பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 JAN 2023 9:21PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

 

மும்பையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்!

 

மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ராகுல் நர்வேகர் அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  இங்குள்ள ஏராளமான என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்!

 

இன்று, மும்பையின் வளர்ச்சி தொடர்பாக ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இங்கு அர்ப்பணிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. மும்பைக்கு மிக முக்கியமான மெட்ரோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நவீனமயமாக்கல், சாலைகளை மேம்படுத்தும் மிகப்பெரிய திட்டம் என அனைத்து திட்டங்களும் மும்பை நகரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும். சிறிது நேரத்திற்கு முன்பு, மும்பையின் சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பெற்றனர். அத்தகைய பயனாளிகள் மற்றும்  மும்பை மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சகோதர சகோதரிகளே,

 

இன்று இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பெரிய கனவுகளை கண்டு அந்த கனவுகளை நிறைவேற்றவும் செய்கிறது. கடந்த நூற்றாண்டில் நீண்ட காலமாக வறுமையைப் பற்றி விவாதிப்பதிலும், உலகத்திடம் உதவி கேட்பதிலும், எப்படியாவது வாழ்க்கையைச் சமாளிப்பதிலும் மட்டுமே செலவிடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இந்தியாவின் பெரிய முன்முயற்சிகளில் இப்போது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப இந்தியர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ, அதே நம்பிக்கை உலகிலும் தெரிகிறது. இப்போதுதான் திரு ஷிண்டேதமது டாவோஸ்

அனுபவத்தை விவரித்தார். இந்த உணர்வு எல்லா இடங்களிலும் தெரியும். இந்தியாவைப் பற்றி இன்று உலகில் நேர்மறை எண்ணம் இருக்கிறது. இந்தியா தனது திறனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதே இதற்கு காரணம். விரைவான வளர்ச்சிக்கும் செழுமைக்கும் தேவையானவற்றை இந்தியா செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்று அனைவரும் உணர்ந்துள்ளனர். இன்று இந்தியா முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையுடன் உள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜின் உத்வேகமும், சுயராஜ்யம், நல்லாட்சி ஆகியவற்றின் உணர்வும் இன்றைய மத்திய அரசு மற்றும் இரட்டை இன்ஜின் அரசுகளிடம் வலுவாக வெளிப்படுகிறது.

 

சகோதர சகோதரிகளே,

 

ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணம் மோசடிகளால் தொலைந்து போன காலங்களை நாம் பார்த்திருக்கிறோம்.  கோடிக்கணக்கான நாட்டு மக்கள் முன்பு மிகவும் அவதிப்பட்டனர். கடந்த எட்டு ஆண்டுகளில் அணுகுமுறையை மாற்றியுள்ளோம். இன்று இந்தியா எதிர்கால சிந்தனை மற்றும் நவீன அணுகுமுறையுடன் செயல்படுகிறது. இன்று நாட்டில் தரமான வீடுகள், கழிவறைகள், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு, இலவச உயர்தர மருத்துவ சிகிச்சை, மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் போன்ற பலவிதமான வசதிகள் வேகமாக வளர்ந்து வரும் வேளையில், மறுபுறம் நவீனத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  ஒரு காலத்தில் கற்பனையாகப் பார்க்கப்பட்ட நவீன உள்கட்டமைப்பு, இன்று நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், நாட்டின் இன்றைய தேவைகள் மற்றும் எதிர்கால செழிப்புக்கான அம்சங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன. உலகின் முக்கிய பொருளாதாரங்கள் இன்று நெருக்கடியில் உள்ளன. ஆனால் இதுபோன்ற கடினமான காலங்களில் கூட, இந்தியா, 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கி ஒவ்வொரு வீட்டிலும் உணவு கிடைக்க வகைசெய்கிறது. இத்தகைய சூழலிலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்து வருகிறது. இது இன்றைய இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்பதுடன் இது வளர்ந்த இந்தியாவுக்கான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும்.

 

சகோதர, சகோதரிகளே,

 

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது நகரங்களின் பங்கு மிக முக்கியமானது. மகாராஷ்டிராவைப் பற்றி நாம் பேசினால், அடுத்த 25 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் பல நகரங்கள் இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தப் போகின்றன. எனவே, மும்பை நகரை எதிர்காலத்திற்கு ஏற்ப தயார்படுத்துவது இரட்டை இன்ஜின் அரசின் முன்னுரிமை ஆகும். மும்பையில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் விரிவாக்கத்திலும் எங்கள் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. 2014-ம் ஆண்டு வரை மும்பையில் 10 முதல் 11 கிலோமீட்டர் தூரத்திற்குத்தான் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இரட்டை இன்ஜின் அரசு அமைந்தவுடன், அது வேகமாக விரிவடைந்தது. பின்னர் சிறிது காலம் பணி மந்தமடைந்தது. ஆனால் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் வருகையால், இப்போது வேலைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. மும்பையில் 300 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் பாதைக் கட்டமைப்பை நோக்கி நாம் வேகமாக செல்கிறோம்.

 

நண்பர்களே,

 

இன்று, நாடு முழுவதும் ரயில்வேயை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பை உள்ளூர் ரயில் கட்டமைப்பும் மகாராஷ்டிராவின் ரயில் இணைப்புகளும் இதன் மூலம் பயனடைகின்றன. ஒரு காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே கிடைத்த  நவீன வசதிகள், தூய்மை மற்றும் அதிவேக அனுபவங்களை சாமானியர்களுக்கும் வழங்க இரட்டை இன்ஜின் அரசு விரும்புகிறது. எனவே, ரயில் நிலையங்களும் இன்று விமான நிலையங்கள் போல் உருவாகி வருகின்றன. இப்போது நாட்டின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையமும் நவீன முறையில்  மாற்றப்பட உள்ளது. நம்முடைய இந்த பாரம்பரியம் இப்போது 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் பெருமையாக உருவாகப் போகிறது. உள்ளூர் மற்றும் நீண்ட தூர ரயில்களுக்கு தனித்தனி வசதிகள் இருக்கும். சாதாரண பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதும், பயணத்தை எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும். இந்த நிலையம் ரயில்வே வசதிகளை மட்டும் கொண்டதாக அல்லாமல், மல்டிமாடல் இணைப்புகளின் மையமாகவும் இருக்கும். அதாவது, பேருந்து, மெட்ரோ, டாக்ஸி, ஆட்டோ என அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும். இது பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும். இதுவே நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் நாம் உருவாக்கப் போகும் மல்டிமாடல் இணைப்பாகும்.

 

நண்பர்களே,

 

மெட்ரோவின் விரிவான நெட்வொர்க், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற நவீன ரயில்வே இணைப்புகள் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் மும்பை அதிநவீனமாக   மாற உள்ளது. ஏழைத் தொழிலாளிகள் முதல் ஊழியர்கள், கடைக்காரர்கள், பெரிய தொழில் செய்பவர்கள் என அனைவரும் இங்கு வசிக்க வசதியாக இருக்கும். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு செல்வது எளிதாகிவிடும்.  மும்பையின் சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது இரட்டை இன்ஜின் அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

 

சகோதர சகோதரிகள்,

 

இன்று நாம் நாட்டின் நகரங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாசுக் கட்டுப்பாடு முதல் தூய்மை வரை நகரங்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுகின்றன. அதனால்தான் மின்சார போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். உயிரி எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து முறையை விரைவாகக் கொண்டுவர விரும்புகிறோம். ஹைட்ரஜன் எரிபொருளை உள்ளடக்கிய போக்குவரத்து அமைப்புக்கு விரைவான முறையில் பணிகள் நாட்டில் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, நமது நகரங்களில் உள்ள குப்பை மற்றும் கழிவுப் பிரச்சனையை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அகற்ற தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கழிவுகளில் இருந்து வளம் என்ற பெரும் இயக்கம் நாட்டில் நடந்து வருகிறது. ஆறுகளில் மாசடைந்த நீர் வராத வகையில், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

நண்பர்களே,

 

 ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மும்பை போன்ற நகரங்களில், உள்ளாட்சி அமைப்புகளும் விரைவான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  மும்பையின் வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. மும்பையின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முறையாக நிதி ஒதுக்கப்படுகிறது. மும்பைக்கான ஒதுக்கீடு சரியான முறையில் செலவிடப்பட வேண்டும்.  வளர்ச்சியே எங்களின் மிகப்பெரிய முன்னுரிமை. பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக வளர்ச்சிப் பணிகளுக்கு ஒருபோதும் தடை போடுவதில்லை.  முதன்முறையாக, நகரத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சாலையோர வியாபாரிகளுக்காக ஒரு திட்டத்தைத் தொடங்கினோம். இந்த சிறு வியாபாரிகளுக்கு வங்கிகளில் இருந்து குறைந்த மற்றும் பிணையமில்லாத கடன்களை உறுதி செய்துள்ளோம். நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் சாலையோர வியாபாரிகள் இதன் பலனைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவிலும் ஐந்து லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் இரட்டை இன்ஜின் அரசு இல்லாததால் பணிகளில் தடைகள் உருவாகின. இதனால், அனைத்து பயனாளிகளும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க சிறந்த ஒருங்கிணைந்த அமைப்பு இருக்க வேண்டியது அவசியம்.

 

நண்பர்களே,

 

ஸ்வநிதி என்பது வெறும் கடன் வழங்கும் திட்டம் மட்டுமல்ல.  சாலையோர வியாபாரிகளின் பொருளாதார பலத்தை உயர்த்துவதற்கான இயக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்த ஸ்வநிதி சுயமரியாதை பற்றியது. ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பயிற்சி அளிப்பதற்காக மும்பையில் 325 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஸ்வநிதி திட்டப் பயனாளிகள்  குறுகிய காலத்தில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர். படிப்பறிவில்லாதவர்கள் என்று நாம் கருதுபவர்கள், தங்கள் மொபைல் போன்கள் மூலம் 50,000 கோடி ரூபாய்க்கு இணையதளப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.  அனைவரின் முயற்சியும் இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியே உதாரணம்.  கந்துவட்டி பிரச்சனையிலிருந்து சாலையோர வியாபாரிகளை ஸ்வநிதி திட்டம் பாதுகாத்துள்ளது.

 

நண்பர்களே,

 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். மொத்தமாக பொருட்களை வாங்கச் செல்லும்போது, ​​அதற்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்கள்.

 நண்பர்களே, நான் உங்களுடன் நிற்கிறேன். இது என்னுடைய வாக்குறுதி. நண்பர்களே, உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக இந்த வாக்குறுதியை உங்களுக்கு வழங்குவதற்காக இன்று நான் மும்பை மண்ணுக்கு வந்துள்ளேன். இந்த மக்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பால், நாடு புதிய உயரங்களை எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடுதான் இன்று மீண்டும் உங்களிடம் வந்துள்ளேன். இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக பயனாளிகள், மும்பை மக்கள், மகாராஷ்டிரா மற்றும் மும்பை முழுவதையும் வாழ்த்துகிறேன். மும்பை நகரம் நாட்டின் இதயம். திரு ஷிண்டே-வும் திரு தேவேந்திர ஃபட்னாவிசும் இணைந்து உங்கள் கனவுகளை நனவாக்குவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

 

பாரத் மாதா கி -ஜே! நன்றி

*****

 

SMB / PLM / DL


(Release ID: 1892665) Visitor Counter : 162