பிரதமர் அலுவலகம்

வேலைவாய்ப்பு முகாமின் கீழ் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 71,000 பணியாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 20 JAN 2023 1:47PM by PIB Chennai

வணக்கம்!

நண்பர்களே,

2023-ஆம் ஆண்டின் முதலாவது வேலைவாய்ப்பு முகாம், இது. வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமல்லாது கோடிக்கணக்கான குடும்பங்களிடையே இன்றைய நிகழ்வு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கானோர் அரசு பணிக்கான நியமனங்களை பெற உள்ளனர்.

மத்திய அரசு மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் தொடர் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற முகாம்கள் நமது அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. பணி நியமன நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். மத்திய அரசு பணிக்கான பணி நியமன நடைமுறை, முன்பு இருந்ததைவிட தற்போது சீரமைக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

 

பணி நியமன நடைமுறையில் நீங்கள் காணும் வெளிப்படைத்தன்மையும், வேகமும் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் பதவி உயர்வு பிரச்சனையை தீர்த்து வைப்பதில் நமது அரசு உறுதி பூண்டுள்ளது. இன்று பணி நியமன கடிதம் பெற்றிருப்போருக்கு இது ஓர் புதிய தொடக்கம். அரசு பணியில் நீங்கள் நியமிக்கப்படும்போது அது சேவையாக கருதப்படுமேயன்றி, பணியாக அல்ல. தனியார் துறையில் தான் பணியாக கொள்ளப்படும். நாட்டின் 140 கோடி மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நீங்கள் அதிர்ஷ்டமாக கருத வேண்டும்.

தொழில்நுட்பம் வாயிலான சுய கற்றலை என்பது இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். வாழ்வில் எத்தகைய உயர்வை நீங்கள் அடைந்தாலும் கற்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. வேகமாக மாறிவரும் இந்தியாவில் வேலைவாய்ப்பும் சுய வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று, சுய வேலைவாய்ப்பு துறை பெருமளவு முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வரும் காரணத்தால் கடந்த எட்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீடுகளால் அபரிமிதமான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாரத் நெட் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு கிராமத்திலும் அகண்ட அலைவரிசை இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களை உலகின் இதர பகுதிகளுடன் இணைக்கும் போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

நாட்டை முன்னெடுத்துச் செல்லும் திறன் உங்கள் அனைவரிடமும் உள்ளது. தொடர்ந்து முன்னேறுவதுடன் உங்களது கடமையை சிறப்பாகச் செய்திடுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி.

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 1892410)

SMB/RB/KRS



(Release ID: 1893548) Visitor Counter : 115