பிரதமர் அலுவலகம்

இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் தேசிய மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்


"நம்பிக்கை, விரிவாற்றல் மற்றும் மீட்சியின் சின்னம் நீங்கள் "

"உங்கள் தொழில்முறை என்னை ஈர்க்கிறது"

"தேவையுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மையும், நிலைத்தன்மையும், தொடர்ச்சியும், நம்பிக்கையும் நிர்வாகத்திலும் பரவுகின்றன"

"தேசிய சுகாதார தொழில்முறை மற்றும் சார்பு தொழில்களுக்கான ஆணைய மசோதாவை அரசு கொண்டு வந்ததால், இயன்முறை மருத்துவர்கள் தங்கள் தொழிலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றனர்"

"சரியான தோரணை, சரியான பழக்கம், சரியான உடற்பயிற்சிகள் பற்றி மக்களுக்குக் கற்பிக்கவும்"

"யோகாவின் நிபுணத்துவமும், சக்தியும் ஒரு இயன்முறை மருத்துவருடன் இணைந்தால், பன்மடங்கு அதிகரிக்கிறது"

"துருக்கி பூகம்பம் போன்ற சூழ்நிலைகளில் இயன்முறை மருத்துவஃகளின் காணொலி ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்"

"இந்தியா ஃபிட் ஆகவும், சூப்பர் ஹிட்டாகவும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது"

Posted On: 11 FEB 2023 10:26AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய இயன்முறை மருத்துவர்கள்  சங்கத்தின் (ஐஏபி) 60வது தேசிய மாநாட்டில் காணொலிச் செய்தி வாயிலாக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆறுதல், நம்பிக்கை, விரிவாற்றல் ஆகிவற்றின் சின்னமாகவும், குணமளிப்பவர்களாகவும் திகழும்  இயன்முறை மருத்துவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  ஒரு இயன்முறை மருத்துவர், உடல் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் மட்டுமல்லாமல், உளவியல் சவாலை சமாளிக்க நோயாளிக்கு தைரியத்தையும் தருகிறார்.

இயன்முறை மருத்துவத் தொழிலின் நிபுணத்துவத்தைப் பாராட்டிய பிரதமர், தேவைப்படும் காலங்களில் ஆதரவை வழங்கும் அதே மனப்பான்மை ஆட்சியிலும் இருப்பதை எடுத்துக் காட்டினார். வங்கிக் கணக்குகள், கழிப்பறைகள், குழாய் நீர், இலவச மருத்துவ சிகிச்சை, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் ஆதரவு நீடிப்பதால், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் கனவு காணும் தைரியத்தைப் பெறுகின்றனர். அவர்களின் ஆற்றலுடன் அவர்கள் புதிய உயரங்களை அடையும் திறன் கொண்டவர்கள் என்பதை நாங்கள் உலகிற்குக் காட்டியுள்ளோம் என்று பிரதமர்  கூறினார்.

இதேபோல், நோயாளியின் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் தொழிலின் பண்புகளைத் தொட்டு, இந்தியாவும் தற்சார்பை நோக்கி நகர்கிறது. நோயாளி மற்றும் மருத்துவர் இருவரும் இந்தப் பிரச்சனையில் பணியாற்ற வேண்டும் என்பதால் இந்தத் தொழில் ‘சப்கா பிரயாஸ்’ என்பதை அடையாளப்படுத்துகிறது, இது பல திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா, பெண் குழந்தை பாதுகாப்பு  போன்ற மக்கள் இயக்கங்களில்  பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

இயன்முறை மருத்துவத்தின் உணர்வை விளக்கிய பிரதமர், இது நிலைத்தன்மை, தொடர்ச்சி மற்றும் நம்பிக்கை போன்ற பல முக்கிய செய்திகளைக் கொண்டுள்ளது, அவை ஆட்சியின் கொள்கைகளுக்கும் முக்கியமானவை என்றார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் , இயன்முறை மருத்துவர்கள்  ஒரு தொழிலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றனர் என்று பிரதமர் கூறினார், நாட்டின் சுகாதார அமைப்பில் இயன்முறை மருத்துவர்களின்  பங்களிப்பை அங்கீகரிக்கும் தேசிய சுகாதார தொழில்களுக்கான  ஆணைய மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இது உங்கள் அனைவருக்கும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேலை செய்வதை எளிதாக்கியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் நெட்வொர்க்கில் இயன்முறை மருத்துவர்களையும் அரசு சேர்த்துள்ளது. இது நோயாளிகளைச் சென்றடைவதை எளிதாக்கியுள்ளது என்று மோடி கூறினார். உடல் தகுதி இந்தியா  இயக்கம், கேலோ இந்தியா ஆகியவற்றின் சூழலில் இயன்முறை மருத்துவர்களுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகளையும் பிரதமர் விவரித்தார்.

சரியான தோரணை, சரியான பழக்கவழக்கங்கள், சரியான உடற்பயிற்சிகள் பற்றி மக்களுக்குக் கற்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு இயன்முறை மருத்துவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். “உடற்தகுதி தொடர்பாக மக்கள் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியம். கட்டுரைகள் மற்றும் விரிவுரைகள் மூலம் இதைச் செய்யலாம். மேலும் எனது இளம் நண்பர்கள் அதை சலனப் படங்கள் மூலமாகவும் செய்யலாம்” என்று அவர் யோசனை தெரிவித்தார்.

இயன்முறை மருத்துவம் பற்றிய தமது தனிப்பட்ட அனுபவத்தை எடுத்துரைத்த பிரதமர், “யோகாவின் நிபுணத்துவம் ஒரு இயன்முறை மருத்துவருடன் இணைந்தால், அதன் சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது என்பது எனது அனுபவம். பெரும்பாலும் பிசியோதெரபி தேவைப்படும் உடலின் பொதுவான பிரச்சனைகள் சில நேரங்களில் யோகாவிலும் தீர்க்கப்படுகின்றன. அதனால்தான் நீங்கள் இயன்முறை மருத்துவதுடன்  யோகாவையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்கள் தொழில்முறை ஆற்றலை அதிகரிக்கும்’’ என்றார்.

இயன்முறை மருத்துவத் தொழிலின் பெரும்பகுதி மூத்த குடிமக்களுடன் இணைந்திருப்பதால், அனுபவம் மற்றும் மென்திறன்களின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அத்தொழிலை ஆவணப்படுத்தி, கல்வித் தாள்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம் உலகிற்கு முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காணொலி ஆலோசனை மற்றும் தொலை மருத்துவ வழிகளை உருவாக்குமாறு மருத்துவர்களிடம் திரு மோடி கேட்டுக் கொண்டார். துருக்கியில் நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளில் அதிக எண்ணிக்கையிலான இயன்முறை மருத்துவர்கள் தேவைப்படுவதால், இந்திய இயன்முறை மருத்துவர்கள் மொபைல் போன்கள் மூலம் உதவ முடியும் என்றும், இயன்முறை மருத்துவர்கள் சங்கம்  இந்தத் திசையில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "உங்களைப் போன்ற வல்லுநர்களின் தலைமையில், இந்தியா ஃபிட்டாகவும், சூப்பர் ஹிட்டாகவும் இருக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

PKV / DL



(Release ID: 1898251) Visitor Counter : 168