பிரதமர் அலுவலகம்
‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்' குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரை
“நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது”
“இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு விவாதத்திலும் உள்ள கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் மாற்றாக அமைந்துள்ளன”
“உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது”
“துணிச்சல், தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசு இன்று உங்கள் முன் உள்ளது, நீங்களும் இணைந்து செயல்பட வேண்டும்”
“இந்திய வங்கி அமைப்புமுறையின் ஆற்றல், அதிகபட்ச மக்களுக்கு பயன் அளிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது”
“நிதி உள்ளடக்கம் சம்பந்தமான அரசின் கொள்கைகள், முறைசார் நிதி அமைப்புமுறையில் கோடிக்கணக்கான மக்களை அங்கம் வகிக்க செய்துள்ளன”
“உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் தொலைநோக்குப் பார்வையும் தற்சார்பு இந்தியாவும் தேச பொறுப்புகளாகும்”
“உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது என்பது இந்திய குடிசைத் தொழில்களின் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல. இந்தியாவிலேயே திறன் கட்டமைப்ப
Posted On:
07 MAR 2023 10:29AM by PIB Chennai
‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்’ குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணைய வழிக் கருத்தரங்குகள் தொடரில் இது பத்தாவதாகும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இதுபோன்ற நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது என்று கூறினார்.
கொரோனா பெருந்தொற்றின்போது இந்தியாவின் நிதி மற்றும் நிதி சார்ந்த கொள்கையின் தாக்கத்தை ஒட்டுமொத்த நாடுகளும் கண்டதாகக் கூறிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டினார். ஒரு காலத்தில் உலக நாடுகள் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்த்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இந்திய பொருளாதாரம், நிதிநிலை அறிக்கை மற்றும் இலக்குகள் குறித்த விவாதங்கள் எப்போதுமே கேள்வியுடன் தொடங்கி, முடிந்ததை சுட்டிக்காட்டினார். நிதி சீர்திருத்தம், வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சுட்டிக் காட்டிய அவர், விவாதங்களின் தொடக்கம் மற்றும் முடிவில் நிலவி வந்த கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தற்போது மாற்றாக விளங்குவதாகக் கூறினார். சமீபத்திய சாதனைகள் குறித்துப் பேசிய பிரதமர், “உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்று இருப்பதாகவும், 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் அதிக முதலீடுகள் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கிய அங்கம் வகிக்கச் செய்துள்ள உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் தொடர்ந்து பெருகி வருவதாக அவர் கூறினார். இந்த வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
புதிய திறன்களுடன் இந்தியா முன்னேறி வரும் வேளையில், இந்திய நிதித் துறையில் ஈடுபட்டுள்ளோரின் பொறுப்பு அதிகரித்திருப்பதாக பிரதமர் கூறினார். 8-10 ஆண்டுகளுக்கு முன்பு சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த உலகின் நிதி அமைப்புமுறையும் வங்கி அமைப்புமுறையும் தற்போது லாபம் அடைந்து வளர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். துணிச்சல், தெளிவு மற்றும் நம்பிக்கையுடன் கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசு இன்று செயல்படுகிறது. “இந்திய வங்கி அமைப்புமுறையின் ஆற்றல், அதிகபட்ச மக்களுக்கு பயன் அளிப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது”, என்று பிரதமர் வலியுறுத்தினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு அரசு அளித்து வரும் ஆதரவை உதாரணமாகக் கூறிய பிரதமர், வங்கி அமைப்புமுறை அதிகபட்ச துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “ பெருந்தொற்றின் போது ஒரு கோடியே 20 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உதவி அரசால் அளிக்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி பிணையில்லா உறுதிக் கடனாக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இனி இந்த நிறுவனங்களை நாடிச் சென்று போதுமான நிதியை வங்கிகள் வழங்குவது மிக முக்கியம்”, என்றும் அவர் கூறினார்.
நிதி உள்ளடக்கம் சம்பந்தமான அரசின் கொள்கைகள், முறைசார் நிதி அமைப்புமுறையில் கோடிக்கணக்கான மக்களை அங்கம் வகிக்கச் செய்துள்ளன என்று திரு மோடி தெரிவித்தார். வங்கி உத்தரவாதம் இல்லாமல் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முத்ரா கடன்களை வழங்கி கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் வாயிலாக முதன் முறையாக 40 லட்சத்திற்கும் அதிகமான சாலையோர வியாபாரிகளும், சிறு வணிகர்களும் வங்கிகளின் உதவியைப் பெற்றனர். சிறிய ரக தொழில்முனைவோரை கடன்கள் வேகமாக சென்றடைவதற்காக கட்டணத்தைக் குறைத்து, வேகத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ளுமாறு பங்குதாரர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் முன்முயற்சி பற்றி பேசிய பிரதமர், இது விருப்பத்தேர்வு சார்ந்த விஷயம் அல்ல, மாறாக, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவை தேசிய பொறுப்பு என்று பிரதமர் வலியுறுத்தினார். உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கும் தற்சார்பு இந்தியாவிற்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான உற்சாகத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, அதிகரிக்கப்பட்ட உள்ளூர் பொருட்களின் உற்பத்தி மற்றும் இதுவரை இல்லாத வகையிலான ஏற்றுமதிகளின் வளர்ச்சி பற்றி பேசினார். “சரக்கு மற்றும் சேவைகளில் நமது ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது உயர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை உணர்த்துகிறது”, என்று கூறிய பிரதமர், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரை மாவட்ட அளவில் ஊக்குவிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறு நிறுவனங்கள், தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்புகள் போன்ற பங்குதாரர்களைக் கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது என்பது இந்திய குடிசைத் தொழில்களின் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல என்று பிரதமர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார். “இந்தியாவிலேயே திறன் கட்டமைப்பை உருவாக்கி நாட்டின் பணத்தை எந்தத் துறைகளில் சேமிக்கலாம் என்பதை நாம் ஆராய வேண்டும்” என்று கூறி, உயர்கல்வி மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிக பணம் செலவாவதாகக் குறிப்பிட்டார்.
நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவு ரூ. 10 லட்சம் கோடி என்ற மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருப்பது பற்றியும் பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் பற்றியும் பேசிய அவர், பல்வேறு புவியியல் சார்ந்த பகுதிகள் மற்றும் பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்காக பணிபுரியும் தனியார் துறைக்கு ஆதரவளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். “அதிகபட்ச பலனை நாடு அடைவதற்காக அரசைப் போலவே தனியார் துறையும் தங்களது முதலீடுகளை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வரி சம்பந்தமான நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய விவாதம் பற்றி பேசிய பிரதமர், கடந்த காலங்களுக்கு மாறாக ஜி.எஸ்.டியின் அறிமுகம், வருமான வரி மற்றும் பெரு நிறுவன வரிக் குறைப்பு முதலியவற்றால் இந்தியாவில் வரிச் சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகக் கூறினார். இதனால் வரி வசூல் வளர்ச்சியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2013-14 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வரி வருவாய் 11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 200% உயர்ந்து, 33 லட்சம் கோடியாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். தனிநபர் வருமான வரித் தாக்கல் எண்ணிக்கை 2013-14 ஆம் ஆண்டின் 3.5 கோடியில் இருந்து 2020-21இல் 6.5 கோடியாக உயர்ந்தது. “வரி செலுத்துவது என்பது தேசக் கட்டமைப்புடன் நேரடித் தொடர்புடைய கடமையாகும். மக்கள், அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கும், தாங்கள் செலுத்தும் வரி, மக்கள் நலனுக்காக செலவிடப்படுகிறது என்ற அவர்களது நம்பிக்கைக்கும் அடிப்படை வரி உயர்வு சான்றாகும்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்திய திறமைகள், உள்கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள், இந்தியாவின் நிதி அமைப்புமுறையை உச்சத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று அவர் கூறினார். “நான்காம் தொழிற்புரட்சி யுகத்தில் இந்தியா வடிவமைத்தத் தளங்கள், உலக நாடுகளுக்கு முன் மாதிரியாகச் செயல்படுகின்றன” என்று தெரிவித்து, அரசின் மின்னணு சந்தை தளம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முதலியவற்றை உதாரணமாக பிரதமர் குறிப்பிட்டார். 75-ஆவது சுதந்திர ஆண்டில் 75 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் மின்னணு வாயிலாக மேற்கொள்ளப்பட்டு, யு.பி.ஐ சேவையின் பரவலான விரிவாக்கத்தை எடுத்துக்காட்டி இருப்பதாக பிரதமர் பெருமிதம் கொண்டார். “ரூபே மற்றும் யு.பி.ஐ ஆகியவை அதிக பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான தொழில்நுட்பம் மட்டுமல்ல, உலக அளவிலான நமது அடையாளங்களும் கூட. புதிய கண்டுபிடிப்புகளுக்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கும் நிதி உள்ளடக்கம் மற்றும் வளர்ச்சிக்கான காரணியாக யு.பிஐ திகழ வேண்டும், அதற்காக நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். நமது நிதி நிறுவனங்கள் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்றி, தங்களது சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.
சில தருணங்களில் சிறிய முயற்சி கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்க கூடும் என்று தெரிவித்த பிரதமர், ரசீது இல்லாமல் பொருட்கள் வாங்குவதை உதாரணமாக சுட்டிக்காட்டினார். இதனால் எந்த ஒரு தீமையும் இல்லை என்ற உணர்வு எழுந்துள்ளதை கோடிட்டுக் காட்டி, நாட்டின் நலனுக்காக ரசீதின் பிரதியை பெற்றுக் கொள்வது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். “ஏராளமான மக்களிடையே நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”, என்று குறிப்பிட்டார்.
தமது உரையின் நிறைவுப் பகுதியில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு நபரையும் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டு, இந்த தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றுமாறு அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார். சிறந்த அளவில் பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க அவர் வலியுறுத்தினார். “இது போன்ற எதிர்காலம் சார்ந்த யோசனைகளை விரிவாக ஆலோசிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 1904748)
AP/RB/RR
(Release ID: 1904832)
Visitor Counter : 232
Read this release in:
Assamese
,
Bengali
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada