பிரதமர் அலுவலகம்
பேரிடர் அபாயத் தணிப்புக்கான தேசிய தளத்தின் 3வது அமர்வின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் உரையாற்றினார்
பிரதமரின் சிந்தனையின்படி பேரிடர் அபாயத் தணிப்பு மற்றும் மேலாண்மை மக்கள் இயக்கமாக மாறிவருகிறது : பி.கே.மிஸ்ரா
"பிரதமரின் 10-அம்ச திட்டம், பேரிடர் அபாயத் தணிப்பு மேலாண்மையில் பெண்களின் தலைமையில் உள்ளூர் திறன்கள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது "
"மக்களின் தேவைக்கு ஏற்ப பேரிடர் அபாயத் தணிப்பு மேலாண்மை அமைப்பை நிபுணத்துவப்படுத்துதல் மற்றும் தலையீடுகளை உருவாக்குதல் ஆகியவை முன்னோக்கி செல்லும் வழியாகும் "
"மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவவும், அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் முடியாவிட்டால், நமது பணியின் முழு நோக்கமும் நிறைவேறாது"
Posted On:
11 MAR 2023 6:18PM by PIB Chennai
பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு.பி.கே.மிஸ்ரா இன்று, பேரிடர் அபாயத் தணிப்புக்கான தேசிய தளத்தின் 3வது அமர்வின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றினார். 2013 முதல் தேசிய தளத்தின் மூன்று அமர்வுகளிலும் கலந்து கொண்ட திரு மிஸ்ரா, உரையாடலின் விரிவாக்கம் மற்றும் விவாதங்களின் ஆக்கபூர்வமான தன்மை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தியா முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்ற இந்த நிகழ்வு பிரதமர் திரு நரேந்திர மோடியின் எண்ணப்படி பேரிடர் அபாயத் தணிப்பு மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.
பேரிடர் அபாயங்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி புதிய அபாய வடிவங்கள் உருவாகி வரும் நேரத்தில் பேரிடர் அபாய மேலாண்மையை உள்ளூர்மயமாக்க வேண்டியதன் அவசியத்திற்கு தீர்வு காணும் வகையில், "மாறி வரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலை உருவாக்குதல்" என்ற அமர்வின் கருப்பொருளின் முக்கியத்துவத்தை முதன்மைச் செயலாளர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் 10-அம்ச திட்டம் பற்றி குறிப்பிட்ட திரு மிஸ்ரா, இது உள்ளூர் திறன்கள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவதன் அவசியத்தை, குறிப்பாக பேரிடர் அபாய மேலாண்மையில் பெண்களின் தலைமைத்துவத்தை வலியுறுத்துகிறது என்றார். பிரதமரின் பத்து அம்ச திட்டம் மற்றும் செண்டாய் கட்டமைப்புக்கு, அமர்வுகளின் விவாதங்கள் செயல் வடிவம் கொடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பணியின் தொடர்புடையவர்கள் இரண்டு முக்கிய கருப்பொருள்களை தொடர வேண்டியது அவசியம் என திரு மிஸ்ரா பரிந்துரைத்தார். முதலாவதாக, மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் அபாய மேலாண்மை அமைப்பைத் நிபுணத்துவப்படுத்துவது, இரண்டாவதாக, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் மற்றும் தலையீடுகளை உருவாக்குவதாகும்.
முதல் கருப்பொருளைப் பொறுத்தவரை, தேசிய, மாநிலம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து நிலைகளிலும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களும் தொழில்ரீதியாகப் பயிற்சி பெற்ற ஊழியர்களாலும் அதற்கேற்ற கட்டமைப்பு, நிர்வாக உட்கட்டமைப்பு, நவீன பணியிடங்கள் மற்றும் அவசர கால செயல்பாட்டு மையங்கள் போன்ற தேவையான வசதிகளுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமரின் முதன்மை செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த முறை ஸ்மார்ட் பேரிடர் மேலாண்மை அமைப்பு (எஸ்.டி.எம்.எஸ்) மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ) இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பேரிடர் முன்னெச்சரிக்கை, பேரிடர் தணிப்பு ஆகியவை பேரிடர் மீட்பைப் போன்று முறைப்படுத்தப்பபட வேண்டும் எனவும் திரு.மிஸ்ரா கூறினார். மாநிலங்களுக்கு போதுமான வசதிகள் உள்ளதாகவும், அவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ), தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றால் ஒருங்கிணைந்த முறையில் ஆதரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திட்ட வளர்ச்சியின் இரண்டாவது கருப்பொருளைப் பொறுத்தவரை, கொள்கைகளும் திட்டங்களும் கைகோர்த்துச் செல்வதாக திரு.மிஸ்ரா கூறினார். “திட்டங்களின் வளர்ச்சியில் அனைத்துத் துறைகளும் பணியாற்ற வேண்டும். இதற்கு பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், நீர்வளம், கல்வி, நகர்ப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும்” என்றார்.
பேரிடர் மேலாண்மையின் பயன்பாட்டை முன்னெடுப்பதற்காக, துறைகளுக்கிடையேயான திட்டங்களை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ள வேண்டுமென என்.டி.எம்.ஏ-விடம் கேட்டுக்கொண்ட முதன்மைச் செயலர், பேரிடர் குறைப்புக்கான நமது வழக்கமான திட்டங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறியாத வரையில், பேரிடர் மேலாண்மையை முன்னணியில் கொண்டு வருவது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இதனை முறைப்படுத்துவதற்கு அனைத்து ஆதரவும் கிடைப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். சூறாவளி, பேரிடர்களைத் தாங்கும் உட்கட்டமைப்பு போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களாலான பேரிடர் மேலாண்மை கருவிகள் மிகவும் பயனுள்ளதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த மூன்று வருடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், இதை நாம் ஒருமித்த கவனத்துடன் தொடர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஒரு வாரத்தில் எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பேரிடர் பாதிப்புக் குறைப்புக்கான சென்டாய் கட்டமைப்பின் முறைகளை செயல்படுத்துவதில் மெதுவான முன்னேற்றமே உள்ளது என்று எச்சரிப்புடன் முதன்மைச் செயலாளர் தனது உரையை முடித்தார். “பேரிடர் பாதிப்புக் குறைப்புக்கான இந்த 15 வருட சென்டாய் கட்டமைப்பின் காலத்தில் பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. ஆனால், உலகம் சென்டாய் இலக்குகளை அடைவதில் இருந்து விலகி இருக்கிறது. பாதுகாப்பான நாடு மற்றும் பாதுகாப்பான உலகத்தை நோக்கிச் செல்வதற்கு, அதிக வலிமை மிக்க பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கு நாம் நம்மையே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்” என்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் கூறினார்.
***
SRI/PKV/CR/DL
(Release ID: 1905968)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam