பிரதமர் அலுவலகம்

ஒடிசாவில் பல ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

Posted On: 18 MAY 2023 2:41PM by PIB Chennai

ஜெய் ஜெகநாத்!

 

ஒடிசா ஆளுநர் திரு. கணேஷி லால் அவர்களே, முதலமைச்சரும் & எனது நண்பருமான திரு. நவீன் பட்நாயக் அவர்களே, மத்திய அமைசர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே!

 

இன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்கள் வந்தே பாரத் ரயிலைப் பரிசாகப் பெறுகின்றனர். வந்தே பாரத் ரயில் நவீன இந்தியாவின் அடையாளமாக மாறி வருகிறது.  இன்று, வந்தே பாரத் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கும்போது, அது இந்தியாவின் வேகம் மற்றும் முன்னேற்றம் இரண்டையும் பிரதிபலிக்கிறது. இப்போது யாராவது கொல்கத்தாவில் இருந்து பூரிக்கு தரிசனத்திற்காக சென்றாலும், அல்லது பூரியில் இருந்து கொல்கத்தாவிற்கு ஏதாவது வேலைக்காக சென்றாலும், இந்த பயணத்திற்கு 6.5 மணி நேரம் மட்டுமே ஆகும். இது நேரத்தை மிச்சப்படுத்தும்; வர்த்தகம் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்தவும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதற்காக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

யாரேனும் ஒருவர் தனது குடும்பத்துடன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும் போது, ரயில்தான் அவரது முதல் விருப்பமும். முன்னுரிமையும் ஆகும். இன்று, ஒடிசாவின் ரயில் மேம்பாட்டிற்காக, பூரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டுதல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் ஒடிசாவில் ரயில் பாதைகளை 100% மின்மயமாக்குதல் போன்ற பல முக்கிய பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்திற்காகவும் ஒடிசா மக்களை நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே,

 

பல ஆண்டுகளாக எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் டெல்லி மற்றும் சில முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய இந்தியா இந்த பழைய சிந்தனையை விட்டு முன்னேறி வருகிறது. இன்றைய புதிய இந்தியா, புதிய தொழில்நுட்பங்களைத் தானே உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் புதிய வசதிகளை விரைவாகக் கொண்டு செல்கிறது. இந்தியா சொந்தமாக வந்தே பாரத் ரயில்களை உருவாக்கியுள்ளது. இன்று, இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்கி, நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.

 

2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில், ஒடிசாவில் ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவது 20 கி.மீக்கும் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 300 கி.மீ-ஆக அதிகரித்துள்ளது. சுமார் 300 கி.மீ. நீளமுள்ள குர்தா-போலங்கிர் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஒடிசா மக்களுக்கு தெரியும். இன்று இந்தத் திட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புதிய 'ஹரிதாஸ்பூர்-பாரதீப்' ரயில் பாதையாக இருந்தாலும் சரி, அல்லது டிட்லாகர்-ராய்ப்பூர் வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியாக இருந்தாலும் சரி, ஒடிசா மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் இப்போது நிறைவடைந்து வருகின்றன.

 

பிரதமர் சௌபாக்யா  திட்டத்தின் கீழ், இந்திய அரசு 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்கியுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஒடிசாவில் சுமார் 25 லட்சம் வீடுகளும், மேற்கு வங்கத்தில் 7.25 லட்சம் வீடுகளும் இதில் அடங்கும். இப்போது கற்பனை செய்து பாருங்கள், இந்த திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், என்ன நடந்திருக்கும்? இன்றும் 21-ம் நூற்றாண்டில் 2.5 கோடி குடும்பங்களின் குழந்தைகள் இருளில் படித்து, இருளில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பர்.

 

நண்பர்களே,

 

உள்கட்டமைப்பு தொடர்பான இந்தியாவின் சாதனைகளும் இன்று ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடியை ஒதுக்கும்போது, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுடன் ஒரு பகுதியை இணைக்கும் போது, அதன் தாக்கம் பயணிகளின் வசதியோடு முடிந்து விடுவதில்லை. இது விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரை புதிய சந்தைகளுடன் இணைக்கிறது;  சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா இடங்களுடன் இணைக்கிறது; அது மாணவர்களை அவர்கள் விரும்பும் கல்லூரிகளுடன் இணைக்கிறது. இந்த சிந்தனையுடன், இன்று இந்தியா நவீன உள்கட்டமைப்பில்  முதலீடு செய்து வருகிறது.

 

நண்பர்களே,

 

ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் முழு இந்தியாவின் வளர்ச்சி வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். ஜெகநாதர் மற்றும் காளியின் அருளால், புதிய மற்றும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நாம் நிச்சயமாக அடைவோம். இந்த விருப்பத்துடன், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் ஜெய் ஜெகநாத்!

***

AD/CR/DL



(Release ID: 1926107) Visitor Counter : 121