பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளி திருமதி என். சுப்புலட்சுமியின் கடிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 12 APR 2023 8:33PM by PIB Chennai

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமக்கு வீடு கிடைத்த மகிழ்ச்சியை நெகிழ்ச்சியான கடிதம் வாயிலாகத் திருமதி என். சுப்புலட்சுமி வெளிப்படுத்தியிருந்ததை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பிரசார் பாரதியின் முன்னாள் வாரிய உறுப்பினர் திரு சி.ஆர். கேசவனை புதுதில்லியில் சந்தித்துப் பேசியதாக திரு மோடி தெரிவித்தார். திரு சி. ஆர். கேசவனின் இல்லத்தில் சமையல் பணி புரியும் மதுரையைச் சேர்ந்த திருமதி சுப்புலட்சுமியின் கடிதத்தை அவர் பிரதமரிடம் பகிர்ந்தார். திருமதி சுப்புலட்சுமி, தமது வீட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்து, நன்றியையும் ஆசிகளையும் அளிப்பதாகக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று திரு சி.ஆர்.கேசவனை சந்தித்தேன். அவரது இல்லத்தில் சமையல் பணி புரியும் என். சுப்புலட்சுமி அவர்களின் நெகிழ்ச்சியான கடிதத்தை அவர் பகிர்ந்திருந்தார். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட என். சுப்புலட்சுமி அவர்கள், நிதி நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான சவால்களை சந்தித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டையும் பெற்றுள்ளார்.”

“இது, தனது முதல் இல்லம் என்பதையும், அதனால் தனக்கு மதிப்பும், கௌரவமும் கிடைக்கிறது என்பதையும் தமது கடிதத்தில் என். சுப்புலட்சுமி அவர்கள் தெரிவித்திருந்தார். அவரது இல்லத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்ததோடு, தமது நன்றியையும், ஆசிகளையும் வழங்கியிருந்தார். இது போன்ற ஆசிகள் தான், மகத்தான வலிமையின் ஆதாரமாகும்.”

“பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தினால் என். சுப்புலட்சுமி அவர்களைப் போல எண்ணற்ற மக்களின் வாழ்வு மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு வீடு, அவர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பெண்களின் வளர்ச்சியிலும் இத்திட்டம் முன்னோடியாக உள்ளது.”

***

SMB/BR/KPG


(Release ID: 1916168) Visitor Counter : 171