பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறந்த ஆளுகை வாரக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
17 DEC 2022 12:22PM by PIB Chennai
அடுத்த 25 ஆண்டுகளின் அமிர்த காலத்தின் போது வளமான மற்றும் தன்னிறைவு இந்தியாவைக் கட்டமைப்பதில் மக்கள் உறுதியோடு இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களின் முயற்சிகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதில் அரசு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வாய்ப்புகளை அதிகரித்து, இடர்பாடுகளைக் களைவது நமது கடமை.
டிசம்பர் 19 முதல் 25 வரை அனுசரிக்கப்படும் இரண்டாவது சிறந்த ஆளுகை வாரத்திற்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும், அனைத்து நிலைகளிலும் நடைமுறைகளை எளிதாக்கவும், ‘குடிமக்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையினால் வழி நடத்தப்பட்டு, நமது அரசு அயராது பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்ப்பு, இணைய வழி சேவைகள், சேவை விநியோக செயலிகள் மற்றும் சிறந்த ஆளுகை நடைமுறை என மக்களுக்கு உகந்த ஏராளமான முன்முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். சேவை விநியோக நடைமுறைகளை சிறந்ததாக மாற்றுவதே நமது தொலைநோக்குப் பார்வை.
ஆளுகையின் தாக்கத்தை அதிகரிப்பது, அதேவேளையில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையில் இருந்தும் அரசாங்கத்தின் இடையீட்டைக் குறைப்பது என்பது எப்போதுமே நமது முயற்சியாக இருந்து வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். தேவையில்லாத சுமார் ஆயிரம் நடைமுறைகளின் நீக்கம், காலம் கடந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது, சிறிய ரகக் குற்றங்களைக் குற்றமற்றதாக அறிவித்தது முதலியவை முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
அரசையும், குடிமக்களையும் இணைக்கும் அபரிமிதமான திறனை தொழில்நுட்பம் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அன்றாட வாழ்வில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை புகுத்துவதிலும் தொழில்நுட்பம் சக்தி வாய்ந்த சாதனமாக செயல்படுகிறது. ஏராளமான கொள்கை இடையீடுகளினால் குடிமக்களின் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நாம் வலுவாக முன்னேறுகிறோம்.
‘கிராமங்களை நோக்கி நிர்வாகம்' என்ற பிரச்சாரத்தை இந்த ஆண்டும் தொடர்வது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், சிறந்த ஆளுகை வாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
புதுதில்லியின் விக்யான் பவனில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள துவக்க விழாவில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு, சிறந்த ஆளுகை வாரக் கொண்டாட்டங்களையும் கிராமங்களை நோக்கி நிர்வாகம் 2022 என்ற பிரச்சாரத்தையும் தொடங்கி வைப்பார்.
**************
AP/RB/DL
(Release ID: 1884384)
Visitor Counter : 180