குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் கஜ் உத்சவ்-2023-ஐ தொடங்கி வைத்தார்
Posted On:
07 APR 2023 2:19PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஏப்ரல் 7, 2023) காசிரங்கா தேசியப் பூங்காவில் கஜ் உத்சவ்-2023-ஐத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றியக் குடியரசுத் தலைவர், இயற்கைக்கும், மனித நேயத்திற்கும் இடையில் மிகவும் புனிதமான உறவு காணப்படுவதாகத் தெரிவித்தார். இயற்கையை மதிக்கும் கலாச்சாரம் நமது நாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இந்தியாவில் இயற்கையும், கலாச்சாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரியத்தில் யானைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன. இது செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு. எனவே, யானைகளைப் பாதுகாப்பது நமது தேசத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பின் முக்கியப் பகுதியாகும்.
தொடர்ந்து உரையாற்றியக் குடியரசுத் தலைவர், ”இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மனித இனத்திற்கும், பூமிக்கும் நன்மை பயக்கும். காடுகள் மற்றும் பசுமையான பகுதிகள் கார்பனை உள்ளெடுத்துக் கொள்கின்றன. எனவே, யானைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாம் அனைவரும் பயனடைவதோடு, பருவநிலை மாற்றத்தின் சவால்களையும் எதிர்கொள்ளலாம். இதுபோன்ற முயற்சிகளில் அரசுடன் இணைந்து சமுதாயத்தின் பங்களிப்பும் அவசியம்” எனக் கூறினார்.
யானைகள் மிகவும் புத்திசாலி மற்றும் உணர்திறன் கொண்ட விலங்குகளாக கருதப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். யானைகள் மற்றும் பிற உயிரினங்கள் மீது மனிதர்களிடம் உள்ள அதே அனுதாபமும் மரியாதையும் நமக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து தன்னலமற்ற அன்பை நாம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
'மனிதன்-யானை மோதல்' பல நூற்றாண்டுகளாகப் பிரச்சினையாக இருந்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்த மோதலுக்கான காரணம் மனிதர்கள் தான். யானைகளைப் பாதுகாப்பது, அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் யானை வழித்தடங்களைத் தடையின்றி வைத்திருப்பது ஆகியவை "ப்ராஜக்ட் எலிஃபண்ட்"டின் முக்கிய நோக்கங்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நோக்கங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று அவர் கூறினார்.
அசாமின் காசிரங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காக்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதனால்தான் இவற்றிற்கு 'உலகப் பாரம்பரியச் சின்னம்' என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டிலேயே காட்டு யானைகளின் எண்ணிக்கையில் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, காசிரங்கா கஜ்-உத்சவை ஏற்பாடு செய்வதற்கு மிகவும் பொருத்தமான இடம் எனவும், ப்ராஜக்ட் எலிஃபண்ட் மற்றும் கஜ்-உத்சவ் ஆகியவற்றின் வெற்றிக்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-----
VJ/CR/KPG
(Release ID: 1914690)
Visitor Counter : 208