இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஐஐஎம் ராய்ப்பூரில் நடைபெற்ற யூத்20 ஆலோசனை நிகழ்வின் முதல் நாளில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இளைஞர்கள்

Posted On: 26 FEB 2023 1:01PM by PIB Chennai

ஐஐஎம் ராய்ப்பூர் வளாகத்தில் இளைஞர்களுக்கான இரண்டு நாள் ஆலோசனை நிகழ்வான யூத்20 மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது. நேற்று 2023 பிப்ரவரி 25-ம் தேதியன்று நடைபெற்ற முதல் நாள் கலந்துரையாடலில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர், மாணவர்களின் மிகுந்த உற்சாகத்திற்கிடையே கலந்துரையாடினார். முன்னதாக, நேற்று காலை இந்நிகழ்ச்சியை மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணையமைச்சர் ரேணுகா சிங், ஐஐஎம் ராய்பூர் இயக்குனர் டாக்டர் ராம் குமார் ககானி உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

 

மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தனது உரையின் போது, திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியா தற்போது உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்அப் அமைப்பாக உள்ளதென மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் பெருமிதம் தெரிவித்தார்.

 

அமைச்சருடனான உரையாடலின் போது, இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, சுய அதிகாரமளித்தல், சர்வதேச மாணவர்கள் தாய்நாட்டிற்கு பங்களிப்பது போன்றவை குறித்து பல கேள்விகளை இளைஞர்கள் எழுப்பினர்.

 

இந்த  Y20 ஆலோசனை நிகழ்வானது இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பங்களித்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான சரியான தருணம் என மத்திய  இணையமைச்சர் ரேணுகா சிங் தெரிவித்தார். இந்த Y20 ஆலோசனையின் போது நடைபெறும் விவாதங்கள் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்றும், "வாசுதேவ் குடும்பகம்" என்ற இலக்கை அடைய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

"முரண்களுக்குத் தீர்வுக்கான இளைஞர்களை இணைத்தல்" என்ற தலைப்பில் முதல் குழு விவாதம் நடத்தப்பட்டது. பின்னர், அமைதியை உருவாக்குதல், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் அமைதி காத்தல் என்ற தலைப்பில் இரண்டின் இரண்டாவது குழு விவாதமும், சமூகங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல் குறித்து 3-வது குழு விவாதமும் நடைபெற்றது.

 

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இளைஞர்களுடன் நடத்திய உரையாடல் நிகழ்வு, முக்கியமானதாக அமைந்தது. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்,  தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். சத்தீஸ்கரின் இளைஞர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, இணையற்ற வீரம், சுறுசுறுப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

 

முடிவில், ஐஐஎம் ராய்பூர் ஏற்பாடு செய்த யூத்20 கலந்தாய்வு நிகழ்ச்சியானது, இளம் தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைத்து யோசனைகளை பரிமாறிக்கொள்வதிலும், அமைதியான மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்க புதுமையான தீர்வுகளை உருவாக்குவதிலும் மாபெரும் வெற்றியைக் கண்டது.

 

***

SRI / CR / DL



(Release ID: 1902562) Visitor Counter : 116