பிரதமர் அலுவலகம்

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

பிரதமரின் வீட்டு வசதி - நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு கிரக பிரவேச திட்டத்தை தொடங்கி வைத்தார்

" திரிபுர சுந்தரி அன்னையின் ஆசியுடன், திரிபுராவின் வளர்ச்சிப் பயணம் புதிய உச்சத்தை காண்கிறது"

"ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதில் திரிபுரா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது"

"இன்று, தூய்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதில் திரிபுரா குறித்து விவாதிக்கப்படுகிறது"

‘’திரிபுரா வழியாக வடகிழக்கு பகுதி சர்வதேச வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக மாறி வருகிறது’’

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், வடகிழக்கு பிராந்திய கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன"

Posted On: 18 DEC 2022 6:51PM by PIB Chennai

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ்,   பயனாளிகளுக்கான கிரஹ பிரவேஷ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.3400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடையும். சாலை இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அகர்தலா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் அகர்தலா புறவழிச்சாலை (காயர்பூர் - அம்தாலி) NH-08ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 230 கிமீ நீளமுள்ள 32 சாலைகளுக்கும், 540 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள 112 சாலைகளை மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஆனந்த்நகர் மற்றும் அகர்தலா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழா தொடங்கும் வரை ஆவலுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, மேகாலயாவில் தான் அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை அர்ப்பணித்ததால் ஏற்பட்ட சிறிய தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார்.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தூய்மைப் பிரச்சாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாராட்டுக்குரிய பணிகளைப் பாராட்டிய பிரதமர், திரிபுரா மக்கள்தான் இதை ஒரு பொது இயக்கமாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் விளைவாக, இந்தியாவின் தூய்மையான மாநிலமாக திரிபுரா வந்துள்ளது. "திரிபுர சுந்தரி அன்னையின் ஆசீர்வாதத்துடன், திரிபுராவின் வளர்ச்சிப் பயணம் புதிய உயரங்களை காண்கிறது" என்று அவர் கூறினார்.

இணைப்பு, திறன் மேம்பாடு, ஏழைகளுக்கு வீடு  தொடர்பான இன்றைய திட்டங்களுக்காக திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். "திரிபுரா இன்று முதல் பல் மருத்துவக் கல்லூரியைப் பெறுகிறது", என்று கூறிய பிரதமர், திரிபுராவின் இளைஞர்கள் இப்போது மாநிலத்தை விட்டு வெளியேறாமல் மருத்துவர்களாகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார். இன்று, மாநிலத்தைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகள் தங்கள் புதிய உறுதியான இல்லங்களில் கிரஹ பிரவேஷம் செய்கிறார்கள். அந்த வீடுகளின் உரிமையாளர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்று அவர்  தெரிவித்தார். முதன்முறையாக வீட்டு உரிமையாளராக இருக்கும் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு  பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  "ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதில் திரிபுரா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது", என்று கூறிய பிரதமர், திரு மாணிக் சாஹா  மற்றும் அவரது குழுவினர் செய்த பணிகளைப் பாராட்டினார்.  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து தமக்கு கிடைத்த அன்பான வரவேற்பு குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக தாம் கலந்துகொண்ட வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தை நினைவுகூர்ந்த அவர், திரிபுரா உட்பட அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டத்தின்  விவாதங்கள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். 'அஷ்ட லட்சுமி' எனப்படும்  எட்டு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான எட்டு முக்கிய புள்ளிகள் பற்றி அவர் தெரிவித்தார். திரிபுராவின் இரட்டை எஞ்சின் அரசு , மாநிலத்தில் வளர்ச்சி முயற்சிகளை துரிதப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்கள் தேர்தல் மற்றும் வன்முறைச் செயல்களின் போது மட்டுமே பேசப்பட்டன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "இன்று, திரிபுரா தூய்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.  மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து வருவதாகவும், அதன் முடிவுகளை களத்தில் காண்பிப்பதன் மூலம் மாநில அரசு அதை சாத்தியப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். "கடந்த 5 ஆண்டுகளில், திரிபுராவின் பல கிராமங்கள் சாலை இணைப்பைப் பெற்றுள்ளன, மேலும் திரிபுராவின் அனைத்து கிராமங்களையும் சாலைகள் மூலம் இணைக்கும் வேகமான பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன" என்று அவர் கூறினார். இன்று அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள், மாநிலத்தின் சாலை வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், தலைநகரில் போக்குவரத்தையும், வாழ்க்கையையும் எளிதாக்கும் என்று பிரதமர் கூறினார்.

அகர்தலா-அகௌரா ரயில் பாதை மற்றும் இந்தியா-தாய்லாந்து-மியான்மர் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் திறக்கப்படும் புதிய வழிகள் குறித்து தெரிவித்த பிரதமர், "திரிபுரா வழியாக வடகிழக்கு பகுதி சர்வதேச வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக மாறி வருகிறது",என்றார். அகர்தலாவில் உள்ள மஹாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தின் கட்டுமானத்துடன், வடகிழக்கு மாநிலத்தின் முக்கியமான தளவாட மையமாக திரிபுரா உருவாகி வருகிறது. இது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். "திரிபுராவின் இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியால் பல பஞ்சாயத்துகள் இப்போது ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த இரட்டை எஞ்சின் அரசின் முயற்சிகளை விளக்கிய  பிரதமர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு பிராந்திய கிராமங்களில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு  மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் இதுபோன்ற ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், திரிபுராவின் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி கிடைத்துள்ளது”, என்று அவர் கூறினார்.  "கழிவறை, மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்புகள் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற விரிவான பணிகள் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று திரு மோடி கூறினார். இரட்டை எஞ்சின் கொண்ட அரசு மலிவான விலையில் குழாய் எரிவாயுவைக் கொண்டு வரவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீரை வழங்கவும் விரைவான வேகத்தில் செயல்பட்டு வருவதாக அவர்  கூறினார். திரிபுராவில் கடந்த 3 ஆண்டுகளில் 4 லட்சம் புதிய குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின்  மாத்ரி வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் திரிபுராவின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைந்துள்ளனர், இதன் கீழ் சத்தான உணவுக்காக ஒவ்வொரு தாயின் வங்கிக் கணக்கிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று மருத்துவமனைகளில் அதிகமான பிரசவங்கள் நடைபெற்று தாய், சேய் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக  அவர்  தெரிவித்தார். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கான தன்னம்பிக்கை பற்றி குறிப்பிட்ட  பிரதமர், பெண்களின் வேலைவாய்ப்பிற்காக அரசாங்கம் நூற்றுக்கணக்கான கோடி சிறப்புத் தொகுப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், “இரட்டை இயந்திர ஆட்சிக்குப் பிறகு திரிபுராவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 9 மடங்கு அதிகரித்துள்ளது” என்றார்.

"பல தசாப்தங்களாக, திரிபுராவை அதன் முக்கியத்துவத்தை இழந்து, சந்தர்ப்பவாத அரசியலை கடைபிடிக்கும் கட்சிகளால் ஆளப்பட்டு வந்ததால் வளர்ச்சியை இழந்துவிட்டதாக  பிரதமர் குறிப்பிட்டார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என அவர்  தெரிவித்தார். “இந்த மாதிரியான சித்தாந்தம், இந்த மாதிரியான மனநிலை பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எதிர்மறையை எவ்வாறு பரப்புவது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும், எந்த நேர்மறையான நிகழ்ச்சி நிரலும் அவர்களிடம் இல்லை”, என்றார் அவர். இரட்டை எஞ்சின் அரசே உறுதியையும், சாதனைக்கான சாதகமான பாதையையும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிகார அரசியலால் நமது பழங்குடி சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை பட்டியலிட்ட  பிரதமர், பழங்குடி சமூகம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியின்மை குறித்து வருத்தம் தெரிவித்தார். "பாஜக இந்த அரசியலை மாற்றியுள்ளது, அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தின் முதல் தேர்வாக மாறியுள்ளது" என்று பிரதமர் கூறினார், சமீபத்திய குஜராத் தேர்தலை நினைவுகூர்ந்த பிரதமர், 27 ஆண்டுகளுக்குப் பிறகும் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு பழங்குடி சமூகத்தின் பங்களிப்புகளைப் பாராட்டினார். பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 27 இடங்களில் பாஜக 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், பழங்குடியினருக்கென தனி அமைச்சகம் மற்றும் தனி பட்ஜெட்டை முதலில் ஏற்பாடு செய்தது அடல்ஜியின் அரசு என்பதை நினைவு கூர்ந்தார். 21 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பழங்குடியினர் சமூகத்திற்கான பட்ஜெட் இன்று 88 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "2014 ஆம் ஆண்டுக்கு முன் பழங்குடியினர் பகுதிகளில் 100க்கும் குறைவான ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் இருந்தன, ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் திரிபுராவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் தெரிவித்தார். முந்தைய அரசாங்கங்கள் 8-10 வனப் பொருட்களுக்கு மட்டுமே  குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கியது, அதே நேரத்தில் பாஜக அரசு 90 வனப் பொருட்களுக்கு எம்எஸ்பி  தருகிறது என்றும் அவர் தெரவித்தார். "இன்று, பழங்குடியினர் பகுதிகளில் 50,000 க்கும் மேற்பட்ட வன் தன் மையங்கள் உள்ளன, அவை சுமார் 9 லட்சம் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன, அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்" என்று அவர் கூறினார்.

பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்ட பாஜக அரசுதான், பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளான நவம்பர் 15ஆம் தேதியன்று நாடு முழுவதும் பழங்குடியினர் கவுரவ தினத்தை  கொண்டாடத் தொடங்கியது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் 10 பழங்குடியின சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், திரிபுராவில் குடியரசு தலைவர் திருமதி  திரௌபதி முர்மு  சமீபத்தில் மகாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யா அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் பழங்குடியினரின் பங்களிப்பு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த திரிபுரா அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திரிபுராவின் சிறு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க இரட்டை எஞ்சின் அரசின் முயற்சியை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். திரிபுராவில் இருந்து வெளிநாட்டிற்கு வந்த அன்னாசிப்பழத்தை எடுத்துக்காட்டி, "இங்குள்ள உள்ளூர்வாசிகளை உலகமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று திரு மோடி எடுத்துரைத்தார். “இதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் இங்கிருந்து பங்களாதேஷ், ஜெர்மனி மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலையைப் பெறுகிறார்கள். பிரதமர் கிசான் சம்மன் நிதியிலிருந்து திரிபுராவில்  லட்சக்கணக்கான விவசாயிகள் இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். திரிபுராவில் உள்ள அகர் மரத் தொழில்திரிபுராவின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் வருமானத்திற்கான ஆதாரமாக மாறும் என்றார் அவர்.

 மாநிலத்தில் வளர்ச்சியின் இரட்டை இயந்திர அரசால், திரிபுரா இப்போது அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், திரிபுரா மக்களின் திறன் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வளர்ச்சியின் வேகத்தை நாம் விரைவுபடுத்துவோம், இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் பல வாழ்த்துக்கள்  என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர்  மாணிக் சாஹா, ஆளுநர்  திரு சத்யதேவ் நரேன் ஆர்யாதுணை முதலமைச்சர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

அனைவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்வதில் பிரதமர்  குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகிறார்.  பிராந்தியத்தில் இதை உறுதி செய்வதற்கான முக்கிய படிநிலையாக, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ்,   பயனாளிகளுக்கான கிரஹ பிரவேஷ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.3400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடையும்.

சாலை இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அகர்தலா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் அகர்தலா புறவழிச்சாலை (காயர்பூர் - அம்தாலி) NH-08ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 230 கிமீ நீளமுள்ள 32 சாலைகளுக்கும், 540 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள 112 சாலைகளை மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஆனந்த்நகர் மற்றும் அகர்தலா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.

**************

SM/PKV/DL



(Release ID: 1884635) Visitor Counter : 140