தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வன்முறைக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல்
Posted On:
09 JAN 2023 2:38PM by PIB Chennai
விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து கண்காணித்ததையடுத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
தனிநபர்களின் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் படங்கள்/வீடியோக்கள், சுற்றிலும் ரத்தம் சிதறிக் கிடப்பது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசிரியரால் அடிக்கப்படும் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுவது போன்றவற்றை தொலைக்காட்சி அலைவரிசைகள் மங்கலாகக் காட்டாமலும், முன்னெச்சரிக்கை வாசகங்கள் இல்லாமலும், வட்டமிட்டு பல நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைப் செய்திப்படுத்தும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவும் வேதனையளிப்பதாகவும் உள்ளதை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
வயதானவர்கள், நடுத்தர வயதுடையவர்கள், சிறு குழந்தைகள், மற்றும் பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணிகளைக் கொண்ட குடும்பங்களைக் கொண்டவர்கள் பொதுவாகப் பார்க்கும் தளமாக தொலைக்காட்சி உள்ளதால், நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில் ஒளிபரப்பாளர்களிடையே பொறுப்புணர்ச்சியும், கட்டுப்பாடும் வேண்டுமெனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு, எவ்வித மாற்றங்களும் இல்லாமல் ஒளிபரப்பப்படுவதை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுபோன்று சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளின் பட்டியல் கீழ்வருமாறு :
1. 30.12.2022 விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரரின் படங்களையும், வீடியோக்களையும் மங்கலாகக் காட்டாதது.
2. 28.08.2022 பாதிக்கப்பட்டவரின் சடலத்தை ஒருவர் இழுத்துச் செல்வது மற்றும் பாதிக்கப்பட்டவரின் முகத்தை சுற்றிலும் ரத்தம் கொட்டும் காட்சியைக் காட்டியது.
3. 06-07-2022 பீகார் மாநிலம் பாட்னாவில், வகுப்பறையில் 5 வயது சிறுவனை சுயநினைவு இழக்கும் வரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கியதை குழந்தையின் அழுகையுடன் 9 நிமிடங்களுக்கு மேல் காட்டியது.
4. 04-06-2022 பஞ்சாபி பாடகர் ஒருவரின் இறந்த உடலை மங்கலாகக் காட்டாதது.
5. 25-05-2022 அசாமின் சிராங் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை ஒரு நபர் குச்சியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்த செய்தி. அந்த வீடியோவில், அந்த நபர் இரக்கமின்றி சிறுவர்களை தடியால் அடிப்பதைக் காணலாம். சிறுவர்கள் வலியோடு அழும் காட்சி தெளிவாகக் கேட்கும்.
6. 16-05-2022, கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் பெண் வக்கீல் ஒருவர் அவரது பக்கத்து வீட்டுக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சி.
7. 04-05-2022 தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஒரு நபர் தனது சொந்த சகோதரியை வெட்டிக் கொன்றதைக் காட்டியது.
8. 01-05-2022 சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒருவரை மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு ஐந்து பேர் தடிகளால் கொடூரமாகத் தாக்கியது.
9. 12-04-2022 விபத்தில் இறந்த ஐந்து உடல்களை மங்கலாக்காமல் தொடர்ந்து காட்டியது.
10. 11-04-2022 கேரள மாநிலம் கொல்லத்தில் ஒரு நபர் தனது 84 வயது தாயை கொடூரமாகத் தாக்கி, இழுத்துச் சென்ற காட்சியை சுமார் 12 நிமிடங்களுக்கு மங்கலாக்காமல் தொடர்ந்து காட்டியது.
11. 07-04-2022 பெங்களூருவில் முதியவர் ஒருவர் தனது மகனைத் தீயிட்டுக் கொளுத்துவது குறித்த வீடியோ. முதியவர் தீக்குச்சியைக் கொளுத்தி, அதைத் தன் மகன் மீது எறிவதும், அவரது மகன் தீப்பிடித்து எரிவதும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.
12. 22-03-2022 அசாமின் மோரேகான் மாவட்டத்தில் 14 வயது சிறுவனை அடிக்கும் காட்சிகள் மங்கலாக்கப்படாமல் ஒளிபரப்பானது. அதில் அச்சிறுவன் அழுவதையும், கெஞ்சுவதையும் கேட்க முடிந்தது.
இதுபோன்ற ஒளிபரப்புகள் குறித்து கவலையை எழுப்பியுள்ளதோடு, முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளின் பார்வையாளர்கள் தன்மையையும், பொது நலனையும் கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் குற்றம், விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களைக் காட்சிப்படுத்தும்போது விதிகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
***
SM/CR/RJ
(Release ID: 1889787)
Visitor Counter : 280
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada