை மாற்றும். கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம் மற்றும் கடமை ஆகிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு வளமான, வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடித்தளமாக திகழும் என்று நான் நம்புகிறேன். நன்றி!
***
AD/BR/RK
(Release ID: 1928046)
Visitor Counter : 443
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam