உள்துறை அமைச்சகம்

புதுதில்லியில் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான சர்வதேச நிலைபாடு கருப்பொருளின் அடிப்படையில் “தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது“ என்ற அமைச்சர்கள் மட்டத்திலான மூன்றாவது கருத்தரங்கத்தின் 1-வது அமர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்

Posted On: 18 NOV 2022 12:24PM by PIB Chennai

புதுதில்லியில் தீவிரவாதம் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிபதற்கு எதிரான சர்வதேச நிலைபாடு என்ற கருப்பொருளின் அடிப்படையிலான “தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது” என்ற அமைச்சர்கள் மட்டத்திலான மூன்றாவது கருத்தரங்கத்தின் 1-வது அமர்வுக்கு இன்று (18.11.2022) மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமைவகித்தார்.   கருத்தரங்கில் உரையாற்றிய திரு அமித் ஷா, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தீவிரவாதம் மோசமான அச்சுறுத்தல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார். இருப்பினும், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் என்பது அதைவிட ஆபத்தான அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார். ஏனெனில், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல், அதனை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்யும் என்றும் திரு அமித் ஷா  தெரிவித்தார்.

தீவிரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், அப்பாவி மக்களின் இன்னுயிரைப் பறிக்கும் தீவிரவாதத் தாக்குதலை நியாயப்படுத்துவதில் அர்த்தமில்லை என்று இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் இந்த தீயசக்தியோடு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்ததை  நினைவு கூர்ந்த திரு அமித் ஷா,  இந்திய பாதுகாப்புப் படையினரும், எல்லைவாழ் குடிமக்களும் இணைந்து இந்த மோசமான தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டதாகவும் கூறினார். தொழில்நுட்ப புரட்சியைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தங்களது இலக்குகளை குறிவைத்து தாக்குதலை அரங்கேற்றி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட திரு அமித் ஷா, தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை  கையாள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஏ கே 47 ரக துப்பாக்கியிலிருந்து தற்போதைய டிஜிட்டல் மயமான பணப்பரிமாற்றம்  வரை தீவிரவாதம் வளர்ந்திருப்பது குறித்து வேதனை  தெரிவித்த  திரு அமித் ஷா, இதனை முறியடிக்க ஏதுவான செயல்திட்டத்தை உலக நாடுகள் இணைந்து உருவாக்க வேண்டியது அவசியம் என்றார். அதே நேரத்தில் தீவிரவாதம், ஒரு மதத்துடனோ, தேசத்துடனோ, குறிப்பிட்ட சமூகத்தினருடனோ தொடர்பு கொண்டது என முத்திரைக் குத்தாமல், அதனை அச்சுறுத்தல் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே நோக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

தீவிரவாதிகள் தற்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடைய முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக புதிய வழிகளில் தாக்குதல் நடத்துதல், இளைஞர்களை கவர்தல் மற்றும் நிதி திரட்டுதல் போன்றவற்றில் கை தேர்ந்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். அதே நேரத்தில் தீவிரவாதத்தை பரப்புவதிலும், தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்வதிலும் தீவிரவாதிகள் டார்க் நெட் எனும் முறையை கையாண்டு வருவதையும் திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். க்ரிப்டோ கரன்சி போன்ற  புதிய தொழில்நுட்ப நிதிப் பரிமாற்றம் அண்மை காலமாக அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.  தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது பெரிய அளவில் நடைபெறுவது மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், இதனை ஒழிக்கும் முயற்சியில் இந்தியா வெற்றி கண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுவதை எதிர்கொள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு, தீவிரமாக கண்காணித்தல், உளவுத்துறை தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நடைமுறை, விசாரணையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்சங்கள் தூண்களாக அமைந்ததாகவும் கூறினார். சட்டவிரோத பாதுகாப்பு நடவடிக்கை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டது, தேசிய விசாரணையின் முகமையின் நடவடிக்கைகளை பலப்படுத்தியது போன்றவற்றின் மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா கூறினார்.

பிரதமர்  திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த கருத்தரங்கில்  தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்வதற்கு எதிராக  பன்முக கண்ணோட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என நம்புவதாகவும் எதிர்கால சவால்களை முறியடிக்க சிறந்த தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் திரு அமித் ஷா  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876948

------

MSV/ES/KPG/KRS



(Release ID: 1877028) Visitor Counter : 285