பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் கர்நாடகாவின் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 12 MAR 2023 2:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மற்றும் மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுவது ஆகியவை இந்த முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும்.

 

          கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், புவனேஸ்வரி தேவியையும், ஆதிசுஞ்சனகிரி மற்றும் மேலுக்கோட்டை குருக்களையும் வணங்கித் தொடங்கினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கர்நாடக மக்களை சந்திக்கும்  வாய்ப்பைப் பெற்ற மகிழ்ச்சியைப்  பிரதமர் வெளிப்படுத்தினார். தனக்கு ஆசிகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மாண்டியா மக்கள் அளித்த வரவேற்பு குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் ஆசிகளின் இனிமையில் திளைப்பதாகக் கூறினார். மாநில மக்களின் அன்பு மற்றும் பாசத்தை எடுத்துரைத்த பிரதமர், இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனின் கோரிக்கைகளையும் விரைவான வளர்ச்சியுடன் நிறைவேற்றப் பாடுபடுகிறது என்றார். ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான இன்றைய உள்கட்டமைப்புத் திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின்  முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

 

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையைச் சுற்றியுள்ள வேகமான போக்குவரத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இதுபோன்ற நவீன மற்றும் உயர்தர விரைவுச் சாலைகளைப் பற்றி நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்று கூறினார். இந்த விரைவுச் சாலை மைசூரு-பெங்களூரு இடையிலான பயண நேரத்தைப் பாதியாகக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். மைசூரு-குஷால்நகர் நான்கு-வழி நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் இந்தத் திட்டங்கள் ஊக்கம் அளிப்பதோடு வளர்ச்சிக்கான  வாயில்களைத் திறக்கும் என்று கூறினார். இந்தத் திட்டங்களுக்காகக் கர்நாடக மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் பின்னணியில் இரண்டு சிறந்த ஆளுமைகளைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். "கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் சர்.எம். விஸ்வேஸ்வரய்யா இருவரும் தேசத்திற்கான புதிய பார்வையையும் வலிமையையும் அளித்தவர்கள் என்றார். இந்தப் பெருமக்கள் சவால்கள் மற்றும் நெருக்கடிகளை கூட வாய்ப்பாக மாற்றி உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டவர்கள். அவர்களின் முயற்சியின் பலனைத் தற்போதைய தலைமுறை அனுபவிக்கும்   அதிர்ஷ்டம் பெற்றுள்ளார் என்று பிரதமர் கூறினார். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாட்டில் மேம்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சி நடைபெற்று வருவதாகப் பிரதமர் கூறினார். "பாரத்மாலா மற்றும் சாகர்மாலா திட்டங்கள் இன்று இந்தியா மற்றும் கர்நாடகாவின் நிலப்பரப்பை மாற்றுகிறது" என்றும் பிரதமர் கூறினார். உலகம் முழுவதும் கரோனா தொற்று நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​நாட்டின் உள்கட்டமைப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு வேலைகள், முதலீடுகள் மற்றும் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை கொண்டு வருவதைப் பற்றிப் பிரதமர் தொடர்ந்து பேசினார். கர்நாடகாவில் மட்டும் நெடுஞ்சாலைகள் தொடர்பான திட்டங்களில் அரசு 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

கர்நாடகாவின் முக்கிய நகரங்களாக பெங்களூரு மற்றும் மைசூருவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் இந்த இரண்டு மையங்களுக்கு இடையேயான இணைப்பு பல கோணங்களில் முக்கியமானது என்றார். இரண்டு நகரங்களுக்கிடையில் பயணிக்கும் போது அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் அடிக்கடி புகார் கூறுவதாகவும் விரைவுச்சாலையானது இரு நகரங்களுக்கு இடையேயான நேரத்தை ஒன்றரை மணிநேரமாக குறைத்து பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

 

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை பாரம்பரிய நகரங்களான ராம்நகர் மற்றும் மாண்டியா வழியாகச் செல்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், மாதா  காவிரியின் பிறப்பிடத்தை அணுகுவதும் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டார். பெங்களுரு-மங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் மூலம் இப்பகுதியில் மழைக்காலங்களில் நிலச்சரிவுகளால் துறைமுக இணைப்பை பாதிக்கும் பெங்களூரு-மங்களூரு நெடுஞ்சாலைக்கு தீர்வு ஏற்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அதிகரித்த இணைப்பு மூலம் இப்பகுதியில் உள்ள தொழில்களும் செழிக்கத் தொடங்கும் என்றார். 

 

முந்தைய அரசுகளின் அலட்சிய அணுகுமுறையை விமர்சித்த பிரதமர், ஏழைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார். 2014ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களின் வலியைப் புரிந்துகொண்ட அரசு ஆட்சிக்கு வந்தது என்றார். அரசு ஏழைகளுக்கு சேவை செய்யத் தொடர்ந்து உழைப்பதோடு வீட்டு வசதிகுழாய் மூலம் நீர், இலவச எரிவாயு இணைப்பு, மின்சாரம், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை கவலைகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகள் எளிதாக வாழ்வதை அரசு நிறைவான பணிகள் மூலம் உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கான அரசின் அணுகுமுறையைப் பற்றிக் கூறிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் லட்சக்கணக்கான வீடுகள் கர்நாடகாவில் கட்டப்பட்டுள்ளன என்றும், 40 லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாகக் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்  அப்பர் பத்ரா திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பல தசாப்தங்களாக முடங்கிக் கிடக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களும் வேகமாக முடிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் நீர்ப்பாசனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். கர்நாடக விவசாயிகள் எதிர்கொள்ளும் சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவது மட்டுமின்றி, 2.75 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்நாடக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பிரதமர் கிசான் சம்மான் நிதி  மூலம் 12,000 கோடி ரூபாயை அரசாங்கம் நேரடியாகச் செலுத்தியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். மாண்டியா பகுதிக்கு மத்திய அரசு மட்டும் 600 கோடி வழங்கியுள்ளது. பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 6000 ரூபாய் தவணையில் 4000 ரூபாயை சேர்த்ததற்காக கர்நாடக அரசைப் பிரதமர் பாராட்டினார். "இரட்டை இயந்திர ஆட்சியில், விவசாயம் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறது", என்றார்.

 

பயிர்களின் நிச்சயமற்ற தன்மையால் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளில் நிலுவைத் தொகை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்று பிரதமர் கூறினார். எத்தனால் அறிமுகப்படுத்தப்பட்டால் இந்தப் பிரச்னைக்குப் பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். மகத்தான விளைச்சலைப் பொறுத்தவரை அதிகப்படியான கரும்பு எத்தனாலை உற்பத்தி செய்யும். இது விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யும். கடந்த ஆண்டு சர்க்கரை ஆலைகள் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனாலை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்று கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்க உதவியதாக அவர் தெரிவித்தார். சர்க்கரை ஆலைகளில் இருந்து 2013-14ம் ஆண்டு முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்குப் பணம் சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் கரும்பு விவசாயிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் உதவித்தொகை, வரித் தள்ளுபடி போன்ற பல ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

இந்தியா வாய்ப்புகளின் பூமி என்றும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம் தேசத்தின் மீது தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் இந்தியா சாதனை படைக்கும் அளவில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றதாகவும், கர்நாடகா மிகப்பெரிய பயனாளியாக 4 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சாதனை முதலீடு இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பம் தவிர, பயோடெக்னாலஜி, பாதுகாப்புத் துறைக்கான  உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தி போன்ற தொழில்கள் மிக வேகமாக விரிவடைந்து வருவதாகவும், அதே நேரத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில்  முதலீடுகளைக் கண்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

 

இரட்டை என்ஜின் அரசின் முயற்சியால் வரலாறு காணாத வளர்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தான் வளர்ச்சி பணியில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் சிலர் தனக்கு சவக்குழி தொண்டுவதையும்  பிரதமர் சுட்டிக்காட்டினார். பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு ஏழைகளின் வாழ்க்கை எளிதாவதற்கான பணிகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார். கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் இந்திய மக்களின் ஆசீர்வாதம் தனது பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது என்று தனது எதிர்ப்பாளர்களை பிரதமர் எச்சரித்தார். இன்றைய திட்டங்களுக்காக கர்நாடக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, “கர்நாடகத்தின் வேகமான வளர்ச்சிக்கு இரட்டை எஞ்சின் அரசாங்கம் அவசியம்” என்று தனது உரையை  பிரதமர் நிறைவு செய்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் திரு. பஸ்வரா பொம்மை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  திரு. பிரகலாத் ஜோஷி மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுமலதா அம்பரீஷ் மற்றும் கர்நாடக அரசின் அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 

பின்னணி

உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான வளர்ச்சியானது, நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த இணைப்பை உறுதி செய்வதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாக உள்ளது. இந்த முயற்சியில் பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டமானது NH-275 இன் பெங்களூரு-நிடகட்டா-மைசூரு பிரிவின் 6-வழிப்பாதையை உள்ளடக்கியது. சுமார் 8480 கோடி ரூபாய் செலவில் 118 கிமீ நீளம் கொண்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரு மற்றும் மைசூரு இடையேயான பயண நேரத்தை சுமார் 3 மணி நேரத்தில் இருந்து சுமார் 75 நிமிடங்களாகக் குறைக்கும். இது சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.

 

மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 92 கிமீ வரையிலான சுமார் 4130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம் பெங்களூருவுடன் குஷால்நகரின் இணைப்பை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். பயண நேரம் சுமார் 5 மணி நேரத்திலிருந்து 2.5 மணிநேரமாகக் குறையும்.

***

SRI/CJL/DL


(Release ID: 1906183) Visitor Counter : 190